உலகில் உள்ள மற்ற சமுதாயங்களைப் போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக இந்தச் சமுதாயத்தை ஆக்கும் தொண்டே தன் பணி என்று சுருக்கமாக வரையறுத்தார் பெரியார். ஆனால், அவர் மேற்கொண்ட பணி அத்தனை எளிதானதா?
பெரியார் ஏன் சாதிகளை அழிக்க வேண்டும் என்றார்? மதங்களை ஒழிக்க மறுப்புக்கொள்கையின் அடிப்படை என்ன?
1901-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை படம் பிடிக்கும் உண்மையான இந்தியாவின் முகம் இது: “இந்தியாவில் ஒரு மனிதனின் பெயரை, உணவை, உடையை, இருப்பிடத்தை, வேலையை, சமூக அந்தஸ்தை, வாழ்க்கையை சாதியே தீர்மானிக்கிறது.”
அன்றைய நிலை அப்படித்தான். காங்கிரஸ் கட்சி மாநாடுகளிலேயே ‘பிராமணர்களுக்குத் தனிச் சாப்பாடு, தனி இடம் உண்டு’என்ற விளம்பரங்கள் வெளிவந்த நாட்கள் அவை. 1901 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் வர்ண தர்மத்தின் அடிப்படையில் தீண்டாமையைப் பின்பற்றியதை காந்தியே தனது சுயசரிதையில் வேதனையோடு குறிப்பிடுகிறார்: “தமிழர்களின் சமையல் கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்துக்குத் தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்துவிட்டால் தோஷம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். இது வர்ண தர்மத்தின் சீர்கேடாகவே எனக்குத் தோன்றிற்று”.
இந்த ‘ஒதுக்கிவைத்தல்’ ஏனைய சமூகங்களிடமும் பரவிய சமூகப் பின்னணியில்தான், சுயமரியாதையை மீட்டெடுக்கக் குரல்கொடுத்தார் பெரியார்.
எதிர்நீச்சல் வாழ்க்கை
பெரியாரின் பொது வாழ்க்கை முழுவதுமே எதிர்நீச்சலிலேயே தொடங்கி எதிர்நீச்சலிலேயே தொடர்ந்ததுதான். காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரஸுக்குள் இழுத்தன. ஐந்து ஆண்டுகள் அவர் காங்கிரஸில் இருந்தார். இரண்டு முறை மாநிலத் தலைவர், இரண்டு முறை மாநிலச் செயலாளர்.
ஆனால், தலைவர், செயலாளர் பதவிகளில் அவர் திருப்தி அடைந்து விடவில்லை. 79 கௌரவப் பதவிகளை உதறிவிட்டு காங்கிரஸில் சேர்ந்த அவர், தன் கட்சி நடத்திய சேரன்மாதவி குரு குலத்திலேயே இனரீதியாகக் குழந்தைகள் இடையே பாகுபாடு காட்டப்பட்டபோது கொந்தளித்தார். அனைத்துப் பிரிவு மக்களையும் சமமாக நடத்தும் - கல்வி, வேலைவாய்ப்பைப் பகிர்ந்தளிக்கும் - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை முன்னிறுத்தினார்.
காங்கிரஸ் அதை ஏற்க வலியுறுத்தினார். அவருடைய சமவாய்ப்புக் கொள்கை ஏற்கப்படாதபோது, காங்கிரஸிலிருந்தும் பதவிகளை உதறிவிட்டு வெளியேறினார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் சரி, காங்கிரஸில் இருந்த போதே தொடங்கிய ‘குடிஅரசு’ பத்திரி கையும் சரி, கடும் எதிர்ப்புகளின் ஊடாகவே பயணித்தன.
அசாதாரண உழைப்பு
இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள். பெரியார் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள். பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு. பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700. உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம். அத்தனை சொற்பொழிவுகளையும் பதிவுசெய்து ஒலிபரப்பினால், 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
திராவிட இயக்கம் செய்தது என்ன?
தமிழகத்தில் மதப் பகை உணர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, பெண் கல்வியை மக்கள் ஏற்கச் செய்தது, நாடாளுமன்றம் போகாமலேயே முதல் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு வழிவகுத்தது, இடஒதுக்கீட்டுக் கொள்கையை உறுதிசெய்தது, பகுத்தறிவு இயக்கத்தைப் பரவலாக்கியது என்று பெரியார் இயக்கத்தின் பணிகளை எவ்வளவோ பட்டியல் போட முடியும்.
பெரியாரின் திராவிடர் இயக்கம் வழி வந்ததாகக் கூறும் திராவிட அரசியல் கட்சிகள், பெரியாரின் அடிப்படை லட்சியத்திலிருந்து மாறுபட்டவை. பெரியாரின் இடஒதுக்கீடு கொள்கையைத் தவிர அவரது பகுத்தறிவு, பெண்ணுரிமை, மத எதிர்ப்புக் கொள்கைகளிலிருந்து இந்தக் கட்சிகள் விலகியே நிற்கின்றன. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு இன்னும் எவ்வளவோ செய்திருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனாலும், இந்தியாவில் ஒப்பீட்டளவில், கல்வி, மருத்துவம், சமூகநலத் திட்டங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலமாக நிற்கிறது. காரணம், பெரியாரும் அவர் முன்னெடுத்த இயக்கமும்.
உயர் மாண்புகள்
எவ்வளவோ உயர்ந்த மரபுகளை விட்டுச்சென்றிருக்கிறார் பெரியார். பொது வாழ்க்கைக்கு வந்தவர்களுக்கு ஆடம்பரம், பகட்டு கூடாது என்பதில் அவர் காட்டிய உறுதி ஓர் உதாரணம். அவருடைய தள்ளாமையைப் பொறுக்காமல் தொண்டர்கள் வழங்கிய பெட்ரோல் வேனைக்கூட - பெட்ரோல் விலை கூடுதல் என்பதால் - பயன்படுத்த விரும்பவில்லை. பெரியார் அதில் டீசல் என்ஜின் பொருத்தி டீசல் வேனாக மாற்றினார். (விரைவில் அது பழுதாக, பிறகு தொடர்ந்து காரில் பயணிக்க நேர்ந்ததே அவரது மரணத்தை விரைவுபடுத்தக் காரணமாகிவிட்டது.) பொதுமக்கள் தரும் நிதியை நாணயமாக, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கக் கூடாது; குறித்த நேரத்தில் சென்றுவிட வேண்டும் என்பதெல்லாம் அவர் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட நெறிகள்!
தனிமைப்படுத்தும் சதி
தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்று எப்போதுமே சொல்லி வந்திருக்கிறார் பெரியார். அடிக்கடி அவரே தன்னைச் சுயமதிப்பீடு செய்துகொண்டு அதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஆனால், எந்த மக்களின் உரிமைகளுக்காகப் பேசினாரோ, போராடினாரோ, அவர்களிடமிருந்தே பெரியாரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் இப்போது வேகம் எடுக்கின்றன.
காலம்காலமாகப் பழமையில் ஊறிப்போன மக்களை விழிப்படையச் செய்வதற்குக் கடும் வைத்திய முறையே தேவைப்படுகிறது என்று கூறிய பெரியார், அந்த நோக்கத்திலேயேதான் பேசினார், எழுதினார். தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நோக்கி, பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு நிலைப்பாடுகளைப் பெரியார் எடுத்துள்ளார். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் மற்றவர்கள் பாராட்டுக்காகவோ திருப்திக்காகவோ, எந்த ஒரு கருத்தையும் முன்வைக்காத தலைவர் என்பதுதான் அவரது தனித்துவம்.
எந்தத் தேவைக்காக, எந்தச் சூழலில் அவர் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அவர் முன்வைத்த கருத்துகளில் தமக்குத் தேவையானதை மட்டும் அடிக்கோடிட்டு எடுத்துக்கொண்டு, பெரியாரை அணுகுவதும் விமரிசிப்பதும் யோக்கியமான அணுகுமுறை அல்ல.
மனித சமத்துவத்துக்கான பணி
பெரியார் எதிர்ப்பாளர்கள், கடுமையாக விமர்சிக்கும் அவரது கடவுள் மறுப்புக் கொள்கையேகூட கடவுள் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ‘மனித சமத்துவம்’என்கிற அடிப்படையிலிருந்தே உருவானது.
“சாதியும் ஆச்சாரங்களும் மதம் - கடவுள் எனும் மரத்தைச் சுற்றிக்கொண்டிருப்பதால், சாதியை மரத்திலிருந்து பிரித்தெடுக்க முயலுகிறேன். அது முடியாதபோது மரத்தையும் சேர்த்தே எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது” என்று கூறிய பெரியார், “இப்படி எல்லாவற்றையும் நாம் சேர்த்து எதிர்க்கும்போது, உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அழியாது” என்றார்.
உண்மையில் பெரியார், கடவுள் நம்பிக்கையுள்ள பெரும்பான்மைச் சமூகத்துக்காகவே இறுதிவரை உழைத்தார்.
இலக்கு நீள்கிறது
பெரியார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால், பெரியார் எட்ட விரும்பிய இலக்கை அடைவதற்கு வெகுதூரம் கடக்க வேண்டியுள்ளது. அதுவும் இந்த உலகமயமாக்கல் சூழலில், அவரது சிந்தனைகளை மேலும் வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. பெரியார் முடிந்துவிட்ட சகாப்தம் அல்ல; தொடரப்பட வேண்டிய பயணம்!
- விடுதலை ராஜேந்திரன், பெரியாரிய எழுத்தாளர், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலர்.
No comments:
Post a Comment