Tuesday, 9 December 2014

மங்கள்யானின் நிமிடங்கள்...

அண்மையில் திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா நடந்தது. அதில் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் பற்றிய அரிய தகவல்களை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் குதூகலமாகப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், பொதுவாகப் பூமியில் இருந்து மேல் நோக்கி ஒரு பொருளை 200 கிமீ.தூரத்துக்கு நொடிக்கு 6.5 கிமீ.வேகத்தில் செலுத்தினால் அது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கும். இதுபோலதான், செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. இந்த வேகத்தில் விமானத்தில் சென்றால் டெல்லியிலிருந்து திண்டுக்கல்லுக்கு நான்கு நிமிடங்களில் வந்துவிடலாம். ஒரு மணி நேரத்தில் 25ஆயிரம் கிமீ தூரம் செல்லலாம்.
நொடிக்கு 11.5 கி.மீ வேகத்தில் மேல்நோக்கிச் சென்றால் புவியின் சுற்றுப்பாதையைக் கடந்து அடுத்த கோளின் சுற்றுப்பாதைக்குச் செல்ல முடியும். இந்தவகையில்தான், மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மங்கள்யானை அனுப்பும் திறன் கொண்ட ராக்கெட் இந்தியாவில் இல்லை. எனவே பி.எஸ்.எல்.வி.ராக்கெட் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இது உலகின் ராக்கெட் திறன் வரிசையில் நடுத்தரத்தில் உள்ளது. அப்படி உள்ள ராக்கெட் எப்படி நொடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் சென்று புவிச்சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் சுற்றுப்பாதைக்கு மங்கள்யானை அனுப்பியது. இதற்காக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட தந்திரம் அபாரமானது.
ஒரு கல்லை நேரடியாக எறிவதால் கிடைக்கும் உந்துசக்தியைவிடக் கயிற்றில் கட்டி பலமுறை சுற்றி பின் விடுவித்தால் கூடுதல் சக்தியுடன் அது இலக்கை நோக்கிச் செல்லும். இந்தத் தந்திரத்தையே விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். பிஎஸ்எல்வி.ராக்கெட் மூலம் புவியை ஆறுமுறை சுற்றி பின்பு மங்கள்யானை செவ்வாய் கிரக வட்டப்பாதையை நோக்கி விடுவித்தது. விஞ்ஞானிகளின் இந்த சாதுர்யம் உலக அறிவியலாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்று பெருமிதப்பட்டார்.
செவ்வாயை நோக்கி என்றால்..
அவர் மேலும் “செவ்வாயை நோக்கி மங்கள்யானை எப்படி அனுப்புவது?” என்று அவர் மாணவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கினார்.
சூரியச் சுற்றுப்பாதையில் செவ்வாய் சுற்றிக் கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கும். அந்தச் சுற்றுப்பாதையில் செவ்வாயின் வேகம், எந்த மாதத்தில், நேரத்தில், நொடியில் எந்த இடத்தில் இருக்கும் என்பதைக் கணக்கிட்டுத்தான் மங்கள்யானை நாம் அனுப்பினோம். பறவையைச் சுடுபவர்கள் அது பறந்து வரும் இடத்தில் இருந்து சிறிது முன்னதாக சுடுவதைப்போன்ற நிலைதான் இது. இதற்கு ஏற்ப மங்கள்யானைப் பூமியில் தயார்படுத்தினோம். கடந்த 2013 நவம்பரில் மங்கள்யானை நம்மால் ஏவியிருக்க முடியாவிட்டால் 2016-ல்
தான் அதை அனுப்ப முடியும். அந்தவகையில் செவ்வாயின் சுற்றுப்பாதை அமைந்திருந்தது. மேகம், இடி, மின்னல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் நிர்ணயித்த நேரத்தை விட 10 நாள் தாமதமாகத்தான் மங்கள்யான் புவியைவிட்டுக் கிளம்பியது.
செவ்வாயின் பாதையில்
மங்கள்யான் செவ்வாயை நோக்கிச் செல்லும்போது சூரியக் கதிர்களின் தாக்கத்தால் இலக்கை நோக்கிய அதன்பாதை விலகும். இதையும் கணக்கிட்டே விஞ்ஞானிகள் ஏவுபாதையை வடிவமைத்திருந்தனர். இதற்காக 5 முறை பாதை திருத்தம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் 3 முறை மட்டுமே பாதை திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.
செவ்வாய் கிரகத்துக்கு அருகில் சென்றதும் 36 கி.மீ வேகத்தில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் மங்கள்யான் செவ்வாயில் மோதிச் சிதறிவிடும் என்ற அபாயத்தை விஞ்ஞானிகள் எப்படிச் சமாளித்தனர் என்பதை அவர் விளக்கினார். “அதன் வேகத்தை எப்படிக் குறைப்பது? பைக் என்றால் பிரேக் பிடிக்கலாம். முதல் கட்டமாக அதன் இன்ஜின் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும். புவியில் இருந்து 2 கோடி கி.மீ தூரத்தில் செல்லும் மங்கள்யானின் வேகத்தை எப்படித்தான் குறைப்பது?
இதற்காக மங்கள்யானில் எட்டு குட்டி ராக்கெட்டுகளைப் பொருத்தியிருந்தோம். மங்கள்யானின் எதிர்திசையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ராக்கெட்டுகள் நிர்ணயித்த நேரத்தில் இயங்க, சென்று கொண்டிருந்த வேகத்துக்கு எதிராக அந்த ராக்கெட்டுகளின் உந்து சக்தி செயல்பட மங்கள்யானின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. செவ்வாய் கிரகத்தில் இருந்து 250 கி.மீ தூரத்தில் இந்தக் குட்டி ராக்கெட்டுகள் செயல்பட்டால்தான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் மிகச் சரியாக மங்கள்யான் பொருந்தும். மிக மிக நுட்பமாக நிர்ணயித்த மைக்ரோ செகண்ட் நேரத்தில் அவை செயல்பட்டன.” என்றார் அவர்.
கணினி மூலம் கட்டளை
அவர் மேலும் பேசுகையில் “ கார் பொம்மையை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போல மங்கள்யானை இயக்க முடியாது. ரேடியோ சிக்னலில் மங்கள்யானைத் தொடர்பு கொண்டால் 12 நிமிடத்தில் அது போய்ச்சேரும். அங்கிருந்து கிடைக்கும் பதில் திரும்ப வர 12 நிமிடம் ஆகும். அவ்வளவு தாமதமானால் மைக்ரோ செகண்ட் நேரத்தில் கட்டளைகளைப் பிறப்பித்து மங்கள்யானை வழிநடத்த முடியாது. இவற்றை எல்லாம் முன்னரே கணக்கிட்டுக் கணினி மூலம் கட்டளைகளாகப் பதிவு செய்து மங்கள்யானுக்குள்ளேயே வைத்திருந்தனர்.
இதன்படி வேகம் குறைந்த மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையில் மிகச் சரியாகப் பொருந்தி தானாகவே செவ்வாயை வலம் வரத் தொடங்கியது. செவ்வாயின் குறுகியச் சுற்றுப்பாதை 250 கி.மீ.முதல் 80ஆயிரம் கிமீ.வரையிலான நீள்வட்டத்தைக் கொண்டிருக்கும். இதையும் கணக்கிட்டே
மங்கள்யான் பாந்தமாக அதன் சுற்றுப்பாதையில் இறங்கியது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலன்கள் அனைத்தும் குளோசப் ஷாட் படங்களையே அனுப்பி வருகின்றன. ஆனால் மங்கள்யான் மட்டுமே கோள் முழுமையும் தெரியும் வகையில் லாங்ஷாட் படங்களை எடுக்க முடியும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது” என்றும் தெரிவித்தார்.
தூசுக்கோளம்
பூமியைப் போன்றே செவ்வாயும் அச்சு சாய்ந்த கோளாகும். எனவே பூமியைப்போலவே செவ்வாயில் குளிர், வெப்பம் உண்டு. செவ்வாயைத் தூசுக்கோளம் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்குப் பருவமாற்றத்தால் தூசுப்படலம் செவ்வாயைக் கலங்கடிக்கும். இதை லாங்ஷாட் படங்கள் மூலம் மங்கள்யான் போட்டோ எடுத்துள்ளது. இந்தத் தூசுப்படலத்தை வைத்துச் செவ்வாயின் பருவநிலையையும் எளிதாகக் கணித்து விடலாம். மங்கள்யானைப் பொறுத்த அளவில் முதல்முயற்சியே வெற்றி.
மங்கள்யான் விண்ணில் ஒரு பக்கம் கடுமையான சூரியத் தாக்கத்தையும், மறுபுறம் மைனஸ் 200 டிகிரி குளிரையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதாவது ஒரு கையை பிரிஜ்ஜிக்குள்ளும், மறுகையை தீக்குள்ளும் வைப்பதுபோன்ற நிலை அது. பலமாதங்கள் விண்கலனில் இன்ஜின்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் மீண்டும் திரவ எரிபொருளை இயக்குவதில் பிரச்சினைகள் ஏற்படும். இந்தத் தொழில்நுட்பத்தையும் இந்தியாவே கண்டறிந்திருந்தது. இது போன்ற செயல்பாடுகளால் மங்கள்யானுக்கான செலவு வெகுவாகக் குறைந்தது.” என்றும் அவர் விளக்கினார்.
முயன்றால் எல்லோரும் விஞ்ஞானி ஆகலாம் என்று வெங்கடேஸ்வரன் மாணவர்களை உற்சாகமூட்டினார்.

No comments:

Post a Comment