Thursday, 8 May 2014

கூடங்குளம் அணுஉலைக்கு தடையில்லை: பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு, கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் 15 விதிமுறைகளை வழங்கியது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் எனவே கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.
அப்போது அவர், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது புகுஷிமாவில் நிகழ்ந்தது போன்ற பேரிடர் கூடங்குளத்திலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன என வாதிட்டார். மேலும் கூடங்குளத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய ஒரு குழுவை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய அணுசக்தி கழகத்தின் இயக்குனர் டாக்டர் அஷோக் சவுகான், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் தேவையில்லை என்று கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம் மனுவின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.
அதில்: பாதுகாப்பு தொடர்பான பெரும்பாலான வழிமுறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், ஒரு சில விதிமுறைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க அறிவியல் கண்காட்சி: 2 தமிழக மாணவர்களுக்கு விருது

அமெரிக்காவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 2 தமிழக மாணவர்கள் உட்பட 4 இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு விருது கிடைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அறிவியல் கழகத்தின் தலைவர் நாராயண் ஐயர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அறிவியல் கழகம் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவியல் கண்காட்சியை நடத்திவருகிறது. இந்த கண்காட்சிகளில் இடம்பெறும் புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சிறந்த இளம் விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவில் ஐ-ஸ்வீப் என்ற அமைப்பு நடத்தும் அறிவியல் கண்காட்சிக்கு அனுப்புகிறோம். அதன்படி நம் நாட்டை சேர்ந்த 4 இளம் விஞ்ஞானிகளின் 3 புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றது. இந்த கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தங்க விருதும் 2 வெள்ளி விருதுகளும் கிடைத்துள்ளன. மொத்தம் 80 நாடுகளை சேர்ந்த 400 புதிய கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தங்க விருது பெற்றுள்ள டென்னித் ஆதித்யா, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்து மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் இவர், புதுமை தொழில்நுட்பத்தின் மூலம் வாழை இலையை ஒரு வருட காலம் வாடாமல் பசுமையாக வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவரான டி.அஞ்சானி கார்பன்டை- ஆக்சைடில் இருந்து பயோ-டீசல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு வெள்ளி விருது கிடைத்துள்ளது. மேலும், குஜராத்தை சேர்ந்த மான்சி டல்சானை மற்றும் கைரவி ரட்சியா ஆகியோர் கூட்டு சேர்ந்து கழிவு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செங்கல்கள் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனால், இவர்களுக்கு வெள்ளி விருது வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அறிவியல் கண்காட்சியில் தங்க விருது பெற்ற மாணவர் டெனித் ஆதித்யா கூறுகையில், “நான் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம், வாழை இலை ஒரு வருடத்துக்கு பசுமை மாறாமல் இருக்கும். இதை 3 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். மத்திய அரசின் அனுமதியை பெற்று, இந்த கண்டுபிடிப்பை மக்கள் பயன்படுத்த வசதியாக விரிவுபடுத்தவுள்ளேன். எனது தொழில்நுட்பம் நம் நாட்டு மக்களுக்கு பயன்பெற வேண்டுமென்பதே எனது விருப்பம்’’ என்றார்.
மாணவர் டி.அஞ்சானி கூறுகை யில், “கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டேன். அடுத்ததாக கடல்பாசி மூலம் மருந்துகளை கண்டுபிடிக்க உள்ளேன். புற்றுநோய்க்கு மருத்து கண்டுபிடிப்பதே என லட்சியம். இதற்கான பணியில் நான் தொடர்ந்து ஈடுபடவுள்ளேன்.’’ என்றார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 4 இளம் விஞ்ஞானிகளின் 3 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தங்கம் உட்பட 3 விருதுகள் கிடைத்துள்ளன.

Monday, 5 May 2014

Important Current Affair



President of Confederation of Indian Industries (CII): S Gopalakrishnan
Director General of Confederation of Indian Industries (CII): Chandrajeet Banerjee
President of Federation of Indian Chambers of Commerce & Industries (FICCI): Siddhartha Birla
President of National Association of Software and Service Companies (NASSCOM): R. Chandrashekhar
Chairman of National Association of Software and Service Companies (NASSCOM): R. Chandrasekaran
Chairman of National School of Drama: Ratan Thiyam
Director General of Council of Scientific & Industrial Research: Dr. T. Ramasami (Additional Charge)
Director of Indian Agriculture Research Institute(IARI): Dr. Hari Shankar Gupta
Chairman of Life Insurance Corporation of India: S.K Roy
Chairman cum Managing Director of (CMD) of General Insurance Corporation of India (GIC): Shri P J Joseph
Chairman of Insurance Regulatory & Development Authority (IRDA): T S Vijayan
Chairman of National Bank for Agricultural and Rural Development (NABARD): H K Bhanwala
Chairman of University Grants Commission (UGC): Prof. Ved Prakash

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையில் பணி

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையில் பணி
மத்திய விரைவுப் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 136
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு
வயதுத் தகுதி: 25 வயதிற்குள் மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகளும் உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 200. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி: 12-05-2014, 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலதிகத் தகவலுக்கு:

லிஃப்ட் மேலே செல்வதற்குள்...


“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?”
இதுதான் பெரும்பான்மையான நேர்காணல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி.
ஏன் இது முதல் கேள்வி என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். கனத்த உரையாடலுக்கு முன் ஒரு இதமான கேள்வி என எடுத்துக் கொள்ளலாம். புரிவதற்குக் கடினமாக இல்லாமல், விடை தெரிந்த கேள்வி என்றால் இதைவிட எதைச் சொல்ல? (இதற்கும் விடை சொல்லத் திணறும் பதற்றக்காரர்கள் இருக்கிறார்கள். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.)
இது தவிர நேர்காணல் எடுப்பவர்களுக்கும் சிந்திக்கும் அவகாசமும், வந்தவரைப் பேசவிட்டு நோட்டமிட ஒரு திறந்த கேள்வி தேவைப்படுகிறது. இதைக் கேட்டுவிட்டுத் தேவைப்படும் இடத்தில் வெட்டி ஒரு மறு கேள்வி கேட்டுத் தங்கள் வேலையைத் தொடங்கலாம்.
பல நேரங்களில் நேர்காணல் எடுப்பவருக்கு மிகுந்த அசதி இருக்கும். பயிற்சி அமர்வில் 8 மணி நேரம் அசதி இல்லாமல் பேசக்கூடிய என்னால் நேர்காணல் எடுக்கையில் அசதி அடையாமல் 2 மணி நேரம் பேச்சு கேட்பது கடினம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு தேனீரும் சிறிது நடையும் கட்டாயம் வேண்டும். புது ஆள் வந்தவுடன் புத்துணர்ச்சியுடன் புதுக் கேள்வியை யோசிப்பதும் சிரமம். இதனால்தான் இந்த, “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?” கிட்டத்தட்ட ஸ்டாண்டர்ட் கேள்வி!
சரி, இந்தக் கேள்வியின் பதிலால் என்ன தெரிந்துகொள்ள முடியும்? என்னைக் கேட்டால் எல்லாம் தெரியும். இடைமறிக்காமல் மூன்று நிமிடங்கள் பேச அனுமதித்தால் எதிராளியின் மன ஓட்டம் புரியும். அவர் பின்புலம் புரியும். மொழி அறிவும் தெரியும். சி.வி.க்கும் நிஜத்திற்கும் உள்ள தொடர்பு தெரியும். எல்லாவற்றையும்விட அடுத்து என்ன கேட்க வேண்டும் என்று தெரியும்.
இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்?
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. ஆனால் மிக நுட்பமாகப் பார்த்தால், நேர்காணலை வழிநடத்தக்கூடிய பதிலை நீங்கள் தரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பதில்களிலிருந்து கேள்விகள் பிறக்க அதிக வாய்ப்புகள் நேர்காணலின் ஆரம்ப கட்டத்தில் உண்டு. இதைச் சாமர்த்தியசாலிகள் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
நேர்காணலின் குறிக்கோள் நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவரா என்று சோதிப்பதுதானே? அப்படி என்றால் அந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை எடுத்துச் சொல்ல உங்கள் அறிமுக உரை உதவலாம் அல்லவா? இதைச் செய்வதன் மூலம் நீங்கள் நேர்காணல் எடுப்பவரின் நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து அவர்கள் வேலையைச் சுலபமாக்குகிறீர்கள்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றவுடன் பலர் சி.வி.யைத் திரும்ப விலாவாரியாகச் சொல்ல ஆரம்பிப்பார்கள். சிலர் தங்கள் பெருமையைப் பேசுவார்கள். சிலர் சில சின்ன தகவல்களுக்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். இவை உங்களைப் பற்றி சுவாரசியம் இழக்கச்செய்து அடுத்த கேள்விக்குக் கொண்டுசெல்ல வைக்கும்.
எது அவசியம், எது அனாவசியம் என்று தெரியாமல் பலர் இந்தப் பொன்னான முதல் சந்தர்ப்பத்தை இழந்துவிடுகிறார்கள். சரியான பதில் என்று ஒன்று இல்லை என்றாலும் ஒரு ஆலோசனை தருகிறேன்.
Elevator Pitch என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு லிஃப்டில் ஏதேச்சையாக உங்கள் வாடிக்கையாளரைப் பார்க்க நேர்ந்தால் உங்கள் பொருள் பற்றி லிஃப்ட் செல்லும் நேரத்திற்குள் சொல்ல முடியுமா? அது தான் எலிவேட்டர் பிட்ச். மிகச் சுருக்கமாக, மிக முழுமையாக மனதில் பதியும் அளவு அறிமுகம் செய்வதைத் தான் அப்படிச் சொல்கிறார்கள். உங்களுக்கும் ஒரு எலிவேட்டர் பிட்ச் அவசியம்.
எங்கள் குடும்பம் அம்பாசமுத்திரம் என்று ஆரம்பித்து மூன்று தலைமுறைக் கதை சொல்லி உங்கள் நடப்பாண்டு சாதனை வரை சொல்ல அவகாசம் கிடையாது. உங்கள் முதல் வரிகளில் ஒரு கொக்கி வைத்தால் அந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். அந்தப் பதில் உங்கள் உரையின் தொடர்ச்சியாக இருக்கும்.
என்னை ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் கம்பனிக்குப் பயிற்சி மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். கார்ப்பரேட் அனுபவம் கிடையாது; பயிற்சி அனுபவமும் சில ஆண்டுகள்தாம். நான் என்னை அறிமுகம் செய்தபோது இப்படிச் சொன்னேன்: “நான் பார்த்த முதல் பயிற்சி வகுப்பு என்னுடையது!” கொல்லென்று சிரித்துவிட்டுக் காரணம் கேட்டபோது பின்னோக்கி என் அனுபவமின்மையைச் சொன்னேன். இப்படி அவர்கள் கேள்விகளிலேயே உங்கள் கதையைச் சொல்லும் போது முதல் கேள்வியும் துணைக் கேள்விகளும் சிறப்பாகக் கையாளப்பட்டதாகச் சொல்லலாம்.
உங்கள் முதல் பதில் உங்களைப் பற்றி முதல் தோற்றத்தை ஏற்படுத்தும். அதனால் அதைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.
ஒரு விளம்பரம் 30 வினாடிகளில் உங்களை ஒரு தேவையில்லாத பொருளை வாங்க வைக்கும் சக்தி கொண்டது. முதல் அறிமுக உரையும் கிட்டத்தட்ட விளம்பரம் போன்றதொரு வாய்ப்புதான். பொய் கலக்காமல் உங்களைப் பற்றி ஒரு சுவாரசியமான அறிமுகம் உங்களை ஒரு நல்ல உரையாடலுக்கு இட்டுச்செல்லும்.
சரி, “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்” என முதல் கேள்வி அமையா விட்டால், உங்கள் அறிமுக வாசகங்களை என்ன செய்வது?
தி.மு.க. தலைவைர் மு.கருணாநிதியின் டெக்னிக்தான் கடைசி வழி. கேள்வி எதுவாக இருந்தாலும் தான் சொல்ல வேண்டியதை அதில் இணைத்துச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே!
வேலையைக் காதலி!
மன நோய்கள் நரம்புத் தளர்ச்சியால் வருபவை என்றும் நம்பியிருந்த காலம் அது. பெண்களின் ஹிஸ்டீரியா போன்ற நிலைகளுக்கு ஹிப்னோஸிஸ் முறையைப் பயன்படுத்திய மருத்துவரிடம் உதவி சிகிச்சையாளராக இருக்கிறார் இவர்.
பின் வரும் காலங்களில் அவரிடமிருந்து பிரிந்து உளப்பகுப்பாய்வு முறையை உருவாக்குகிறார். மருந்துகளைவிட நோயாளிகளிடம் பேசுவதையும் அவர்கள் கனவுகளை ஆராய்வதும் பிரதான வழிகளாகக் கையாள்கிறார்.
Free Association என்ற முறையில் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பேச வைத்து, அதன் பின் தன் பகுப்பாய்வில் தொகுத்து தரும் முறை தான் முதல் நேர்காணல் முறை. இன்றும் In Depth Interview எனும் நிறுவன மேலாளர்களுக்கான ஆய்வில் இந்த உத்தியின் தாக்கத்தை காணலாம்.
சைக்கோ அனாலிஸிஸ் எனும் கருத்தக்கத்தை வழங்கிய அவர் உளவியல் துறையின் தந்தை என அழைக்கப் பெற்று வரும் ஸிக்மண்ட் ஃப்ராய்ட் !
டாக்டர். ஆர். கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

வரலாறு: எகிப்து பண்டைய நாகரிகம்


இலத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது Civilization (நாகரிகம்) என்னும் சொல். இதற்கு, பிரஜை அல்லது நகரவாசி என்று பொருள். மனித இன வரலாறு, மனிதன் ஆடையில்லாமல், விலங்குகளை வேட்டையாடி, சமைக்காமல் உண்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது. முதன்முதலாக ஆற்றுப்படுகைகளில் நாகரிகம் வளரத் தொடங்கியதால், நதிக்கரை நாகரிகம் என்று அழைக்கப்பட்டது. இவை பல்வேறு வகையானவை. இவற்றில் நைல் நதிக்கரை நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எகிப்து நைல் நதியின் மகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
எகிப்து இரு வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டுமே பாரோவா என்கிற வலிமையான ஒரே பேரரசரின் கீழ் ஆட்சி செய்யப்பட்டன. இந்த பாரோக்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள். இவர்கள் சூரியக் கடவுளிடமிருந்து தோன்றினார்கள் என்று நம்பப்பட்டது. இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் சர்வ அதிகாரங்களுடனும் வாழ்ந்துவந்தனர்.
எகிப்திய சமுதாயத்தில் பாரோக்கள், மத்திய தர வகுப்பினர், அடிமைகள் என்று மூன்று பிரிவுகள் இருந்தன. மற்றபடி வேறு ஜாதிப் பிரிவுகள் இல்லை. மத குருமார்கள், பிரபுக்கள் சமுதாயத்தின் உயர்ந்த இடத்தில் இருந்தனர். வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள். ஒருதார மணமும் பின்பற்றப்பட்டுவந்தது.
எகிப்தின் அரசியல், பொருளாதாரம், சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் சமயம் ஆதிக்கம் செலுத்தியது. பல தெய்வங்களை இவர்கள் வணங்கிவந்தனர்.
இறுதிச் சடங்கு முறைகள்
மிக விரிவான இறுதிச் சடங்கு முறைகளை எகிப்தியர்கள் பின்பற்றிவந்தனர். இறந்த பின்னும் மனிதன் அழிந்துவிடுவதில்லை அமரத்துவம் எய்துகிறான் என்ற நம்பிக்கை கொண்ட இவர்கள், உடல் கெடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இறுதிச் சடங்கை நடத்திவந்தார்கள். சடலங்களை மம்மிகள் எனப்படும் ஒரு வகையான மண் பானைகளில் வைத்துப், புதைத்து வந்தனர். எகிப்தின் மன்னர்கள் இறந்த பிறகு இவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு மம்மிகளில் பாதுகாக்கப்பட்டன. பாரோவாவின் கல்லறைகள் 481 அடி உயரம் உடையவை. இறந்தவர்களின் உடலைப் பாதுகாக்கப் பிரமிட் வடிவ கோபுரங்களும் அமைக்கப்பட்டன.
மம்மிகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு பாலைவனக் குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டுவந்தன. சடலங்கள் மம்மிகளில் வைத்துப் பாதுகாக்கப்படும் பழக்கம் உருவான பிறகும் பாலைவனங்களில் புதைக்கும் பழக்கம் மக்களிடையே தொடர்ந்தது. விரிவான சடங்குகளுடன் மம்மிகளில் புதைக்க முடியாத ஏழை மக்களுக்குப் பாலைவனம் ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது. மிகவும் வசதி படைத்த எகிப்தியர்கள், தங்களின் உறவினர்களின் உடல்களை மம்மிகளில் வைத்து, கல்லாலான கல்லறைகளைக் கட்டினர். இதில் புதைப்பதற்கு முன் உடலின் உள்ளுறுப்புகளை எடுத்துவிட்டு, லெனின் துணியைக் கொண்டு உடலைச் சுற்றி, செவ்வக வடிவ சார்க்கோஃபோகஸ் என்கிற கற்பெட்டியில் அல்லது மரத்தாலான சவப்பெட்டிகளில் புதைத்தனர். இவற்றில் மறு உலகிற்குத் தேவையான உணவு, உடை, பிற பொருட்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஒருசில உறுப்புகளை மட்டும் தனியாகப் பாதுகாக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
மம்மிகளில் உடல்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் மேலும் மேலும் வளர்ந்துவந்தது. மிகச் சிறந்த தரம் கொண்ட ஒரு மம்மியைப் பதப்படுத்த 70 நாட்கள் பிடித்தன. உடலின் உள்ளுறுப்புகளை நீக்குவது, மூக்கு வழியாக மூளையை வெளியே எடுப்பது, நாட்ரோன் என்ற உப்புக் கலவையில் உடலைக் கெடாமல் பாதுகாப்பது ஆகியவை பண்டைய எகிப்தியர்கள் கடைப்பிடித்த பழக்கங்களில் அடங்கும். உயிரற்ற உடல் லெனின் துணியால் பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு, ஒவ்வொரு மடிப்பிலும் பாதுகாப்புத் தாயத்துகள் சொருகப்பட்டன. இவை பிறகு அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டன.
அரசாட்சிகள் மாறியபோது, ரோமானிய ஆட்சியில், உடல் பாதுகாப்பைவிட அதிகமான கவனம், மம்மிகளின் வெளித் தோற்றங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன் விளைவாகவே மம்மிகளும் பிரமிடுகளும் அற்புதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. இந்தப் பிரமிடுகள் இன்று உலக அதிசயங்களாகப் பார்க்கப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் பண்டைய எகிப்தியர்கள் அதற்குக் கொடுத்த முக்கியத்துவம்தான்.
உடல்களைப் பதப்படுத்தும் மம்மிகள்
அரசாட்சிகள் மாறியபோது, ரோமானிய ஆட்சியில், உடல் பாதுகாப்பைவிட அதிகமான கவனம், மம்மிகளின் வெளித் தோற்றங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன் விளைவாகவே மம்மிகளும் பிரமிடுகளும் அற்புதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

யார் அந்தப் பயணி?

எப்போதுமே பலவித பதில்களிலிருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வகையில்தான் சைகோமெட்ரிக் தேர்வுகள் இருக்க வேண்டும் என்பதில்லை. சில சமயம் open ended questions எனப்படும் கேள்விகளும் கேட்கப்படலாம்.
இந்த வகைக் கேள்விகளில் ஒரு நன்மை உண்டு. தேர்வாளர் சிறிதும் எதிர்பாராத கோணத்தில் நீங்கள் பதிலளித்து அவரைத் திருப்திப்படுத்த முடியும். (அல்லது “நீங்கள் அவர்கள் நிறுவனத்துக்கு வேண்டவே வேண்டாமென்று தீர்மா னிக்க வைக்கவும் முடியும்”).
நான் எழுதிய தொடர் ஒன்றில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். “ஒரு பேருந்து தன் கடைசி நிறுத்தத்தை அடைந்துவிட்டது. ஓட்டுநர் உட்பட எல்லோரும் இறங்கி விட்டார்கள். ஆனால் ஒரு பயணி மட்டும் இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பேருந்திலிருந்து இறங்குகிறார். என்ன காரணமாக இருக்கும்?’’.
வாசகர்கள் விதவிதமாகப் பதிலளித்திருந்தார்கள். அவர்கள் அளிக்காத சில விடைக ளையும் இ ங்கே சில உதாரணங்களாகச் சேர்த்திருக்கிறேன். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னால் மேற்கூறிய கேள்விக்கான விடையை, முழுமையாகக் கண்களை இரண்டு நிமிடங்கள் மூடிக்கொண்டு யோசியுங்கள்.
இப்போது உங்கள் விடை களையும், பிறர் அளித்திருக்க வாய்ப்புள்ள விடைகளையும் ஒரு நிறுவனத்தின் கோணத்தில் அலசுவோமா?
“அவர் ஒரு வேளை தூங்கி இருப்பார், அவர் குடித்துவிட்டு உணர்வில்லாமல் இருப்பார்” என்பது போன்ற பதில்கள் சாதாரணமானவை. இதைத் தாண்டி உங்களால் யோசிக்க முடியவில்லை என்றோ, ஒரு பிரச்சினைக்கு ஏதோ ஒரு தீர்வை யோசித்துவிட்டால், அதைத் தாண்டி மேலும் யோசிக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள் என்றோ, இதைக் கொள்ளலாம்.
“பேருந்தில் ஒரு அணுகுண்டை வைக்கத் திட்டமிட்டிருக்கும் ஒரு தீவிரவாதியாக அவன் இருக்க வேண்டும். எல்லோரும் இறங்கிய பிறகு சரியான நேரம் பார்த்து வைத்திருக்கிறான்” என்பது உங்கள் பதிலானால், உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டா? இல்லையா? அது எது போன்ற வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்ப தைப் பொறுத்தது. மனிதவளத் துறை என்றால் எல்லோரையும் எதிர்மறைச் சிந்தனையோடு பார்க்கக் கூடாது. பாதுகாப்புத் துறை என்றால் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருந்தால்தான் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைச் சிந்திக்க முடியும்.
கீழே இரண்டு விதமான பதில்களை அளித்திருக்கிறேன். இரண்டு வித கோணங்களுக்கும் மனநிலைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
(1) அந்தப் பயணி தன்னுடைய பொருள் எதையோ தொலைத்துவிட்டார். இருபது நிமிடங்களுக்கு அதைத் தேடிவிட்டுப் பிறகு கீழே இறங்குகிறார்.
(2) யாரோ ஒருவர் தன் விலை உயர்ந்த பொருளைப் பேருந்தில் தவற விட்டுவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார். பிறருக்குத் தெரியாமல் அந்தப் பொருளை எடுத்துச் செல்வதற்காக, இருபது நிமிடங்கள் காத்திருந்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் இறங்குகிறார் அந்தப் பய ணி.
“உங்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு என்பதைக்கூட உங்கள் விடைகள் மூலம் வெளிக்காட்ட முடியும். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்குக் கீழ்க்கண்ட மாதிரிகூட விடை அளிக்கலாம் இல்லையா?’’ “வெளியே கடன்காரர் நிற்கிறார். அவர் போன பிறகு மெதுவாக இறங்குகிறார் பயணி”, “அவர் ஒரு தொலைக்காட்சி சீரியல் இயக்குநர். எதையும் மெதுவாகச் செய்துதான் அவருக்குப் பழக்கம்”.
ஒரே கேள்வியின் மூலம் ஒருவரை முழு மையாக எடைபோட முடியாதுதான் (அதற்காகத்தான் பலவித கேள்விகளும் நேர்முகமும்). ஆனால் ஒரு கேள்விக்கான விடையின் மூலம் ஓரளவு ஒருவரை எடைபோட்டு அதைப் பிற வழிகளின் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். இதற்கு சைகோமெட்ரிக் தேர்வுகள் உதவுகின்றன.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

மண்ணையும் மனிதர்களையும் காப்பாற்றும் அலையாத்தி

ஆழிப் பேரலை, தமிழகக் கடற்கரைகளை 2004-ல் தாக்கியபோது, சிதம்பரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகமில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அங்கிருந்த இயற்கைத் தடுப்பரண்கள். அதாவது அலையாத்திக் காடுகள்.
இந்த அலையாத்திக் காடுகள் சத்தமின்றி, மந்திரஜாலம் செய்வதுபோல நமது கடற்கரைகளைக் காலங்காலமாகக் காப்பாற்றிவருகின்றன. அவை செய்யும் பேருதவிகளில் சில:
புயல் தடுப்பு
பருவமழைக் காலங்களிலும், புயல் காலங்களிலும் பெரும் புயல்களும் பேரலைகளும் நம் கடற்கரைகளைத் தாக்குகின்றன. இந்த அதிவேகமான இயற்கைச் சீற்றங்களை, அலையாத்திக் காடுகள் அமைதியாக எதிர்கொண்டு தடுக்கின்றன. கடற்கரையில் பெரும் தடுப்பு அரண் போலிருக்கும் இவை, புயலின் வேகத்தைக் குறைக்கின்றன. நமது வீடுகள், நிலப்பகுதி ஆகியவற்றின் அழிவைத் தடுக்கின்றன.
வெள்ளத் தடுப்பு
அலையாத்திக் காடுகள் ஆழமற்ற மிகப் பெரிய கிண்ணங்களைப் போலிருக்கின்றன. அதனுள் புகும் தண்ணீர் தனது இயக்க ஆற்றலை இழந்து பரவ ஆரம்பிக்கிறது. இக்காடுகளின் தரைப் பகுதியில் உள்ள அடர்த்தியான தாவரங்களும் தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
இயற்கை இனப்பெருக்க மையம்
மீன்கள், இறால்கள், நண்டுகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக அலையாத்திக் காடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவற்றின் குஞ்சுகள் பிழைக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், இங்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவு, அவற்றின் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமக்கு உணவாகும் பல மீன்கள் அலையாத்திக் காடுகளை நம்பியே வாழ்கின்றன.
வண்டல் காவலர்கள்
மலைச்சரிவில் இருந்துவரும் மழை நீர் மிக நுணுக்கமான வளம் நிறைந்த வண்டல் மண்ணையும் ஊட்டச்சத்து மிகுந்த தாவர இலைகளையும் அடித்து வரும். அலையாத்திக் காடுகள் அந்த வண்டலையும் இலைகளையும் பிடித்து வைத்துக்கொள்கின்றன. அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் அந்தச் சத்துகளை உணவாக்கிக் கொள்கின்றன.
நடக்கும் காடுகள்
அலையாத்திக் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதால் நமக்கு அதிக நிலப்பகுதி கிடைக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறிதளவு கடல் பகுதியை ஒவ்வொரு அலையாத்திக் காடும் ஆக்கிரமிக்கிறது. அதேநேரம் உள்ளே நிலப்பகுதி உருவாகிறது.
ஆபத்துகள்
ஆனால், அலையாத்திக் காடு களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நாம் அவற்றை அழித்துவருகிறோம். தொழிற்சாலைக் கழிவு நீர் அலையாத்தித் தாவரங்களை அழிக்கிறது. உப்பளங்களில் இருந்து வெளியேறும் அளவுக்கு அதிகமான உப்பு நீர் தாவர வளர்ச்சியைப் பாதிக்கிறது. செயற்கை இறால் பண்ணைகள் அமைக்க அலையாத்திக் காடுகள் அழிக்கப் படுகின்றன. நதிகளில் தண்ணீர் வரத்து குறைவதாலும் இயற்கையாகவே அலையாத்திக் காடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

மார்க்ஸ் என்றும் தேவைப்படுகிறார்

டார்வின் கருத்துகள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிபற்றி விவாதித்ததைப் போல மார்க்ஸியக் கருத்துகள் மனிதச் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றிய விதிகளை நம்மிடம் முன்மொழிந்துள்ளன.
மார்க்ஸிய போதனை
மார்க்ஸிய போதனை 49 தொகுதிகளாக விரிந்தி ருக்கிறது. (மூலதனம் நூலின் நான்காம் தொகுதியையும் சேர்த்தால் 50 தொகுதிகள்). கடிதங்கள் மட்டுமே 12 தொகுதிகள். அவற்றில் மூன்று தொகுதிகள் எங்கல்ஸ் மட்டுமே எழுதியவை; ஒன்பது தொகுதிகள் மார்க்ஸும், எங்கல்ஸும் சேர்ந்து எழுதிய கடிதங்கள். மார்க்ஸும் எங்கல்ஸும் இணைந்து எழுதிய நூல்களும் கட்டுரைகளும் கொண்ட தொகுதிகள் 21, அதில் மார்க்ஸ் மட்டுமே தனித்து எழுதிய நூல்களின் தொகுதிகள் 12. எங்கல்ஸ் மட்டுமே தனித்து எழுதிய தொகுதிகள் நான்கு.
மார்க்ஸியத்தின் மிக முக்கியமான பகுதி ‘மூலதனம்'. அதன் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் முதலாளித் துவ உற்பத்தி முறையின் இதயத்தைக் கிழித்துள்ளன. மனித இனம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எது வேர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இதுதான் மார்க்ஸிய போதனையின் பிரம்மாண்டம்.
தீர்க்கதரிசனம்
இன்று பொருளாதார மந்தம் என்று நம்மால் அழைக்கப்படுவதை மார்க்ஸ் அன்று நெருக்கடி என்று அழைத்தார். சமீபத்தில் 2007-2008-ல் தொடங்கிய மந்தநிலையைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தீவிரத்தையும், அது நீடிக்கும் கால அளவையும், உலக அளவில் அது ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் மந்தநிலை என்ற பெயரை விட மார்க்ஸ் அழைத்த நெருக்கடி என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் திரும்பத் திரும்ப நிகழ்வது பற்றி ‘மூலதனம்' புத்தகத்தில் மார்க்ஸ் நிறைய விளக்கங்களை அளிக்கிறார். அவர் ‘நியூயார்க் டிரிப்யூன்' பத்திரிகையின் பொருளாதாரச் செய்தியாளராக 1850-களில் இருந்தபோது தந்த விளக்கம் மிகவும் ஆச்சரியமானது.
உலகின் முதல் பொருளாதார நெருக்கடியாகக் கருதப்படுகிற 1857- பொருளாதார நெருக்கடியைப் பற்றி அவர் விவாதிக்கிறார். ‘கிரெடிட் மொபைலைர்' என்ற வங்கிதான் உலகின் முதல் ‘முதலீட்டு வங்கி'. அந்த வங்கியை மையப்படுத்தியே மார்க்ஸ் விவாதிக்கிறார். அந்த வங்கி தனது முதலீட்டை விட 10 மடங்கு கடன்பெறுவதற்கு அந்த வங்கியின் சட்டதிட்டங்கள் அனுமதித்ததைக் கண்டு மார்க்ஸ் அதிர்ந்துபோகிறார். அந்த வங்கி தனது நிதியாதாரத்தையெல்லாம் பங்குகள் வாங்குவதற்கும் பிரான்சின் ரயில் பாதைத் திட்டங்கள், பெரும் தொழிற்சாலைகள் போன்ற பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தியது. கடைசியில் மிதமிஞ்சிய உற்பத்தி கிடைத்தது. ஆனால், அந்த உற்பத்தியைக் கொள்வாரில்லை. விளைவு அந்த வங்கியின் பங்குகள் அதலபாதாளத்துக்கு வீழ்ந்தன. கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு அந்த வங்கி ஆளானது. அந்த வங்கியை அப்படியே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலில் பலியான ‘லேமன் பிரதர்ஸ்’ உள்ளிட்ட வங்கிகளுடன் பொருத்திப் பாருங்கள். மார்க்ஸ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது புரியும்.
மார்க்ஸியத்தின் தனித்தன்மை
முதலாளித்துவ உற்பத்தி முறையை இயக்கும் விதிகளை இத்தகைய அசாதாரண ஆற்றலோடு மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். அதோடு மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கையும் தெளிவாக்கினார். மனிதச் சமூகம் எங்கிருந்து துவங்கி, எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனும் விவாதத்தை மார்க்ஸ் மனித இனத்தின் முன் வைத்தார்.
இதனால் மனிதச் சமூக வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் நிற்கிறோம் என்பதை அந்தந்த தேசங்களின் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் பிறந்தன.
முதலாளித்துவ உற்பத்தி முறை வளராத நாடுகளின் மக்களையும்கூட மார்க்ஸின் விஞ்ஞான சோஷலிஸம் மற்றும் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் கவர்ந்தன. மார்க்ஸியம் எனும் விமானம் கிடைத்த பிறகு, பிற தத்துவங்கள் எனும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்ய நிலபிரபுத்துவ சமூக மக்களும் மறுத்தனர். தனியொரு நாட்டில் சோஷலிஸப் புரட்சி வராது என்றும், முதலாளித்துவம் பழுத்துக் கனிந்த இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் சோஷலிஸம் ஏற்படும் என்றும் இருந்த தர்க்கரீதியான எதிர்பார்ப்புகளையெல்லாம் மக்கள் தகர்த்தெறிந்தனர். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்களாக ரஷ்ய மக்கள் மாறினார்கள். உலக சாதனை புரிந்த விளையாட்டு வீரன் தன் சாதனையைத் தானே முறியடித்துக்கொள்வதுபோல மார்க்ஸியம் தன்னைத் தானே முறியடித்துக்கொண்டு முன்னேறியது.
மார்க்ஸியத்தைக் கைக்கொண்டு வேகமாக முன்னேறு வதற்கான மக்களின் முன்முயற்சிகளும், அவற்றைத் தடுப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்புகளுமாக உலகம் மார்க்ஸுக்குப் பிறகு பரபரப்பாக மாறியது. மனித இனத்தைப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும்படி உந்தித்தள்ளியதுதான் மார்க்ஸியத்தின் மாபெரும் தனித்தன்மையாக இருக்கிறது.
மூலதனம் தவிர்த்த மார்க்ஸியத்தின் மற்ற படைப்புகள் பழங்காலத் தத்துவங்களை விமர்சிக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தின் உழைக்கும் மக்களின் வாழ்நிலை பற்றிய அக்கறையுடன் கூடிய ஆய்வுகள், கம்யூனிஸ விஞ்ஞானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள், மனிதத் துன்பங்களுக்கெல்லாம் நிரந்தரமான தீர்வை உருவாக்குவதற்கான கோட்பாடுகள், பெண்ணுரிமை கருத்துகள், இயற்கையின் இயங்கியல் தன்மையை நிலைநாட்டல், பல நாடுகளில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு ஆகியவையும் உள்ளன.
மார்க்ஸியத்தின் ஆற்றல் மிக்க தலையீடு மனித குலம் இனி செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்துள்ளது. எங்கல்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “மார்க்ஸ் பிறக்காவிட்டால்கூட மார்க்ஸ் வெளிப்படுத்திய கருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீண்ட காலம் ஆகியிருக்கும். கடின உழைப்பால் தனது கருத்தை முழுமைத் தன்மையோடு கட்டி எழுப்பும் தகுதி மார்க்ஸுக்குத்தான் இருந்தது.”
மறுபிறவி முத்தம்
மார்க்ஸ் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களில், ஜென்னியை முத்தமிடும்போது தான் மறுபடி மறுபடி பிறப்பெடுத்து பிராமணர்களின் மறுபிறவிக் கொள்கையை உணர்வதாகக் கூறுகிறார். இதைத் தவிர இந்தியச் சமூகத்தின் சாதியத் தனித்தன்மையைக் கூர்ந்து உற்றுநோக்கக் காலம் அவருக்கு உரிய நேரம் அளிக்கவில்லை. சாதியும் வர்க்கமும் இணைந்த இந்தியச் சமூக அமைப்பு பலவிதமான மார்க்ஸிய முன்முயற்சிகளுக்கான ஆய்வகமாக இருக்கிறது. சாதியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வர்க்க உணர்வுக்குள் வழுக்கிக்கொண்டு போய்விடலாம் என்ற முயற்சிகளுக்கு அது இடம்தர மறுக்கிறது.
நிலபிரபுத்துவச் சமூகத்தை அழித்து அதன் சாம்பலில் முதலாளித்துவச் சமூகம் உருவாகும் என்ற பொதுவான மார்க்ஸிய தீர்க்கதரிசனத்தை இந்தியச் சமூகம் பொய்யாக்கியுள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகமான பழங்குடிகள் வாழும் இந்தியாவில், தலித் மக்களும் நாடோடி மக்களும் கோடிக் கணக்கில் வாழும் இந்தியாவில், அவர்களின் இதயங்களுக்கு உள்ளே இன்னமும் போதுமான அளவு மார்க்சியம் போகவில்லை என்பது இந்திய மக்களின் ஒட்டுமொத்த விடுதலையைத் தள்ளிப்போடுகிறது.
மார்க்ஸியம் என்றால் மக்கள் மீதான நிபந்தனையற்ற நேசம். துன்பங்களிலிருந்து கடைசி மனிதனையும் விடுவிப்பதற்கான உயர்ந்தபட்ச வீரம். மக்களுக்காக அனைத்தையும் இழக்கும் தியாகம். இவை ஏற்கெனவே பெருமளவில் மார்க்ஸியத்தின் பெயரால் செய்யப் பட்டிருந்தாலும் மக்களின் தேவையோ எங்கோ இருக்கிறது.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம், பிற்போக்குத் தன்மைகள் போன்றவை இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
- த. நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in

மாறாத வடுக்களை தந்த குற்றப்பழங்குடிச் சட்டம்: மே 4- நூற்றாண்டு தினம்

மே 4 - குற்றப்பழங்குடி சட்டத்தின் முதல் ரேகை பதிக்கப்பட்ட நாள். தமிழகத்தில் இந்தச் சட்டம் பிரயோ கிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு நிறைவடைந்திருக்கிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது ஆக்டபஸ் ஆதிக்கத்தை வியாபித் துப் போட்டிருந்த நாடுகளில் எல்லாம் அங்குள்ள ஆதிக்ககுடி களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் சி.டி. ஆக்ட் (Criminal Tribals Act 1023) என்று சொல்லப்படும் குற்றப் பழங்குடிச் சட்டம். பொடா, தடா சட்டங்களைவிட கொடுமையான சட்டம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.
1871-ல் இந்தச் சட்டத்தை பிரயோ கிக்க ஆரம்பித்தது வெள்ளையர் அரசாங்கம். இந்தியாவில் இந்தச் சட்டம் 1911-ல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் 1914-ம் ஆண்டு மே 4-ம் தேதி குற்றப் பழங்குடிச் சட்டம் முதல்முறையாக பிரயோகிக்கப் பட்டது. இந்தியாவில் மொத்தம் 537 சாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் ஏவப்பட்டது. தமிழகத்தில் இந்தப் பட்டியலில் இருந்த சாதிகளின் எண்ணிக்கை 79.
நாடோடிகளாக இருப்பவர்கள், விவசாயம் செய்யாதவர்கள், அடிக் கடி குற்றச் செயல்களில் ஈடுபடுகிற வர்கள், கால்நடைகளை வளர்க்காத வர்கள், அரச பரம்பரையில் வந்தவர் கள் என சொல்லிக் கொண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடு படுகிறவர்கள், ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை நடத்தி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுபவர்கள் எல்லாம் குற்றப் பழங்குடியினர் என பட்டியல் போட்டிருந்தது பிரிட்டிஷ் அரசு.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி, சொறிக்கான்பட்டி, பூசலபுரம், மேலஉரப்பனூர் ஆகிய ஊர்களில் இருந்த பிரமலைக் கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள் மீதுதான் முதன்முதலாக குற்றப் பழங்குடிச் சட்டம் பாய்ந்தது. இந்தச் சட்டத்தின்படி, 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரவானதும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது தாலுகா அலுவலகத்தில் போய் தங்கிவிட வேண்டும். அங்கே ‘ஏ’ ரிஜிஸ்டர், ‘பி’ ரிஜிஸ்டர் என இரண்டு பதிவேடுகள் இருக்கும். இரவில் தங்க வரும் ஆண்கள், ‘ஏ’ ரிஜிஸ்டரில் ஒவ்வொரு நாளும் கைநாட்டு வைக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூர் செல்ல நேரிட்டால், அந்தப் பகுதி கர்ணத்திடம் ராதாரிச் சீட்டு என்ற ஒப்புகைச் சீட்டு பெற்று, அதை ‘பி’ ரிஜிஸ்டரில் பதிவு செய்த பிறகே செல்ல முடியும்.
மணமகனாக இருந்தாலும், திருமணத்தன்று இரவு வீட்டில் தங்க முடியாது. கட்டாயம் போலீஸ் ஸ்டேஷனில் போய் படுத்துவிட வேண்டும். பெற்றவர்களோ உடன் பிறந்தவர்களோ செத்துக் கிடந்தால் கூட இரவில் வீட்டில் தங்கக் கூடாது. இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சோதனை என்ற பெயரில் ஆண்களை படுத்தி எடுத்தது வெள்ளைக்கார போலீஸ். அந்த அளவுக்கு கொடூரமான சட்டமாக இருந்தது குற்றப் பழங்குடிச் சட்டம்.
1920 ஏப்ரல் 3-ல் இந்தச் சட் டத்தை எதிர்த்து உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கிளர்ச்சி வெடித்தது. ‘‘நாங்கள் நாடோடிகள் இல்லை; விவசாயம் செய்து பிழைக்கிறோம். எனவே, குற்றப்பழங்குடிச் சட்டம் எங்களுக் குப் பொருந்தாது’’ என கைநாட்டு வைக்கச் சொன்ன அதிகாரிகளோடு மல்லுக்கு நின்றார்கள் மக்கள். அது மோதலாக வெடித்ததால் அந்த மக்கள் மீது 152 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீஸ். இதில் மாயக்காள் என்ற பெண் உள்பட 17 பேர் பலியாகி னர். 750 பேரை கைது செய்தது போலீஸ். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, குற்றப் பழங்குடிச் சட்டத்தின் குரூரம் இன்னும் அதிகமானது.
இந்தச் சட்டத்தை நீக்க மேற் கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எல்லாம் பயன் தராத நிலையில், 1937-ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்ட மன்றத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றப்பழங் குடிச் சட்டத்தை நீக்குவோம்’என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தது காங்கிரஸ். ஆனாலும் 1948-ல் சுதந்திர இந்தியாவில்தான் அந்தச் சட்டம் அகற்றப்பட்டது.

Friday, 2 May 2014

கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி

தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரீய வித்யாலயா வித்யாலயா பள்ளியில் PGT,TGT,PRT பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 04 மற்றும் 05 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணிகள் விவரங்கள்:
1.PGT ஆசிரியர் பணி:
a. English
b. Hindi
c. Economics
d. Physics
e. Maths
f. Computer Science
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
2.TGT ஆசிரியர் பணி:
a. Hindi
b. Sanskrit
c. Maths
d. Social Science
e. Science
கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
3.PRT
4. Computer Instructor
5. Coaches for Sports, Music & Dance, Yoga
6. Tamil
7. Doctor
8. Counsellor
9. Nurse
கல்வித்தகுதி: தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள், அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் காலம்:
பணி 1,2 மற்றும் 3 பணியிடங்களுக்கு 04.05.2014 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
பணி 4 முதல் 9 பணியிடங்களுக்கு 05.05.2014 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குhttp://www.kv2madurai.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பொது அறிவு

* தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது?
9 ஜனவரி 2010
*  அமைதி, ஆயுதக் குறைப்புக்காக வழங்கப் பெறும் இந்திரா காந்தி விருதைப் பெற்ற பிரதமர் யார்?
வங்கதேச பிரதமர் ஹேக் ஹசீனா (2010)
* தேர்தல் ஆணையத்தின் வைர விழா எங்கு, எப்போது நடைபெற்றது?
தில்லி 25 ஜனவரி 2010
* கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான வங்காள முதல்வர் காலமானது யார்? எப்போது?
ஜோதிபாசு, 17 ஜனவரி 2010
* ரேஷன் கடைகளில் வாங்கிய பொருட்களை அங்கேயே மக்கள் எடைபோட்டுச் சரிபாக்கும் திட்டம், எங்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?
நெல்லையில் - பொதுத் தராசுத் திட்டம்
*உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு எது?
சவுதி அரேபியா
*சர்வோதய இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
*புரட்சிக் கவிஞர் பாவேந்தர் என்று புகழ்ப்பெறும் கவிஞர் பெயர் என்ன?
பாரதிதாசன்
*போட்டோ பிரசுரமான முதல் சிற்றிதழ் சிரஞ்சீவி இதழின் ஆசிரியர் யார்?
பொன்னி முருகு சுப்பிரமணியன்
*அல்மோரா கோடை வாசஸ்தலம் உள்ள மாநிலம் எது?
உத்தராஞ்சல்
*சந்திரனை ஆராய 'சாங்-இ' என்னும் செயற்கைக் கோளை அனுப்பி வைத்த நாடு எது?
சீனா
*ஐ.சி.சி 2010ம் ஆண்டு சிறந்த டெஸ்ட் அணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி எது?
இந்தியா

சத்யஜித் ரே: இந்திய ஆன்மாவின் கலைஞர்

ஒருமுறை ஈரானிய இயக்குனர் மக்மல்பஃபைச் சந்தித்தபோது நான் அவரிடம் “இந்தியப் படங்கள் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். “இந்தியப் படங்கள் என்றால் வண்ண வண்ணமாக உடையணிந்து, கூட்டமாக ஆடுகிற படங்களைக் கேட்கி றீர்களா?” என்று கேட்டார். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. “நல்ல இந்தியப் படங்கள்” என்று திரும்பக் கேட்டேன். “அப்படிப்பட்ட படங்களை இந்தியாவில் எடுக்கிறீர்களா?” என்று புன்னகைத்தார். “நான் பார்த்த ஒரே இந்தியப் படம் ‘பதேர் பாஞ்சாலி’. அதைவிடவும் சிறந்த படங்கள் இருக்கின்றனவா? அதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் நான் எனது புதிய படத்தைத் தொடங்கும் முன் ‘பதேர் பாஞ்சாலி’யைப் பார்ப்பேன். அதைப் பார்த்ததும் எனக்கு புதிய உத்வேகம் வந்துவிடும்” என்று சொன்னார். “‘பதேர் பாஞ்சாலி’ ஏன் உங்களைக் கவர்கிறது?” என்று கேட்டேன். அதில் இருக்கும் உண்மையும் எளிமையும் எனக்குப் பெரிய உந்து தலாக இருக்கிறது. முக்கியமாக, இந்தியாவின் ஆன்மா அந்த சினிமாவில் இருக்கிறது” என்று சொன்னார்.
இந்தியாவின் ஆன்மா
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்ற காந்தியின் மேற்கோள் என் நினைவுக்கு வந்தது. உலகின் முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான மக்மல்பஃப், ஆன்மாவைப் பதிவு செய்த ஒரு திரைப்படமாக ‘பதேர் பாஞ்சாலி’யை ஏன் கருதினார்? காரணம் எளிமையானது. அந்தப் படத்தில் இயல்பான ஒரு கிராமம் இருந்தது. இயல்பான கிராமம் என்பது இயல்பான மனிதர்களால் ஆனது. ஓர் இந்தியக் குடும்பத்தில் வயதானவர்களும் குழந்தைகளும் மிக முக்கியமான அங்கத்தினர்கள்.
‘பதேர் பாஞ்சாலி’யில் துர்கா, அப்பு என்கிற இரண்டு அப்பாவிக் குழந்தைகள் இருந்தார்கள். அவர்களின் விளை யாட்டுக்கள் இருந்தன. கதை சொல்லும் ஒரு பாட்டி இருந்தார். குழந்தைகள் மற்றும் ஒரு பாட்டியின் இயல் பான பங்களிப்பு என்பது இந்திய சினிமாவில் இது தான் முதன்முறை என்றுகூடச் சொல்லலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ரே நகரத்தில் வளர்ந்தவர். கிராம வாழ்க்கைபற்றி அவர் எதுவுமே நேரடியாக அறிந்தி ருக்கவில்லை. அவர் அறிந்த கிராமங்களெல்லாம் சாந்தி நிகேதனில் அவர் ஓவியம் பயிலும்போது சக ஓவியர் களின் ஓவியங்கள் வழியே காட்சிகளாகப் பார்த்த கிராமங்கள்தான். மேலும், அவர் எடுத்துக்கொண்ட விபூதி பூஷனின் நாவலும் கிராமத்தின் இயல்புடன் இருந்தது.
திரைப்படங்களை வரைந்தவர்
ரே ஒரு ஓவியர் என்பதால், காட்சிகள் வழியாகவே அவரது சினிமாவையும் எழுதினார். உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசோவா, ரேயின் படங்களைப் பற்றிச் சொல்லும்போது திரைப்படங்களை எடுத்தார் என்று சொல்லவில்லை. ‘திரைப்படங்களை வரைந்தார்' என்று சொன்னார். நாவலைத் திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்ததும் திரைக்கதையை எழுதுவதற்கு முன், ரே அந்த நாவலின் அற்புதமான கணங்களைப் படங்களாக வரைந்தார். தான் வரைந்த படங்களை வைத்துக்கொண்டுதான் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்தார்.
கல்லூரி நாட்களில் நான் ‘பதேர் பாஞ்சாலி’ படத்தைப் பார்ப்பதற்கு முன், படத்துக்காக அவர் வரைந்திருந்த மூன்று ஓவியங்களைத்தான் பார்த்தேன். ஒன்று, பாட்டியும் சிறுமியும் கையைப் பிடித்துக்கொண்டு தூரத்தில் இருக்கிற கிராமத்தை நோக்கி ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்துசெல்கிற ஓவியம். இரண்டாவது, புகை கக்கி வரும் ரயிலின் முன்னால் கூந்தலும் உடையும் பறக்க ஒரு சிறுமி நிற்கிற ஓவியம். மூன்றாவது, வெண்மையான நாணல் செடிகளுக்கு நடுவே இரண்டு குழந்தைகள் ஓடுகிற காட்சி. படம் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுத்த இந்த மூன்று ஓவியங்களும் அதே தன்மை மாறாமல் காட்சிகளாகியிருப்பதைப் பார்க்கும்போது, காட்சியின் மீது அவருக்கிருந்த ஆளுமை ஆச்சரியமாக இருந்தது.
கொல்கத்தாவுக்கு அருகில் இருந்த போரல் என்கிற கிராமத்தில்தான் ‘பதேர் பாஞ்சாலி’யை அவர் எடுத்தார். இதில் சில நடிகர்கள் தவிர, மற்ற அனைவரும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள்தான். 60 வருடங்களுக்கு முன்பு, நடிப்பதைத் தொழில்முறையாகக் கொள்ளாத கிராமத்து மனிதர்களை நடிகர்களாக்குகிற வழக்கத்தை இந்திய சினிமாவில் ஆரம்பித்து வைத்தவர்களில் ரே முக்கியமானவர். அதோடு, திரைப்படம் என்பது முழுமையான காட்சி மொழி என்பதையும் அது வெறுமனே கதை சொல்வதற்கான ஊடகம் மட்டுமல்ல என்பதையும் ரே தனது படங்களின் வழியே நிறுவினார். உரையாடல் இல்லாமல் கதை சொல்வதையே ஓர் ஓவி யராக அவர் பெரிதும் விரும்பினார். மழை வருவதற்கு முன் குளத்தின் மேல் நீந்தும் பூச்சிகள், தட்டான்கள், திருடிய நகையைக் குளத்தில் எறிந்ததும் ரகசியம்போல மூடிக்கொள்ளும் நீர்ப்பாசி என ஒரு கிராமத்தின் தன்மையைக் கதையுடன் சேர்ந்த காட்சிப் படிமங்கள் வழியே பதிவுசெய்தார்.
மனித ஆவணம்
“ஒரு படத்தின் ஒரே ஒரு சட்டகத்தைப் பார்த்தால் போதும் அது என்ன விதமான படம் என்று என்னால் சொல்லிவிட முடியும்” என்று ரே ஒரு நேர்காணலில் சொன்னார். அதற்கு உதாரணமாக அவரது படத்தையே சொல்லலாம். ‘பதேர் பாஞ்சாலி’ பாதி எடுக்கப்பட்ட நிலையில் பணம் இல்லாமல் படப்பிடிப்பு நின்றது. அப்போது படத்தின் நிழற்படங்களைப் பார்வையிட்ட நியூயார்க்கின் நவீன ஓவியக் கண்காட்சியகத்தைச் சேர்ந்த மன்ரே வீலர் என்பவர் ஆச்சரியமடைந்தார். “இந்த நிழற்படங்களை எங்கள் கண்காட்சிக்கு அனுப்ப முடியுமா?” என்று கேட்டார். படத்தில் இருந்த இயல் (காம்போசிஷன்), ஒளியமைப்பு, மற்றும் இயல்பான கிராமத்து முகங்கள் என நிழற்படங்களே படத்தின் இயல்பைச் சொல்லின.
சட்டை அணியாத அப்புவைப் பள்ளிக்கு அனுப்புவதற் காக அக்காவும் அம்மாவும் அவனைத் தயார்செய்கிற ஒரு நிழற்படம் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் அன்பைச் சொல்லப் போதுமானதாக இருந்தது. அந்தப் படத்தில் பம்பரத்தில் ஆரம்பித்து கூட்டாஞ்சோறு வரை கிராமத்துக் குழந்தைகளின் விளையாட்டுக்கள் இருந்தன. தங்கள் வறுமையை மீறி மழையில் நனைந்து ஆடுகிற குழந்தைகளின் கொண்டாட்டம் இருந்தது. இதையெல்லாம் கடந்து எளிய மனிதர்களின் அற்புதமான வாழ்க்கை இருந்தது. இதனால் ‘கான்’ திரைப்பட விழாவில் ‘சிறந்த மனித ஆவணம்’ என்று பாராட்டப்பட்டு அறிமுக இயக்குநருக்கான விருதும் கிடைத்தது.
தனது 36 படங்களில் ஒன்றிரண்டு தவிர, மற்ற அனைத்தையும் இலக்கியங்களிலிருந்தே உருவாக்கினார். அவரது கடைசிப் படமான ‘அகாந்தக்’ படப்பிடிப்பு நடக்கும் போது அவர் இரண்டு மாரடைப்புகளைக் கடந்திருந்தார் என்றாலும், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு படத்தை இயக்கினார். அருகில் இதய மருத்துவர்கள் இருந்தார்கள். அரங்கத்துக்கு வெளியில் சகல முன்னேற்பாடுகளுடன் அவசரச்சிகிச்சை ஊர்தி நின்று கொண்டிருந்தது. ஓவியர், திரைப்பட விமர்சகர், சிறுகதை ஆசிரியர், குழந்தைகள் இலக்கியம் எழுதியவர், (இவரது கதையிலிருந்தே ‘E.T’ என்கிற படத்தை ஹாலி வுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது) கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரி யர், இசைக் கலைஞர் எனப் பல கலைகளிலும் தனக் கிருந்த புலமையை முழுவதுமாகத் திரைப்படத்தில் பயன் படுத்தினார். திரைப்படத்துக்கான உலகின் சிறந்த விருதுகள் அனைத்தையும் பெற்றவர். இறுதியில், வாழ்நாள் சாதனையாக ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் இவர்தான்.
எளியதே அழகு
படத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அதை உருவாக்கிய விதத்திலும் எளிமையைப் பின்பற்றினார். முதல் படத்துக்குத் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றதும் தன் மனைவியின் நகைகளை அடகு வைத்தும் தனது ஓவியப் புத்தகங்களையும் இசைத்தட்டுகளையும் விற்றுப் படம் எடுத்தார். ஏறத்தாழ இரண்டரை வருடத் துக்கும் மேலாக நடந்த படப்பிடிப்பில் பெரும்பாலும் இயற்கை ஒளியையும், இயல்பான வீடுகளையும் பயன்படுத்தினார். மிகக் குறைவான படப்பிடிப்புக் குழுவுடன் வேலைசெய்தார்.
விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு, கிடைத்த உபகரணங்களைக் கொண்டு வேலை நாட்கள் போக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் படப்பிடிப்பை நடத்தி னார். எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தன் உடமை களைப் பணயம் வைத்து ஒரு சினிமாவை எடுத்தார். “ஒரு நல்ல சினிமாவுக்கான கதையை வாழ்க்கை யிலிருந்துதான் எடுக்க முடியும். அது படம் எடுப்பவரின் ஆன்மாவிலிருந்து முழுமையாக வெளிப்பட வேண்டும்” என்றும் நம்பினார். கதாபாத்திரங்களின் எளிமையும் அப்பாவித்தனமும் உண்மையும் அதனைக் காட்சி மொழியாகப் பதிவுசெய்த நேர்த்தியும் ரேயை இன்றும் உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வைத்திருக் கிறது. ஏனெனில், அவர் முழுமையான இந்திய இயக்குந ராக இருந்தார். இந்தியத் தன்மையைப் பதிவுசெய்தார்.
‘பதேர் பாஞ்சாலி’ வெளியாகி 60 வருடங்கள் கடந்து விட்டன. திரைப்படத்துக்கான உலகளாவிய வணிக சாத்தியங்களும், சகல தொழில்நுட்ப வசதிகளும் பெருகி விட்டன. இந்திய சினிமா என்பது, உலகில் அதிகத் திரைப்படங்கள் எடுக்கும் கேளிக்கைத் துறையாக வளர்ந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகம் இருந் தாலும் நாம் எடுக்கும் படங்களில் இந்தியாவின் ஆன்மா இருக்கிறதா? கேள்விக்கான பதிலைத் தீவிரமாக யோசித் துப் பார்க்கலாம். விடை கிடைக்கவில்லையெனில் ‘பதேர் பாஞ்சாலி’யை இன்னொருமுறை பார்க்கலாம்.
செழியன், திரைப்பட ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: chezhian6@gmail.com

உழைக்கும் மக்கள் யாவரும்...

தொழிற்சாலைகள் என்ற நவீன உற்பத்தி முறைக்குள் மனிதர்கள் வேலை செய்ய வைக்கப்பட்டபோது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட அவர்கள் வேலை செய்யும்படியான சூழல் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் என்று உரிமைகள் எதுவும் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய காலம் இல்லை அது. எல்லோரும் கசக்கிப் பிழியப்பட்டனர். 10 மணி நேரம்தான் வேலை செய்வோம் என்று முதலில் எதிர்ப்பு ஆரம்பித்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு, 8 மணி நேர வேலை என அவர்களின் கோரிக்கை உயர்ந்தது.
கடுமையான போராட்டங்களின் விளைவால், அமெரிக்காவில் 1856 முதல் சில இடங்களில் 8 மணி நேர வேலை அளிக்கப்பட்டது. ஆனாலும், அனைவருக்கும் அந்த உரிமை கிடைக்கும் வகையில் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கார்ல் மார்க்ஸ் தலைமையிலான சர்வதேசத் தொழிலாளர் இயக்கம் எழுப்பியது. 1867-ல் தான் வெளியிட்ட மூலதனம் நூலின் முதல் தொகுதியில் 8 மணி நேர வேலையை மார்க்ஸ் விவாதித்துள்ளார்.
1886 மே 4-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த மோதல்கள், தொழிலாளர்கள் படுகொலைக்குப் பிறகு, 8 மணி நேர வேலையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி தீவிரமானது. 8 மணி நேர வேலை நேர உரிமையை அனுபவிக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவடைந்தது.
1916-ல் அமெரிக்க ரயில்வே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை எனச் சட்டம் இயற்றப்பட்டது.1938-ல் அமெரிக்கா வாரத்துக்கு 44 மணி நேர வேலையை (சராசரியாக 8 மணி நேரத்துக்கும் குறைவாக) சட்டப்படியான வேலை நேரமாக அறிவித்தது. இவ்வாறு நியாயமான வேலை நேரத்தை அனுபவிக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவடைந்துவந்துள்ளது. 1914-ல் அமெரிக்க ஃபோர்டு மோட்டார் கம்பெனி 8 மணி நேர வேலையை அறிவித்தது.
இந்தியாவில் 8 மணி நேரம்
1923-ல் சென்னையில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் நீதிமன்றம் அருகிலும், திருவல்லிக்கேணியிலும் மே தின நிகழ்ச்சிகளை நடத்தி, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியிட் டார். கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. இந்தியாவில் 1948 முதல் சட்டரீதியாக 8 மணி நேர வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் டாடா ஸ்டீல் நிறுவனம் 1912-ல் தனது தொழிலாளர்களுக்குத் தானாக முன்வந்து 8 மணிநேர வேலையை அளித்ததை நல்லெண்ணச் செயலாகவே பார்க்க வேண்டும்.
இன்றைய மேற்கத்திய தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையைத் தாண்டி சில துறைகளில் 6 மணி நேர வேலையையும் அனுபவிக்கிறது. அது தொடர்பான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலோ நேரம் காலம் பார்க்காமல் உழைத்தாக வேண்டிய வகையில் பழைய கால வேலை நேரங்கள் எட்டிப்பார்க்கவும் செய்கின்றன.
அமைப்புசாராத் தொழிலாளர்கள்
இந்தியா ஏறத்தாழ 49 கோடி தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகமாகத் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். அவர்களில் 94% பேர் அமைப்புசாராத் தொழில்களில் தான் வேலை செய்கிறார்கள். அரசு ஊழியர்களாக ஒரு கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். அவர்களையும் சேர்த்து ஏறத்தாழ இரண்டு கோடியே 70 லட்சம் பேர்தான் ஒழுங்கமைக்கப்பட்ட, அமைப்பு சார்ந்த தொழில்களில் உள்ளனர். அவர்கள்தான் பெரும்பாலும் 8 மணி நேர வேலையை அனுபவிக்கின்றனர் என்று சொல்லலாம். மற்ற 47 கோடித் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு 8 மணி நேர வேலை என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பணிகளில்தான் அமைப்புசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்த்து, வேலைக்காக இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களாக மூன்று கோடிப் பேர் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்களில் மத்தியக் கிழக்கு நாடுகளில் 40 லட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் கட்டிடப் பணிகளை அவர்கள் அங்கு செய்கின்றனர். அந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு. உள்நாட்டுக்குள்ளேயே வேலைக்காக இடம்பெயர்பவர்கள் 42 லட்சம் பேர் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன.
வேலைப் பாதுகாப்பு எதுவும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாக மூன்று கோடியே 60 லட்சம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட எந்த ஒரு உரிமையையும் இவர்கள் அனுபவிப்பதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவும் செய்கிறது.
இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு கோடியே 26 லட்சம் பேர்; அவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆபத்தான தொழில்களில் இருப்பதாகத் தெரிகிறது. குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும்கூட நடைமுறையில் அது இயல்பாக இருப்பதுதான் வேதனை.
நவீன அடிமைத்தனம்
அடிமைத்தனத்தின் இன்னமும் நீடிக்கிற வடிவமாக, கையால் மலம் அள்ளும் வேலையை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் என்று அரசு சொல்கிறது. ஆனால், ஐ.நா-வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் ஏழு லட்சம் பேர் இந்த இழிவில் சிக்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் பெண்கள்தான்.
இந்தியாவில் 50 லட்சம் பேர் கொத்தடிமை நிலையில் இருப்பதாக சேவை அமைப்புகளின் கணக்குகள் தெரிவிக் கின்றன. அவர்களில் தலித் மக்களும் பழங்குடிகளும் அதிகமாக உள்ளனர் என்று மத்திய திட்டக்குழுவின் கொள்கை உருவாக்கக் குழுக்களின் தலைவராக இருந்த பி.எஸ். கிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவில் இந்தத் தொழி லாளி வர்க்கம் சாதிகளாக உடைந்து நொறுங்கியுள்ளது. சுகாதாரப் பணி போன்ற சேவைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது இந்த உண்மையை எடுத்துக்காட்டும். இந்தியத் தொழிலாளிகளில் மிகச் சிறுபான்மையோருக்குத்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கின் றன என்ற நிலைமையில், அவையும் கூடப் புதிய பொருளா தாரக் கொள்கை, தாராளமயமாதல், உலகமயமாதல் ஆகியவற்றின் பெயரில் மீண்டும் பறித்துக்கொள்ளப்படும் அபாயங்கள் உருவாகின்றன. தொழில் வளர்ச்சிக்கான புதிய பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்போது, அங்கே தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் செயல்படாது எனத் தொழில் முனைவோருக்கு உறுதி யளித்துத் தொழிலாளர் உரிமைகளைக் கைவிடுகிற நிலைமைகளும் இன்று உள்ளன.
8 மணி நேரப் பணி என்பது தொழிலாளரை ஒரு மனிதராகக் கருதி அவருக்குரிய மாண்பை அங்கீகரிப்பதாகும். மனித உரிமைகள் பல மீட்டெடுக்கப்பட்ட இந்தக் காலத்திலும் 8 மணி நேர வேலை என்ற உரிமை இல்லாத தொழிலாளர்கள்தான் உலகில் அதிகம் என்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவதுதான் ஒரே வழி.
தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in

பாதுகாப்பு இல்லாத ரயில், பஸ் நிலையங்கள்: விழாக்காலங்களில் மட்டும் அக்கறை காட்டினால் போதுமா?

சென்னை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் போது மான பாதுகாப்பு இல்லை என்று பலதரப்பினரும் கருதி வந்த நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையில், நகரிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாட்டுக்கு உதாரணமாக ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையங்களில் ஒன்றான கோயம்பேடு நிலை யத்தில் பெயரளவில் மட்டும் மெட்டல் டிடெக்டர் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலான நேரங்களில் போலீஸார் நின்று சோதனையிடுவ தில்லை. பொங்கல், தீபாவளி போன்ற நேரங்களில் மட்டும் போலீ ஸாரின் நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில்கூட தீவிர நடவடிக்கை என்பது சில மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. மற்ற நாட்களில் மெட்டல் டிடெக் டர் சோதனைக் கூண்டுகள் வெறும் சம்பிரதாயத்துக்காக வைக்கப் பட்டவை போலவே உள்ளன.
அங்குள்ள கண்காணிப்பு அறையில் ரகசிய கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்க போலீஸார் நியமிக்கப்பட்டிருந் தாலும், 24 மணி நேரமும் அங்கு அவர்கள் இருப்பதில்லை. இத னால் கண்காணிப்பு கேமரா வைத்தும் பலன் இல்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.
இதுபோல் சென்டிரல் ரயில் நிலையத்தில் பிரதான வாயில் களில் காவலுக்கு இருக்கும் பாது காப்புப் படையினர் அனைத்து பயணிகளும், மெட்டல் டிடெக் டர் சோதனைக் கூண்டு வழியாகச் செல்கிறார்களா என்று கண் காணிப்பதில்லை. பிரதான ரயில் நிலையத்திலேயே இப்படி என்றால், ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் புறநகர் ரயில் நிலையங்களில் கேட்கவே வேண்டாம். பிராட்வே, தி.நகர் போன்ற பஸ் நிலையங்களிலும் இதே கதிதான்.
இது குறித்து தனியார் நிறுவன ஊழியர் வளர்மதி கூறிய தாவது:- தேர்தலுக்கு முந்தைய தினம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு காவல் துறை அதிகாரியைக் கூட பார்க்கமுடியவில்லை. யாரு டைய உடைமைகளும் பரி சோதனை செய்யப்படவில்லை. தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, பணத்தை பட்டுவாடா செய்ய அரசியல்வாதிகள் உள்ளே நுழைந் திருந்தாலும் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்தால் மட்டும்தான் எல்லாரும் அலர்ட் ஆகிறார்கள். மற்ற நாட்களில் வழக்கம்போல் பாதுகாப்பு குறைவாகவே காணப்படுகிறது.
பெரிய மனிதர்களின் பாதுகாப் புக்காக போலீஸார் குவிக்கப்படு கிறார்கள். ஆனால், ஆயிரக் கணக்கான மக்கள் புழங்கும் இடங் களில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இனியாவது அமல்படுத்துவார்களா?
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிக ரிப்பதற்காக கடந்த 2011ம் ஆண்டில் தமிழக ரெயில்வே போலீஸார் ஒரு திட்ட அறிக்கையை தயா ரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பினர். ஆனால், அதில் குறிப்பிட்டிருந்த ஒரு சில பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. பூந்த மல்லி நெடுஞ்சாலையை ஒட்டி யமைந்த பகுதியில் பெரிய கிரில் வைத்த தடுப்புச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது அவற்றில் ஒன்று. ஆனால், ரயில் நிலையத்துக்குள் தினசரி வந்துசெல்லும் ஆயிரக் கணக்கான பயணிகளின் பைகளை யும் பார்சல்களையும் விமான நிலையத்தில் இருப்பது போல், நவீன முறையில் ஸ்கிரீன் செய் யும் வசதி செய்யவேண்டும் என்ற பரிந்துரையை அமல்படுத்தி யிருந்தால் வெடிகுண்டு வைத்த பை, ரயில் நிலையத்தினுள் சென் றிருக்க முடியாது. இனியாவது அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக போலீ ஸார் தெரிவித்தனர்.