நகிப் அல் மஹ்ஃபூஸ் - அரபு இலக்கிய உலகின் மனசாட்சி
“மதத்தை உடற்பயிற்சிக் கூடமாகக் கடவுள் கருதவில்லை.” அரபு இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான நகிப் அல் மஹ்ஃபூஸின் வாசகம் இது. நோபல் பரிசு பெற்றதன் மூலம், அரபு இலக்கியத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்ற மஹ்ஃபூஸ், நவீன உலக இலக்கியத்தின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவர்.
பிறப்பும் கல்வியும்
வரலாற்றுப் பாரம்பரியமும், அறிவு வளமும் நிரம்பிய எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 1911-ல் மதப்பற்று மிக்க நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் நகிப் மஹ்ஃபூஸ். பின்னர், இவருடைய குடும்பம் கமாலியா பகுதிக்கு நகர்ந்தது. அங்குதான் இவருடைய புகழ்பெற்ற நாவலான ‘மிடாக் அலே’ வெளியானது. தன் 17-வது வயதில் எழுதத் தொடங்கிய மஹ்ஃபூஸ், வாழ்நாள் முழுதும் எழுத்துலகில் தொடர்ச்சியாக இயங்கினார். 1919-ம் ஆண்டு நடந்த எகிப்துப் புரட்சியால் தாக்கமுற்ற மஹ்ஃபூஸ், அதன் நவீனத்துவ மற்றும் தேசியவாதக் கருத்தால் ஈர்க்கப்பட்டார். கூடவே, செவ்வியல் அரபு இலக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்வதிலும் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதன் வழியாக நெடிய பயணத்தைத் தொடங்கினார். தன் 10-வது வயதிலேயே ஹஃபிஸ் நஜிப் என்ற அரபு எழுத்தாளரின் துப்பறியும் நாவல்களைத் தேடிப் படித்தவர் அவர். மேலும், கல்லூரிப் பருவத்தில் எகிப்திய எழுத்தாளரான ஸலமா மூசாவுடனான அறிமுகம், மஹ்ஃபூஸின் பார்வையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அவரின் தொடர்ச்சியான எழுத்தார்வம் அவருக்கு மேற்கத்திய இலக்கியப் பரிச்சயத்தையும் அளித்தது. மேற்கத்திய எழுத்தாளர்களான பிளொபர், ஷோலா, ஆல்பெர் காம்யூ, தஸ்தாவ்ஸ்கி போன்றோரை விரும்பிப் படித்தார். அரபு எழுத்தாளர்களான தாஹா உசேன், உசேன் ஹைகல் மற்றும் இப்ராஹிம் அல் மசினி போன்றோரின் சிறுகதைகளுடன் தன்னை நகர்த்திக்கொண்டார். அவரின் பிற்காலச் சிறுகதைகளில் இவர்களுடைய தாக்கத்தைக் காணலாம். எகிப்திய இலக்கிய உலகில் யதார்த்தம் சார்ந்த ஒரு உலகத்தை, தான் உருவாக்கிக்கொள்வதில் மஹ்ஃபூஸ் மேற்கண்ட அரபு எழுத்தாளர்களை முன்னோடியாகக் கொண்டார்.
இலக்கியப் பயணம்
உயர்கல்வியை கெய்ரோ பல்கலைக் கழகத்தில் மஹ்ஃபூஸ் கற்றார். தத்துவம்மீது அதிக ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். இதன் விளைவாகப் பல அரபு பத்திரிகை களிலும் தத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதினார். இதனால் அவருக்குப் பெருமளவில் வாசகர்கள் கிடைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக, எகிப்தின் நவீனத்துவச் சிந்தனையாளரான அப்பாஸ் அல் அக்காதின் சிந்தனைகள் மஹ்ஃபூஸை வெகுவாகப் பாதித்தன. அவருடைய கோட்பாடுகளைத் தொடர்ந்து உள்வாங்கிக்கொண்டார்.
அரபு இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதே அவரின் வாழ் நாள் லட்சியம். இதன் காரணமாக, மேற்கின் இலக்கியப் போக்குகளை ஆழ்ந்து அவதானித்தார். 1938-ல் அவரது முதல் நாவல் ‘விஸ்பர் ஆஃப் மேட்னஸ்’ வெளியானது. இது அவருடைய இளமைக்கால வாழ்க்கையின் யதார்த்தப் பிரதிபலிப்பாக இருந்தது. அடுத்த நாவல் ‘குஃபுஸ் விஸ்டம்’ என்ற பெயரில் வெளியானது. மேற்கண்ட இரண்டு நாவல்களும் 30-களில் அரபுலகில் குறிப்பிடத் தக்க படைப்பாளியாக மஹ்ஃபூஸை அடை யாளம் காட்டின. மஹ்ஃபூஸ் தன் வாழ்நாளில் சுமார் 10 ஆண்டுகளை கெய்ரோவின் கமாலியாவில் கழித்தார். அவருடைய நாவல்கள் குறிப்பிடும் பல மறைவான இடங்கள், காதலிகளுடனான சந்திப்புகள், உறவாடல்கள் ஆகியவற்றை உணர்த்தும் பன்முகத் தளமாக கமாலியா இருந்தது. நாவலின் கதை என்பதைவிட, நாவல் உருவாகும் களங்கள் முக்கியமானவை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
புராதன, இடைக்கால உலகின் பெரும் வெற்றியாளர்களாக இருந்த அலெக் சாண்டர், சீசர், நெப்போலியன் போன்றோரின் செயல்பாடுகள், அவர்களுடைய வெற்றிக்கான ரகசியங்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதன் மூலம், தன் புனைவு எழுத்துக்கான மதிப்பீட்டையும் போக்கையும் சிறந்த முறையில் தீர்மானிக்க முடியும் என்று மஹ்ஃபூஸ் நம்பினார். அந்த நம்பிக்கை ஒருவகையில் அவரின் பிந்தைய படைப்புகளுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. 1939-க்கும் 1944-க்கும் இடையே மஹ்ஃபூஸ் மூன்று நாவல்களை எழுதினார். அவற்றில் கெய்ரோ ட்ரிலாஜி, மிடாக் அலே ஆகிய நாவல்கள் மிக முக்கியமானவை. அரபுலகில் அவை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, அந்தப் படைப்புகள் விற்பனையில் உச்சத்தை எட்டியது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தன. கெய்ரோ ட்ரிலாஜி, எகிப்தை மூன்று தலைமுறைகளாக ஆதிக்கம் செலுத்திய சையத் அஹ்மத் அப்துல் ஹவாத் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றிய கதையாடலாகும். மிகுதியான சமூக, அரசியல் விவரணைகளோடு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் அந்தரங்க உறவு, அந்தக் குடும்ப ஆண்களின் தொடர்பாடல் முறைகள் போன்றவற்றைக் கதைப்படுத்துகிறது நாவல்.
படைப்புகள்
நோபல் பரிசு மூலம் மஹ்ஃபூஸை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிய ‘கெய்ரோ ட்ரிலாஜி’க்குப் பிறகு, அவரின் குறிப்பிடத் தக்க நாவல் ‘மிடாக் அலே’. மஹ்ஃபூஸ் வாழ்ந்த கமாலியா நகரில் மிடாக் என்ற குறுக்குச் சந்தை நோக்கிய கதை உலகமே அந்த நாவலின் கரு. அதன் தெருக்களின் இயக்கத்தோடும் வாழ்க்கையோடும் இந்த நாவல் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது. கலைநயமும் கதையாடலும் கூடிவந்த, மிக நேர்த்தியான படைப்பு அது.
மஹ்ஃபூஸ் தன் நாவல்களில் மற்றவர்களிட மிருந்து மாறுபட்ட ஒரு மொழி நடையைக் கையாண்டார். அரபு மொழியின் நவீன நுட்பங்களைச் சாமர்த்தியமான வழிகளில் கைக்கொண்டார். குழந்தைகள்பற்றி அவர் எழுதிய ‘எபிக் ஆஃப் தி ஹராஃபிஷ்’ நாவல் கெய்ரோவின் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் உலகை ஆழமாகவும் விரிவாகவும் சித்திரிக்கிறது.
வாழ்வின் இறுதிக் கட்டம்
மஹ்ஃபூஸ் தன் வாழ்நாள் முழுவதும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்தார். படைப்பாளி யின் சுதந்திரம் அதன் ஆரம்ப நிலையிலேயே அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். மஹ்ஃபூஸ், ஒருவரின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சமூகத்தின் எதிர்வினை ஆகிய இரண்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உடையவராக இருந்ததால், மத அடிப்படை வாதிகளின் ‘மரணப் பட்டிய’லில் அவர் இருந்தார். இதன் தொடர்ச்சியாக, 2005ல் எகிப்தின் வஹ்ஹாபிய அமைப்பைச் சார்ந்த ஒருவரால் மஹ்ஃபூஸ் கத்தியால் குத்தப்பட்டார். இதன் பின் அவருக்கு முழுநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், உதவியாளரின் துணையோடு எழுதினார்.
தன் வாழ்நாளில் 34 நாவல்களையும், 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 10-க்கும் மேற்பட்ட திரைக்கதைகளையும், நாடகங்களையும் எழுதியிருக்கும் மஹ்ஃபூஸ், நவீன அரபு இலக்கியத்தின் தந்தை என அறியப்படுகிறார். தன் தொடர்ச்சியான எழுத்துக்களால் எகிப்தை அலங்கரித்த மஹ்ஃபூஸ் 2006, ஆகஸ்டில் மரணமடைந்தார். அவருடைய படைப்புகள் தற்போது பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. நவீன அரபிலக்கியத்தின் வளமான ஒரு மரபை மஹ்ஃபூஸ் விட்டுச்சென்றிருக்கிறார். பெரும் வீச்சுடைய இலக்கியத்துக்காகவும் அடிப்படைவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்த துணிவுக்காகவும் மஹ்ஃபூஸ் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.
No comments:
Post a Comment