Tuesday, 10 December 2013

அன்புள்ள பத்திராதிபருக்கு.

ஐயா, - எந்தக் குற்றமுமற்ற ‘கனவு’ மற்றும் ‘ஆறிலொரு பங்கு’ ஆகிய என்னுடைய சிறு நூல்களை ராஜதுரோகமானவை என்ற அனுமானத்தின்பேரில், இந்திய அரசாங்கம் தடைசெய்துள்ளதை, அது எந்த மக்களின் பெயரால் நடத்தப்படுகிறதோ அந்த மக்களின் பேரில் நான் முறையிடுகிறேன். என்னுடைய சிறு நூல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்படாத வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன என்று அரசாங்கத்திற்குக் கருத்தறிவித்தவர்களை அறிவற்றவர்கள் என்று நான் கருதுகிறேன். தக்கவர்களைக் கொண்டு இந்தச் சிறுநூல்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்விஷயம் தொடர்பாகத் தனிப்பட்ட கடிதங்கள் மூலமாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் சென்னை அரசாங்கத்தை நான் ஏற்கெனவே அணுகியுள்ளேன். ஆனால், சில நூல்களுக்கு நியாயம் செய்யப்பட வேண்டும் என்று இந்திய ஜனங்களிடம் மீண்டும் முறையிட்டுக்கொள்கிறேன். இந்த என் முறையீடு என் சொந்த நலன் கருதியல்ல. ஏனெனில் பணம், புகழ் ஆகியவற்றைப் பொருத்தவரையில் இந்தச் சிறு நூல்கள் எனக்குப் பொருட்டல்ல; பிரிட்டிஷ் இந்தியாவில் எஞ்சியுள்ள அற்பசொற்ப எழுத்துரிமை பற்றியே இந்த முறையீடு. சந்தேகத்துக்குரிய ஒருவரின் பேனா எழுதியதன் காரணமாகக் காதல் கவிதைகளையும் ஆசாரத் திருத்தக் கதைகளையும் தடைசெய்வீர்களானால், நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். வெகுஜனப் பத்திரிகைகள் இந்தப் பிரச்சினையை முன்னெடுக்க வேண்டும் எனப் பிராத்திக்கிறேன்.

சுப்பிரமணிய பாரதி

‘தி ஹிந்து’, 8 அக்டோபர் 1912.

ஐயா, - அரசியல் விவகாரங்களில் கட்சி பேதங்கள் தவிர்க்க இயலாதவை.

வேறுபட்ட நலன்கள் மட்டுமல்லாமல், குணம், அறிவு, மனப்போக்கு ஆகியவற்றின் வித்தியாசங்களினாலும், எல்லாக் காலத்தும் எல்லாத் தேசத்தும் பெரிய பிரதிநிதித்துவ சபைகளில் முக்கியப் பிரச்சினைகளைப் பொறுத்து எதிரெதிரான கருத்துகள் கொண்ட காட்சிகள் இல்லாமல் இருப்பது சாத்தியமல்ல.

மத மாச்சர்யங்களையும், தீண்டா ஜாதிகளையும், அணுக முடியாத ஜாதிகளையும் சிருஷ்டித்த உணர்ச்சியையும் அரசியல் வாழ்க்கையில் புகுத்துவோர், அரசியல் தற்கொலையினையே புரிகிறார்கள். அவ்வளவுதான்.

மேலும், ஸ்திரத்தன்மையும் தொடர்ச்சியும் காரிய சாத்தியமும் இருக்க வேண்டுமானால், பிரதிநிதித்துவ சபையினர் அனைவரும் உலகின் நியதிகளை ஆழமாக மதித்து நடப்பது அவசியமாகும்.

ஆனால், புறத்தேயுள்ள ஒரு அமைப்பின் மீதான அச்சமும், தன்னுடைய நடவடிக்கைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் அந்த அமைப்பு எவ்வாறு கருதும் என்பதையுமே பிரதான அக்கறையாக அதன் அங்கத்தினர்கள் அல்லது அங்கத்தினரின் ஒரு பகுதி கொண்டிருக்கும்பட்சத்தில், எந்த காங்கிரஸோ அல்லது பிரதிநிதித்துவ சபையோ ஜீவித்திருக்க இயலாது.

ஒரு தேசத்தின் விவகாரங்களை வழிநடத்திச்செல்ல ஆசைப்படுவோர் அடிமைப் பண்பை - அது பிதுரார்ஜிதமாக வந்ததோ, புதிதாகப் பெறப்பட்டதோ - முற்றாக விட்டுவிட வேண்டும்.

ஒரு பிரதிநிதித்துவ சபை ஆட்சி அதிகாரத்தோடு சமாதானமாகச் செல்லத்தான் வேண்டும். ஆனால், அது ‘கெளரவமான சமாதான’மாக இருக்க வேண்டும்.

அதே வேளையில், இந்த சபையோடு சமாதானமாகச் செல்வதே ஆட்சி அதிகாரிகளுக்கு நல்லது என்பதும் அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சட்டத்துக்குப் புறம்பாக நடப்பதாக நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தை மதித்து நடப்பதாகவே கருதப்பட வேண்டும்.

இல்லாவிடின், பொறாமையும் புகைச்சலும் மிகுந்த அந்தப்புரமாகவே அந்த சபை விளங்கும்.

தேசம் என்ற கருத்தை முன்னெடுத்து அதை தேசீய வாழ்வின் ஒவ்வொரு நடைமுறையிலும் சாத்தியமாக்குவதே தேசீய காங்கிரஸ் சபையின் பிரதான கடமை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

நமது காங்கிரஸ் இந்த வரைமுறைக ளால் வழிநடத்தப்படுமாக!

புதுச்சேரி, 28 நவம்பர்

சி.சுப்பிரமணிய பாரதி

‘தி ஹிந்து’, 1 டிசம்பர் 1914

‘பாரதி கருவூலம்: ‘ஹிந்து’நாளிதழில் பாரதியின் எழுத்துகள்’ நூலிலிருந்து.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம். பாரதியின் ஆங்கில எழுத்துக்களை தமிழாக்கம் செய்து பதிப்பித்தவர் ஆ. இரா. வேங்கடாசலபதி.



No comments:

Post a Comment