Tuesday, 24 December 2013

புதிய நிலவு கண்டுபிடிப்பு!

புதிய நிலவு கண்டுபிடிப்பு!

சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை, குறிப்பாக, நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள்தான் நாம் வாழும் பூமி. இந்த சூரிய குடும்பத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவையும் இணைந்துள்ளன. இந்த கோள்கள் மத்திய ரேகை தடத்தில் சூரியனை வலம் வருகின்றன. சமீபத்தில் கூட எச்.டி 10180 நட்சத்திரம் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தொலைவில் 7 கிரகங்களுடன் உள்ள புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சூரிய குடும்பத்துக்கு அப்பால் கிரகங்கள் இருப்பது குறித்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு கிரகங்களை மையமாக வைத்து சுற்றும் நிலவுகளை எக்ஸோமூன் என அழைக்கிறார்கள். சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 850 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வியாழனை போன்றவைதான். இதுபற்றி இன்டியானாவில் உள்ள நாட்ரிடேம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற விஞ்ஞானி நுண்ணிய ஈர்ப்பு வில்லை (கிராவிடேஷனல் மைக்ரோ லென்சிங்) மூலம் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வானியல் ஆய்வு மேற்கொண்டார். அவ்வாறு ஆய்வு செய்யும்போது, பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு முன்பாக ஒரு பொருள் கடந்ததை கண்டார்.

அதை தொடர்ந்து சிறிய பொருள் ஒன்று கடந்ததையும் கண்டார். பூமியில் இருந்து தொலைநோக்கியில் பார்க்கும்போது அந்த பொருளின் ஈர்ப்பு விசை காரணமாக, பின்னணியில் உள்ள நட்சத்திரத்தின் ஒளி வளைவது போன்ற தோற்றத்தை தந்தது.இந்த இரண்டு பொருட்களும் கிரகமும் அதன் நிலவுமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தன. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் நிலவு பூமியை விட அரை மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன. அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பிரமாண்டமானதாக அது இருந்தது. இது நிலவுதான் என்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்ட முதல் நிலவு இதுவாகத்தான் இருக்கும். இந்த நிலவில் உயிரினங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment