Friday, 20 December 2013

முதல் சூப்பார்சானிக் போர் விமானம் - "தேஜஸ்'

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட "தேஜாஸ்மார்க் - 1', என்ற முதல் சூப்பர் சானிக் போர் விமானத்தின், 2வதுமுதல் கட்ட சோதனை (ஐ.ஓ.சி.,), இன்று (டிச., 20) பெங்களூருவில் நடக்கிறது. இது ஏற்கனவே இந்திய விமானப்படையில் இருந்த "எம்.ஐ.ஜி., - 21 பிசன்' சூப்பர் சானிக் போர் விமானங்களுக்கு பதிலாக, உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒற்றை இன்ஜின் கொண்டது. வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தாங்கிச் செல்வது உள்ளிட்ட பல பணிகளை செய்யும், போர் விமானமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 2014 ஜூனில் விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும் தேஜஸ் மார்க் - ஐஐ' விமானம் இதை விட சக்தி வாய்ந்த இன்ஜின், ரேடார் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 2018ல் விமானப்படையில் சேர்க்கப்படும். கடற்படையிலும் இந்த போர் விமானம் சேர்க்கப்பட உள்ளது. முன்னதாக 1983ல் எல்.சி.ஏ., (லைட் கம்போர்ட் ஏர்கிராப்ட்) விமானங்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது. 2003 மார்ச்சில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், இந்த விமானங்களுக்கு "தேஜஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது.

அறிமுகம்

* எச்.ஏ.எல்., தற்போது, ஆண்டுக்கு 6 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கிறது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 16 முதல் 20 விமானங்களை தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

* இதன் படி, 20 விமானங்கள் முதல் தேஜஸ் போர் விமானப்படை, வரும் 2016 - 17ல் தமிழகத்தில் சமீபத்தில் துவக்கப்பட்ட தஞ்சை அருகே சூலூர் விமானப்படை பயிற்சி மையத்தில் நிறுத்தப்படும்.

* "தேஜஸ் மார்க் - ஐஐ' விமானப்படை, 2021 - 22ல் தான் தயார் நிலைக்கு வரும்.

தரம்

தேஜஸ் விமானம், எம்.ஐ.ஜி., - 21 விமானத்தை விட, ஏவுகனைகள் மற்றும் ஆயுதங்கள் தாங்கி செல்வது உள்ளிட்ட பல வழிகளிலும் மேம்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த செலவு

* துவக்கத்தில் 575 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இதன் மதிப்பீடு ( தேஜஸ் மார்க் ஐ, தேஜஸ் மார்க் - ஐஐ தயாரிப்பு, விமானப்படை மற்றும் கடற்படை 2க்கும் சேர்த்து, இது தவிர காவேரி இன்ஜின் தோல்வியில் முடிந்த செலவும் சேர்த்து) 17,269 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது.

மொத்த செலவு

* "தேஜஸ்மார்க் - ஐ'ஒவ்வொரு தேஜஸ் விமானத்துக்கும் 210 முதல் 250 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மொத்தம் 160 விமானங்கள் (120 விமானப்படைக்கு, 40 கடற்படைக்கு) தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி திட்டமிட்ட 17,269 கோடி ரூபாயிலிருந்து மேலும் 35 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கிறது.

* "தேஜஸ் மார்க் -ஐ' விமானத்தில் "அமெரிக்கன் ஜிஇ - 404' என்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. (முன்னதாக இதில் "காவேரி' இன்ஜின் பொருத்தப்பட இருந்தது. அது தோல்வியில் முடிந்தது).

* "தேஜஸ் மார்க் - ஐஐ' விமானத்தில், சக்தி வாய்ந்த "ஜிஇ எப் - 414' என்ற இன்ஜின் பொருத்தப்படுகிறது.

சோதனை நிலைகள்

* ஐ.ஓ.சி (முதற்கட்ட சோதனை) : அனைத்து காலநிலைகளிலும், பறப்பதற்கு ஏற்றதாக இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.

* எப்.ஓ.சி (இறுதிக்கட்ட சோதனை) : அனைத்து விதமான ஆயுதங்களை (வெடிகுண்டுகள், ஏவுகணைகள், துப்பாக்கிகள்) தாங்கி செல்கிறதா எனவும், ஆகாயம் டூ ஆகாயம், ஆகாயம் டூ நிலம், ஆகாயத்திலேயே எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சோதனைகள், இறுதிக்கட்ட சோதனையில் நடக்கிறது.

* முதல் 20 தேஜஸ் விமானங்கள் முதல் கட்ட சோதனையிலும், அடுத்த 20 தேஜஸ் விமானங்கள், இறுதிக்கட்ட சோதனைக்கும் விடப்பட உள்ளது.

* அடுத்த 80 , "தேஜஸ் மார்க் - ஐஐ' விமானங்களாக தயாரிக்கப்படுகிறது.

"தேஜஸ் மார்க் - ஐ' தொழில்நுட்ப அம்சங்கள்

இன்ஜின் வகை : ஒற்றைஇன்ஜின் கொண்டது.

நீளம்: 13.2 மீட்டர் (43 அடி; 4 இன்ச்)

இறக்கை அகலம்: 8.2 மீட்டர் (26 அடி; 11 இன்ச்)

உயரம்: 4.4 மீட்டர் (14 அடி; 9 இன்ச்)

வெற்று எடை: 6500 கிலோ

ஆயுதங்களுடன் எடை: 9500 கிலோ

பறக்கும்போது அதிகபட்ச எடை: 13300 கிலோ

எரிபொருள் அளவு: 3000 லிட்டர்

அதிகபட்ச வேகம்: மணிக்கு 1,920 கி.மீ.,

புறப்படும் தூரம்: 1700 மீட்டர்

இறங்கும் தூரம்: 1300 மீட்டர்

No comments:

Post a Comment