Wednesday, 18 December 2013

ஒரு சொல் பல பொருள்

மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம். அதேபோல ஒரே பெயரில் இரு வேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இரு வேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள். தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன. இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்ப்போமா?

ஆங்கிலத்தில் கிவி (kiwi) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும். வார்த்தையோடு அந்தப் பழத்தையும் பறவையையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி. இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இறக்கைகளே இல்லாத பறவை இது. வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும் இருக்கும். ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது, கிவியின் உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது. கிவி, ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும். இவை காடுகளில் வாழும் பறவையினம் என்பதால், காடுகள் அழிப்பு இவற்றைப் பெருமளவில் பாதித்து இருக்கிறது.

இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் பழ வகை கிவி. கோழிமுட்டை அளவில் இருக்கும் இது, பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும். மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும். நடுவே கடுகு போல சின்னச் சின்ன விதைகள் இருக்கும். இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும் இருக்கும்.

தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கவசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான்

என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லியிருக்கிறார். அதாவது ஆயிரம் யானைகள் சூழ நடந்து வருகிறாராம் நாராயணன்.

தமிழ் இலக்கண நூலான பிங்கல நிகண்டு, ‘வாரணஞ்சூழ் புவி’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது கடலால் சூழப்பட்டிருக்கிறது இந்தப் பூமி என்று பொருள்.

அதே பிங்கல நிகண்டுவில் இன்னொரு இடத்தில் ‘வாரணத்து வாயடைப்ப’ என்று வந்திருக்கிறது. இந்த இடத்தில் வாரணம் என்பது சங்கு என்ற பொருளைத் தருகிறது.

உதாரணங்கள் போதும்தானே. புதிதாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தும்போதோ, தெரிந்துகொள்ளும்போதோ அதற்கு வேறு அர்த்தமும் இருக்கிறதா என்று தெரிந்து பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment