Saturday, 6 December 2014

அம்பேத்கரின் இரண்டாவது ஆயுதம்

சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர் அம்பேத்கரின் தனிச்சிறப்பு. சாதிக்கு எதிரான யுத்தத்தில் அம்பேத்கரின் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, இடைவிடாத களச்செயல்பாடு. இன்னொன்று, கருத்தியல் ஆயுதம். இந்த இரண்டு ஆயுதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் கூர்மையாகத் தீட்டிக்கொண்டும், லாவகமாகப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார் அவர். கருத்தியலைப் பொறுத்தவரை அவரது வலுவான ஆயுதங்களுள் ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையும், ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் அடங்கும்.
‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி என்கிற ஆய்வுக் கட்டுரை’ மே 9, 1916-ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. அம்பேத்கர் தனக்கு முன்னதான ஆய்வாளர் களின் கருத்துகளை ஏற்றும் எதிர்த்தும் இதில் தெளிவாக்குகிறார்.
சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே!
தொடக்க காலச் சமுதாயங்களில் புறமண வழக்கம் தான் உண்டு என்பதைக் காட்டி, இந்தியர்களுக்கு அகமண முறை அந்நியமானது என்கிறார். (புற மணம்: வெவ்வேறு இனக் குழுக்களிடையே ஏற்படும் திருமண உறவு, அக மணம்: ஒரே குழுவுக்குள் ஏற்படும் திருமண உறவு). ஆனால், ‘நம்மிடையே சாதிகள் உள்ளனவே இது எதனால்?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘ஆய்ந்து பார்த்தோமானால் இந்தியாவைப் பொறுத்த மட்டில், புறமணத்தைவிட அகமணத்துக்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டதன் விளைவுதான் சாதிகளின் உருவாக்கம்’ என்று விடையளிக்கிறார்.
‘திருமண வயதொத்த ஆண்கள்-பெண்கள் சமநிலை குலையும் நிலையில் அகமண ஒழுக்கம் அழிந்துபோகும்’ என்பதை விவரித்து ‘இந்தச் சமநிலை குலையாமல் பாதுகாப்பதிலேயே சாதியச் சிக்கல் என்பது சுழல்கிறது’ என்பதைச் சான்றுகள் வழியாக நிறுவுகிறார்.
திருமணம் ஆன ஆண் இறந்துபோனால், அவனது மனைவியைத் தீயில் தள்ளுவதும் (சதி) அல்லது கட்டாயமாக விதவைக் கோலத்தைப் பூணச் செய்வதும் நடைமுறைகள். பெண் இறந்து ஆண் இருந்தால் - ‘குழுவுக்கு ஆண் முக்கியமானவன்; அதனினும் அகமண வழக்கம் முக்கியமானது’ என்பதால் பெண்களுக்குச் செயல்படுத்தும் மேற்கண்ட முறைகள் ஆண்களுக்குப் பேணப்படுவதில்லை. மாறாக, அவனாக விரும்பித் துறவு மேற்கொள்வது நடக்கலாம் என்பதை அம்பேத்கர் விளக்குகிறார். குழுவுடன் அந்த ஆணை இணைத்துக் கொள்ள, திருமணப் பருவம் எய்தாத ஒரு பெண் குழந்தையை மணம் முடித்தல் நடைபெறுகிறது.
இந்த நடைமுறைகளின்படி ‘சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே’ என்றாகிறது. இதுபோன்ற வழி வகைகள் இருப்பது சாதியை ஒத்தது. சாதி இந்த வழிவகைகளை உள்ளடக்கிக்கொண்டு இயங்குகிறது’ என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.
தாழிடப்படும் கதவுகள்
மேல்நாட்டு அறிஞர்கள், இந்தியாவில் சாதி உருவாவதற்குக் கீழ்க்கண்ட காரணங்களைச் சொல் கிறார்கள்: 1. தொழில், 2. பழங்குடியினர் அமைப்புகளின் எச்சங்கள், 3. புதிய நம்பிக்கைகளின் தோற்றம், 4. கலப்பின விருத்தி, 5. குடிப்பெயர்வு. ‘இவையெல்லாம் பிற சமூகங்களில் இல்லையா? இருந்தால் உலகின் பிற சமூகங்களில் ஏன் சாதி உருவாகவில்லை?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘கூர்ந்து நோக்கும் நமக்கு அவை வெறும் கற்பனைக் காட்சிகளாகவே தெரிகின்றன’ என்று மறுக்கிறார் அம்பேத்கர். அவ்வாறெனில், சாதி எவ்வாறு உருப்பெற்றிருக்கும்? ‘கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளும் கொள்கை’யை (குளோஸ்டு டோர் பாலிஸி) சாதியின் தோற்றத்துக்குக் காரணமாக அம்பேத்கர் முன்வைக்கிறார்.
இங்கு இரண்டு கேள்விகளை அம்பேத்கர் எழுப்புகிறார்.
1. இந்த மக்கள் பிறரோடு கலவாமல் தனித்தியங்கு மாறு கட்டாயப்படுத்தப்பட்டார்களா?
2. (அல்லது) அவர்களாகவே தனித்து இருப்பதற்காகக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டார்களா?
இரண்டுமே நடந்திருக்கிறது என்று அம்பேத்கர் விடையளிக்கிறார்.
போலச் செய்தல்
சாதியத்தின் பரவலாக்கலுக்குக் காரணமாகப் ‘போலச் செய்தல்’ என்கிற ஒன்றின் வழியாகத்தான் அகமண முறை, கதவடைப்பு போன்றவை நிகழ்ந்து, சாதியம் பரவியது என்று அம்பேத்கர் நிறுவுகிறார். ஆக, சாதி என்பதை ஒற்றையாக அம்பேத்கர் பார்க்க
வில்லை. சாதிகள் என்று பார்க்கிறார். ‘பார்ப்பனர்கள் தங்களைத் தனியாக ஒரு சாதியென்று ஆக்கிக் கொண்டதன் விளைவாகப் பார்ப்பனரல்லாதோர் என்றொரு சாதி உருவாக நேர்ந்தது’ என்கிறார். விலக்கி வைக்கப்பட்டவர்கள் தாங்களே ஒரு தனிச் சாதியாக ஆகும்படி தூண்டுதல் என்பது ஒரு கள்ளத்தனமான செயல்திட்டம். இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் பல்வேறு சாதிகள் உருவாகியுள்ளன என்கிறார் அம்பேத்கர்.
இரு நிலைகளில் அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, தனது ஆய்வுக்கு உட் படுத்தும் பொருளைத் தன் நிலையிலிருந்து அதாவது, தான் அனுபவித்த வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றின் வழியாக அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தல். இதனூடாக, ஆய்வுப் பொருள் சார்ந்து உலகளாவிய நிலையில் உள்ள தரவுகளை ஒப்பிட்டுக் காட்டி விவாதித்தல்; அறிவுஜீவிகளின், கோட்பாட்டாளர்களின் பார்வையிலிருந்து மட்டு மல்லாமல், தான் எடுத்துக்கொள்ளும் ஆய்வுப் பொருண்மை பொதுமக்களின் பார்வையில், பயன் பாட்டில் எவ்வாறு உள்ளது என அணுகுதல்; எடுத்துக்
காட்டாக, சாதியம் சார்ந்த வெகுமக்களின் நம்பிக்கை, அவர்களின் செயல்பாடுகள் (போலச் செய்தல், கதவடைத்துக்கொள்ளுதல்) போன்றவற்றைக் கணக்கில் கொண்டு அணுகுதல். அம்பேத்கரின் இவ்வகை அணுகுமுறையை அவரது பல்வேறு ஆய்வுகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்த ஆய்வுரை மானுடவியல் மாணவர்களுக்கு மானுடவியல் சார்ந்த முறையியலோடு நிகழ்த்தப்பட்டது நினைவில் கொள்ளத் தக்கது.
இரண்டாவதாக, அம்பேத்கர் சாதிகளின் தோற்றம், வளர்ச்சியை நிறுவுவதற்குப் பாலின அரசியலைக் கைக்கொள்கிறார். அதாவது, பெண்ணினம், ஆணினம் சார்ந்து. திருமணம் செய்துகொண்ட பின்புதான் ஒரு பெண்ணும் ஆணும் சமூக அங்கீகாரம் பெறுகிறார்கள். தம்பதியரில் யாராவது ஒருவரின் இறப்புக்குப் பின் உயிரோடு இருப்பவர்களைச் சமூகம் எப்படி நடத்துகிறது? மேலும், புறமணம், அகமணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, மணமுறையில் இணையும் பெண், ஆண் சார்ந்து சாதியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அம்பேத்கர் நிறுவுகிறார். சாதியத்தின் பரவலுக்குச் சமயம் சார்ந்த சடங்கியல் அதிகாரம், கதவடைப்பு, அகமண முறை, போலச் செய்தல் போன்ற செயல்பாடுகளை எடுத்துக்காட்டி நிறுவுகிறார்.
இத்தகைய பண்பாட்டு ஆய்வு, நம் அனைவரையும் பாதிக்கும் அதிகார அமைப்பாகச் சாதியை அடையாளப் படுத்துவது மட்டுமல்ல; சாதிப் பிரச்சினையைத் தலித் பிரச்சினை என்பதோடு சுருக்கிவிடாமல், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அனைவருக்கும் உள்ள பங்கை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
- கோ. பழனி,
‘பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள்’ என்ற நூலின் பதிப்பாசிரியர், உதவிப் பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: elaezhini@gmail.com​

No comments:

Post a Comment