Wednesday, 18 December 2013

குரூப் - 1 தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

குரூப் - 1 தேர்வு எழுதும் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.

கடலூரில், நேற்று அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் - 1 தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். ஆனால், கடந்த, 12 ஆண்டுகளில், நான்கு முறை மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள், தேர்வு எழுதும் வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, படித்த கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், குரூப் - 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, 35ம், மற்ற வகுப்பினருக்கு, 30 என்ற நிலை இருந்து வருகிறது. கேரளாவில், 50 வயது, குஜராத்தில், 42, ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில், 45 வயது வரை அனுமதி அளிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, படித்த இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். குரூப் - 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் நிலையில், முதல்வர் ஜெ., தலையிட்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, 50 வயது வரையும், மற்ற வகுப்பினருக்கு, 45 வயது வரையும் உயர்த்த உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, சங்கங்களை அழைத்து, முதல்வர் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment