Thursday, 19 December 2013

தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் ஒருநாள் வருமானம் ரூ.222 கோடி

அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட் இந்த ஆண்டில் சராசரியாக ஒருநாளில் ரூ.222 கோடி பணம் ஈட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய நபரும் அவர்தான் என்று வெல்த் எக்ஸ் ஊடக நிறுவனம் கூறியுள்ளது.

2013-ம் ஆண்டில் டிசம்பர் 11-ம் தேதி வரை 12.7 பில்லியன் (சுமார் ரூ.76,200 கோடி) அமெரிக்க டாலர்களை அவர் ஈட்டியுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளது.

எனினும் இந்த ஆண்டின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட் முதலிடம் பெறவில்லை, இரண்டாவது இடத்திலேயே உள்ளார். இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 600 கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் சூதாட்ட விடுதிகளை நடத்தி தனி சாம்ராஜ்ஜியம் அமைத்துள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ஷெல்டன் அடெல்டன் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி.

அமேசான்.காம் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 400 கோடி. அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

5-வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 200 கோடியாகும்.

சாப்ட் பேங்க் கார்ப் நிறுவனத்தின் மசாயோஸி சன் 6-வது இடமும், கூகுள் தேடுபொறி நிறுவனர்கள் லார் பேஜ், சேர்த் பிரின் ஆகியோர் 7-வது இடமும் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment