Wednesday, 18 December 2013

நிதிக் குழு சவால்கள்

எல்லாக் கூட்டாட்சி நாடுகளிலும் மத்திய அரசுகள் தன்னிச்சையாகச் செயல்படக்கூடியவையாக இருக்கின்றன. மாநில அரசுகள் அரசியல் சட்டப்படி தன்னிச்சை அதிகாரங்கள் பெற்றிருந்தாலும், பல்வேறு அம்சங்களில் மத்திய அரசைச் சார்ந்திருக்கக் கூடியவையாக உள்ளன. நிதிபெறுவதில் மாநிலங்கள், மத்திய அரசைச் சார்ந்திருப்பது வெளிப்படையாக உள்ளது.

மாநிலங்கள் நிதிபெறக் காரணம்

பொதுவாக, மத்திய அரசிடம் அதிக வருவாய் தரக்கூடிய வரி இனங்களான - கம்பெனிகள் (மீதான) வரி, வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி போன்றவையும் பல சிறிய வரி இனங்களும், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. ஆனால், மத்திய அரசுக்கு இருக்கும் பொது செலவுப் பொறுப்புக்கள் குறைவாகவே உள்ளன.

மக்களின் அருகில் உள்ள மாநில அரசுகள் குறைவான வரி ஆதாரங்களைப் பெற்றுள்ளன. ‘வாட்' என்ற மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி, சாராயத்தின் மீதான கலால் வரி, சொத்து மாற்றத்தின் மீதான முத்திரைத் தாள் வரி, வாகன வரி என்ற சில வரி வருவாய்களே உள்ளன. மாநில அரசுகளுக்கு இருக்கும் பொதுச் செலவுப் பொறுப்புக்கள் அதிகம். இந்தச் செலவுகளுக்கு ஈடான வருவாய் இல்லாததினால், மத்திய அரசு தரும் மானிய வருவாயைப் பெறவேண்டியுள்ளது.

நிதி பெறும் வழிகள்

மத்திய அரசிடமிருந்து மூன்று வழிகளில் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, திட்டக்குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மத்திய அமைச்சகமும் தன்னிச்சையாகச் சில நிதிகளை வழங்குவது அந்த மூன்று வழிகளாகும். இதில் மிக முக்கியமானது நிதிக் குழுவின் பரிந்துரைகள்.

நிதிக் குழு

நடுநிலையோடு நிதிப்பகிர்வு இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் சட்டம் 280-வது பிரிவின்படி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நிதிக் குழு மத்திய அரசால் அமைக்கப்படும். வருமான வரி வருவாயும் கலால் வரி வருவாயும் மட்டுமே மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அரசியல் சட்டத்தில் ‘எஞ்சிய அதிகாரங்கள்' எல்லாம் மத்திய அரசிடம் இருக்கும் என்ற பிரிவைப் பயன்படுத்தி, மத்திய அரசு சேவை வரியை விதித்து அதிக வரி வருவாய் வசூலித்தது.

ஆனால், இவ்வருவாய் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, 2000-ல் மத்திய அரசின் எல்லா வரிகளின் (செஸ், சர்-சார்ஜ் நீங்கலாக) நிகர வருவாயை மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் சட்டத் திருத்தம் நிறை வேற்றப்பட்டது. இதே போன்று 1993-ல் நிறைவேற்றப்பட்ட 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி வழங்க வேண்டும் என்று 270-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது.

செயல்பாடு

1951-ல் முதல் நிதிக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இக்குழுவுக்கு நீதிபதிகள் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்பு, அரசியல் தலைவர்கள் நியமிக்கப் பட்டனர். அண்மைக்காலமாக பொருளாதார வல்லுனர்கள் தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தக் குழுவில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களும் ஒரு உறுப்பினர் செயலரும் இடம்பெறுவர். பொருளாதாரம், பொது நிர்வாகத் துறைகளில் உள்ள வல்லுனர்களை இதன் உறுப்பினர்களாக நியமிப்பது வழக்கம்.

14-வது நிதிக்குழு 2013, ஜனவரி 2, அன்று நியமிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர். ஒய்.வி. ரெட்டி தலைவராகவும், அபிஜித் சென் (பகுதி நேர உறுப்பினர்), சுஷ்மா நாத், எம்.ஜி. ராவ். மற்றும் சுதிப்தோ மண்டல் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இக்குழு மத்திய, மாநில அரசுகளோடு ஆலோசனை நடத்தி, தன் சுய ஆராய்ச்சியின் அடிப்படையிலும் மேலே கூறிய அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளை அக்டோபர் 31, 2014-ல் மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்கும். இப்போது அமைக்கப்பட்டுள்ள 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் 2015-16 முதல் 2019-20 வரை அமல்படுத்தப்படும்.

எதையெல்லாம் பரிந்துரைக்கலாம்?

நிதிக் குழு பரிந்துரைகள் செய்யும் பொதுவான அம்சங்கள்பற்றி அரசியல் சட்டத்தில் உள்ள குறிப்புகள் இவை:

1. மத்திய அரசின் நிகர வரி வருவாயை (வரி வசூலிக்கும் செலவு நீங்கலாக) மத்திய, மாநில அரசுகளுக்குப் பிரித்துக்கொடுப்பது. உதாரணமாக: 70% மத்திய அரசுக்கும், 30% மாநில அரசுக்கும்.

2. எல்லா மாநிலங்களும் ஒரே அளவு பொது செலவுத் தேவையும், வரி வருவாய் பெறக்கூடிய திறனும் இல்லாததினால், நிதிக் குழு எந்த மாநிலங்களுக்கு அதிக நிதியும், எந்த மாநிலங்களுக்குக் குறைவான நிதியும் கொடுக்க வேண்டும் என்று கூற வேண்டும். இதுதான் மாநிலங்களுக்கு உள்ள தொகையை (30%) மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொடுப்பதற்கான சூத்திரம்.

3. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு நிதித் தொகுப்பிலிருந்து தர வேண்டிய நிதிக்கான பரிந்துரையையும் தர வேண்டும்.

4. மாநிலங்களுக்கு மேலும் தேவையான நிதியை, அரசியல் சட்டம் 275-வது பிரிவுப்படி கருணைத் தொகையாகத் தருவதற்கான பரிந்துரைகளும் கொடுக்க வேண்டும்.

5. இவை இல்லாமல், மத்திய அரசு கூறும் வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளையும் கொடுக்க வேண்டும்.

நிதிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், இதுவரை நிதிக் குழுக்களின் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்திவருகிறது. முதல் இரண்டு நிதிக் குழுவில் மாநிலங்களின் திட்டச் செலவுகளுக்கும் சேர்த்தே நிதி பகிர்வு செய்யப்பட்டது. மூன்றாம் நிதிக் குழுவிலிருந்து இவ்வழக்கம் கைவிடப்பட்டு, மத்திய அரசின் வரிவருவாயில் பங்கும், மாநில அரசின் திட்டம் சாராத செலவுகளுக்கான கொடையும் பரிந்துரை செய்யப்படுகிறது.

அணிவகுக்கும் சவால்கள்

இந்த நிதி ஆண்டு (2013-14) தமிழ்நாட்டின் மொத்த அரசு செலவான ரூ 1.42 லட்சம் கோடியில் ரூ. 8463 கோடியே மத்திய அரசிடமிருந்து நிதியாகப் பெறப்படும் என்று மாநில நிதி அறிக்கை கூறுகிறது. அதாவது, மொத்த செலவில் 5.9%. மத்திய அரசு நிதியில் மூன்றில் இரண்டு பங்கு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிதிக் குழுவும் தமிழகத்துக்கான நிதி அளிப்பைக் குறைத்துவந்திருக்கின்றன. 13-வது நிதிக் குழு (2010-15) மற்ற மூன்று தென் மாநிலங்களுக்கும் இரண்டு மடங்குக்கு மேல் நிதி உயர்த்தி கொடுத்தபோது, தமிழகத்துக்கு மட்டும் இரண்டு மடங்கைவிடக் குறைவாக உயர்த்தியது. இந்தச் சூழ்நிலையில்தான், 14-வது நிதிக் குழு தமிழகம் வந்து நிதி மாற்றம் தொடர்பாக விவாதித்தது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே நிதியை நடுநிலையோடு பிரித்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட 14-வது நிதிக் குழு, இந்த வருடம் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது (பார்க்க பெட்டிச் செய்தி).

இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதும், அதனால் மத்திய அரசின் வரி வருவாய் குறைவாக உள்ள சூழலில், மாநிலங்கள் அதிக நிதிக் கேட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்நேரத்தில், 14-வது நிதிக் குழு முன் பல சவால்கள் ஒன்றாகத் தோன்றி உள்ளன.

No comments:

Post a Comment