இந்தியாவின் வேத உபநிடதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
ஜெர்மனியில் பிறந்தவர். பள்ளி யில் படித்தபோதே இசை, பாரம்பரிய மொழிகளைக் கற் றார். லெய்ப்ஸிக் பல்கலைக் கழகத்தில் மொழியியல் ஒப்பாய்வு பயின்றவர் பின்னர் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் கற்றார்.
19 வயதில் பெர்லின் சென்று, பிரெட்ரிக் ஸ்கெல்லிங் என்ற மொழியியல் வல்லுநருக்காக உபநிடதங்களை மொழி பெயர்த்தார். அப்போது ஏற் பட்ட ஈடுபாட்டால் சமஸ்கிருத மொழியில் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.
1846-ல் இங்கிலாந்து சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் நவீன மொழிகள் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். மொழியியல் ஒப்பாய்வுத் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ஸ்கெல்லிங்தான் இவரை மொழி வரலாற்றை மத வரலாற்றோடு தொடர்புபடுத்த தூண்டியவர்.
ஜெர்மானிய மொழியியலாளர், கீழைத்தேச ஆய்வாளர், இந்திய ஆய்வியலைத் தொடங்கிவைத்தவர், சமய ஒப்பாய் வுத் துறையை உருவாக்கியவர் என பன்முகத் தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East) என்ற 50 தொகுதிகள் அடங்கிய மிகப் பெரிய நூல் இவரது வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்கு இன்றும் ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.
‘தாம் எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயனர்தான் (பிரபல சமஸ்கிருத குரு) மாக்ஸ்முல்லராக பிறந்துள்ளார் என்று நினைத்தேன். அவரைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் உறுதியாகிவிட்டது’ என்பார் சுவாமி விவேகானந்தர்.
ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி ரூ.9 லட்சம் கொடுத்தது. அதன் கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆகின.
ராமகிருஷ்ண பரமஹம்சரை அவதார புருஷராக ஏற்றவர். அவரைப் பற்றி பல கட்டுரைகள், புத்தகம் எழுதியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட திலகரை நல்லபடியாக நடத்துமாறும் விடுவிக்க வலியுறுத்தியும் விக்டோரியா மகாராணிக்கு கடிதம் எழுதியவர். ராஜாராம் மோகன் ராய் உருவாக்கிய சீர்திருத்தக் கருத்துகளை ஆதரித்தார். வேதங்கள் உருவான காலகட்டத்தை நிர்ணயித்தவர்களில் முதன்மையானவர் இவர். இவரது புகழ் பெற்ற மற்றொரு நூல் ‘இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள்.’
‘இந்தியா ஒருமுறை கைப்பற்றப்பட்டுவிட்டது. அது மற்றொரு முறையும் கைப்பற்றப்பட வேண்டும். இந்த முறை அது கல்வியால் கைப்பற்றப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
‘இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்கவேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும் சுயமரியாதையும் விழித்தெழும்’ என்றவர். இந்தியா, இந்திய மக்கள் மீது மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார். இந்தியா அனைத்துவித செல்வங்கள், அழகு நிறைந்த பூலோக சொர்க்கம் என்று போற்றிய இவர் 76-வது வயதில் மறைந்தார்.
No comments:
Post a Comment