2013-ம் ஆண்டில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான துறை என்றால் அது நிலக்கரி சுரங்கத்துறைதான். நாடாளுமன்றத்தை உலுக்கிய தோடு பிரதமரையே ராஜிநாமா செய்யக் கோரும் அளவுக்கு நிலக்கரி சுரங்க பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது.
இவற்றுக்கெல்லாம் மேலாக முக்கியமான கோப்புகள் காணாமல் போனதாக அறிவித்தது, தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது ஆகியன மிக முக்கிய திருப்பங்களாக அமைந்தன. மேலும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு நிலக்கரி சப்ளை செய்வதில் பாரபட்சமாக செயல்பட்டது உள்ளிட்ட பிரச்னைகளும் இத்துறையை வெகுவாகப் பாதித்தது.
சிஏஜி தனது அறிக்கையில் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் விடாததால் அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறியிருந்தது. 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையான காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு தார்மிக பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும்படி வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முக்கிய ஆவணங்களில் சில காணாமல் போனதாக நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டார். இது குறித்து காலக்கெடுவுடன் இந்த வழக்கை முடிப்பதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரித்துறைச் செயலர் பி.சி. பராக் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
பிர்லா மீதான குற்றச்சாட்டு குறித்து தொழிலதிபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல சிபிஐ குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று பராக் கூறினார். சுரங்க ஒதுக்கீட்டில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்தே இந்த குற்றச்சாட்டை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியது. 11 நிலக்கரி சுரங்க பகுதிகளை அரசு மறு ஏலம் விட்டது.
இத்துறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் தங்களுக்கு பாறாங்கற்ளையும், தரமற்ற நிலக்கரியையும் சப்ளை செய்வதாக அரசுத்துறை நிறுவனமான என்டிபிசி, கோல் இந்தியா நிறுவனம் மீது குற்றம் சாட்டியது. இதையடுத்து என்டிபிசி-க்கு நிலக்கரி சப்ளையை நிறுத்தியது கோல் இந்தியா. நிலைமை விபரீதமாகவே, அரசு தலையிட்டு இரு நிறுவனங்களிடையிலான பிரச்னையைத் தீர்த்தது.
இதையடுத்து அக்டோபர் மாதத்தில் கோல் இந்தியா நிறுவனத்திடம் என்டிபிசி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி இரு நிறுவனங்களுக்கும் தொடர்பில்லாத ஒரு நடுநிலை நிறுவனம் சப்ளை செய்யப்படும் நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்து அளிக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டடது.
பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட போதிலும் இறுதியாக நிலக்கரி ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை அரசு கொண்டுவந்தது. நிலக்கரி உற்பத்தி குறைவு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை இந்த ஆணையம் கவனித்துக் கொள்ளும்.
நிலக்கரி சுரங்க ஏல நடைமுறை, உற்பத்தி அடிப்படையிலான பணம் செலுத்துவது, விற்பனை விலை ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கான வழிகாட்டுதலை அரசு உருவாக்கியுள்ளது. சுரங்க ஏலம் நடைபெற்றதும் கடந்த ஆண்டுதான். கடந்த ஆண்டு 17 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. இவை அனைத்தும் மின்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டன.
No comments:
Post a Comment