பொதுமக்கள், '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், மருத்துவ ஆலோசனை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு விரைவில் துவங்க உள்ளது.
தமிழகத்தில், '108' அவரச கால ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. விபத்தில் சிக்குவோர், அவசர சிகிச்சை தேவைப்படுவோர், கர்ப்பிணிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் இந்த திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுபோன்று, '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், தேவையான மருத்துவ ஆலோசனை, உதவிகள் வழங்கும் வகையிலான, மருத்துவ உதவித் திட்டம் ஒன்றை, தமிழக அரசு துவங்க உள்ளது. இதற்கான சோதனை ரீதியிலான முயற்சி நடந்த வருகிறது. '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வரும், ஜி.வி.கே., நிறுவனம், புதிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குனரகத்தின் கீழ், '104' மருத்துவ உதவித் திட்டம் செயல்படும். பதிவு அலுவலர், மருத்துவ ஆலோசகர், டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள் இதில் இடம்பெறுவர். சோதனை ரீதியாக முயற்சி மேற்கொண்டு, நடைமுறையில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 'டெங்கு', சிக்குன் - குனியா போன்ற பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சை முறைகள்; தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் என, பல்வேறு மருத்துவ ரீதியிலான பிரச்னைகளுக்கும் ஆலோசனை தரப்படும். உடல் நலம் தவிர, மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கும், ஆலோசனை பெறலாம். அறிமுகம் இல்லாத சுற்றுலா தலங்களுக்கு சென்றோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள், டாக்டர்கள் பற்றிய தகவல்களையும், இந்த சேவை மூலம் பெற முடியும். சோதனை ரீதியான பணிகள் முடிந்து, இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும், '104' சேவைக்கு தொடர்பு கொண்டால், தேவைக்கேற்ப, '108' சேவைப்பிரிவுக்கு, அழைப்பை மாற்றவும் வழி செய்யப்பட்டு உள்ளது. ஆலோசனை முற்றிலும் இலவசம்; அழைப்புக்கட்டணம் உண்டு. புதிய திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment