Tuesday, 31 December 2013

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.அமலோற்பவநாதன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான தலைமை அலுவலகம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்
மூலம் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், கண்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்படுகிறது.
ஹிதேந்திரன் என்ற மாணவன் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மாணவனின் சிறுநீரகம், கண்கள், இதயம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர். அதன்பின், தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்தது.
தமிழகத்தில் 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் இதுவரை மூளைச்சாவு அடைந்த 423 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 67 இதயம், 30 நுரையீரல், 385 கல்லீரல், 777 சிறுநீரகம், 436 இதய வால்வு, 646 கண்கள், ஒருவரின் தோல் என மொத்தம் 2,342 உடல் உறுப்புகள் பெறப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.அமலோற்பவநாதன் கூறியதாவது:
இந்தியாவிலேயே மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 77 பேரின் உடல் உறுப்புகளும், 2012-ம் ஆண்டில் 83 பேரின் உடல் உறுப்புகளும் தானம் பெறப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை மூளைச்சாவு அடைந்த 129 பேரிடம் இருந்து 16 இதயம், 20 நுரையீரல், 117 கல்லீரல், 232 சிறுநீரகம், 100 இதய வால்வுகள், 100 கண்கள் என மொத்தம் 665 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உடல் உறுப்புகள் தானம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment