Saturday, 28 December 2013

எல்லீஸ் ஆர் டங்கன்

எல்லீஸ் ஆர் டங்கன்

நேற்று சென்னை திரைப்பட விழாவில் An American in Madras, ஆவணப்படத்தினைப் பார்த்தேன்,

எல்லீஸ் ஆர் டங்கனை பற்றிய ஆவணப்படமிது. மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது, பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற கரண்பாலி இயக்கியுள்ளார் , ஆர் வி ரமணி படத்தின் ஒளிப்பதிவாளர், 80 நிமிசங்கள் ஒடக்கூடிய இப்படம் டங்கனை பற்றிய முழுமையாகச் சித்திரத்தை நமக்குத் தருகிறது,

சதி லீலாவதி, பொன்முடி, அம்பிகாபதி, சகுந்தலா, மீரா, மந்திரிகுமாரி உள்ளிட்ட பதிமூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எல்லீஸ் ஆர் டங்கன், எம்ஜிஆரை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தவர் டங்கனே,

அமெரிக்காவில் பிறந்துவளர்ந்து புகைப்படக்கலை கற்ற டங்கன் தனது நண்பரின் அழைப்பின் பேரில் ஆறுமாதகாலம் இந்தியா வந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் பணியாற்ற நேர்ந்து இங்கேயே பதினைந்து ஆண்டுகள் தங்கிவிட்டார்,

1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் பணியாற்றிய எல்லீஸ் ஆர் டங்கன் பற்றி இதுவரை முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை, ராண்டர்கை அவரைப் பற்றிச் சிறு புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் என்பது என்நினைவு,

இந்த ஆவணப்படத்தில் தமிழ்சினிமாவிற்கு டங்கனின் பங்களிப்பு பற்றிச் சினிமா ஆய்வாளர்கள் தியோடர் பாஸ்கரன், ஹரிஹரன், மோகன்ராம் மற்றும் டங்கனோடு பணியாற்றய ஒப்பனைக்கலைஞர்,மார்டன் தியேட்டர்ஸ் நிர்வாகி, பாடகி ராதா ஆகியோர் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்

காலத்தின் பின்னால் பயணம் செய்து 70 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்சினிமா உலகிற்குள் மறுபிரவேசம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது இப்படம்.

நாம் முறையாக தமிழ்சினிமாவை ஆவணப்படுத்தி வைத்திருக்கவில்லை, தமிழ்சினிமாவோடு தொடர்புடைய படப்பிடிப்பு அரங்குகள், கலைஞர்கள், பிலிம்ரோல்கள், புகைப்படங்கள், திரையிசைபாடல்கள், இதழ்கள் அத்தனையும் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன, மிஞ்சியிருப்பது ஒன்றிரண்டு இடிபாடுகள் மட்டுமே என்பதை படம் எடுத்துக்காட்டுகிறது. படம் பார்க்கும் போது ஆழமான ஏக்கமும் ஆதங்கமும் உருவாகிறது

டங்கனின் நேர்காணலில் அவரே தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது படத்தின் தனிச்சிறப்பு, அதில் அவர் தமிழ் நாடகமேடைக்கும் சினிமாவிற்குமான வேறுபாட்டினை பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார், டங்கனின் சிறப்பு அவர் இளஙகோவன், பாரதிதாசன் என முக்கிய எழுத்தாளர்களைத் தனது படத்தின் வசனகர்த்தாவாகப் பயன்படுத்தியது,

தமிழ் தெரியாமல் உதவிக்கு இரண்டு பேரை வைத்துக் கொண்டு அவர் பதிமூன்று முக்கியத் தமிழ் படங்களை இயக்கியது தனித்திறமை என்றே சொல்லவேண்டும்,

யுத்தகாலப் புகைப்படக்கலைஞராக, பிரிட்டீஷ் அரசின் விளம்பரபட இயக்குனராக, மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களின் இநதிய ஒருங்கிணைப்பாளராக என டங்கன் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைப் படம் விரிவாக விளக்குகிறது.

43 ஆண்டுகளுக்குப்பிறகு டங்கன் சென்னைக்குத் திரும்ப வந்த போது அவருக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் அவரோடு பழகியவர்களின் நினைவு அலைகள் நம்மை நெகிழச்செய்கின்றன,

படம் முடிந்த பிறகு நடைபெற்ற விவாத்த்தின் போது டங்கனின் இரண்டாவது உதவியாளராக பணியாற்றிய இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் உணர்ச்சிபூர்வமாக அவருக்கும் டங்கனுக்குமான உறவைபற்றிப் பேசியது நேற்றைய நிகழ்வின் ஹைலைட்,

டங்கனை எப்படித் தான் மந்திரிகுமாரி நாடகம் பார்க்க மாயவரம் கூட்டிப்போனேன் என்பதைப் பற்றி முக்தா மிக அழகாக விளக்கினார், டங்கனை தனது மாஸ்டர் என்று அழைத்த முக்தா, அவரைப்பற்றிப் பேசமுற்பட்ட போது உணர்ச்சிவசப்பட்டுக் குரல் தழுதழுக்க நடுங்கியபடியே தமிழ்சினிமாவிற்கு நவீனபார்வையை உருவாக்கியவர் டங்கன், அவர் தனது குரு, அவருக்குத் தமிழ்சினிமா நிறையக் கடமைப்பட்டிருக்கிறது என்றார்

தமிழ்திரையுலகம் செய்யத் தவறிய ஒரு வேலையை மிகச்சிறப்பாகச் செய்துகாட்டிய கரண்பாலி மிகுந்த பாராட்டிற்குரியவர்,

டங்கனின் ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு இரவு மீரா படத்தினை மறுபடியும் பார்த்தேன், என்னவொரு அற்புதம், படம் வெளியாகி 65 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனாலும் புத்தம் புதியதாக அதே சிறப்புடன் ஒளிர்கிறது , டங்கன் ஒரு மேதை என்பதற்கு இப்படமே சாட்சி, ஒளிப்பதிவாளர் ஜித்தன் பேனர்ஜியின் தேர்ந்த ஒளியமைப்பும் மாறுபட்ட காட்சிக்கோணங்களும் எம்எஸ்ஸின் பேரழகும், சிறந்தபாடல்களும் படத்தினைக் காவியமாக்கி உள்ளது

தமிழ்சினிமாவை திசைமாற்றம் செய்த எல்லீஸ் ஆர் டங்கனை பற்றிய An American in Madras ஆவணப்படம் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான படமாகும்.

No comments:

Post a Comment