Wednesday, 10 December 2014

தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் அல்ல: சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு

மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் தற்கொலை முயற்சி குற்றம் என்கிற சட்டப் பிரிவு விரைவில் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 309-ன் படி தற்கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. தற்கொலைக்கு முயற்சித்தவர் மரணத்தி லிருந்து தப்பிவிட்டால் அவரை ஓர் ஆண்டு வரை சிறையில் அடைக்கவும் அபராதம் விதிக்கவும் மேற்கண்ட சட்டப் பிரிவு வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில்தான், கடந்த ஜூலை மாதம் ‘காமன் காஸ்’ என்கிற தொண்டு நிறுவனம் ‘மருந்துகளால் காப்பாற்ற முடியாத நிலைக் குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர் களின் விருப்பத்தின் பேரில் சட்டப்பூர்வமாக கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை அணு கியது. இந்த வழக்கில் அரசு தரப்பில், “கருணைக் கொலையும் ஒருவகையில் தற்கொலையே. தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம். அதன்படி, கருணைக் கொலையும் சட்டப்படி குற்றமே என்பதால் அதை அனுமதிக்கக் கூடாது” என்றது.
மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “தற்கொலையுடன் கருணைக்கொலையை ஒப்பிடக் கூடாது. நலமாக இருக்கும் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதுதான் தற்கொலை” என்று வாதிட்டார். நீதிமன்றம் இதுதொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் தேவை என்று கூறியதுடன் இதுகுறித்து பதில் அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஏற்கெனவே பல ஆண்டுகளாக தற்கொலை முயற்சி குற்றம் என்கிற சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று நிலவிய கருத்துக்கு மேற்கண்ட வழக்கு வலு சேர்த்தது. அதன்படி விரைவில் 309-வது சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி மாநிலங்களவையில் நேற்று அளித்த பதில்:
கடந்த ஆகஸ்டில் இந்திய சட்டக் கமிஷன், மத்திய அரசுக்கு அளித்த 210-வது அறிக்கையில், ‘தற்கொலை முயற்சி என்பதை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். அது குற்றமற்ற தன்மை கொண்டது. எனவே காலத்துக்கு ஒவ்வாத 309-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த முடிவுக்கு 18 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் 309-வது பிரிவை விரைவில் நீக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
309-வது பிரிவு முட்டாள்தனம்: நீதிபதி சந்துரு
முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது:
முழு மனதுடன் இதை வரவேற்கிறேன். தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றம் என்று வரையறுக்கும் 309-வது சட்டப் பிரிவு முட்டாள்தனமானது. அந்த சட்டப் பிரிவின்படி அங்கே ஒரு குற்றம் முழுமை அடைந்துவிட்டால் அதைச் செய்தவரை தண்டிக்க இயலாது. அதேநேரம் குற்றம் முழுமை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டால் அதைச் செய்தவரை தண்டிக்கிறார்கள். ‘ஏன் நீ சாகவில்லை’ என்று கேட்பதுபோல் உள்ளது இது.
கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பி.ரத்தினம் என்பவர் இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘ஒருவருக்கு வாழ உரிமை இருப்பதைப் போல வாழாமல் இருக்கவும் உரிமை இருக்கிறது’ என்று வாதிட்டார். அதற்கு நீதிமன்றம், “ஒருவரின் வாழ்வுரிமையை அரசியல் சாசனப் பிரிவு 21 வலியுறுத்துகிறது. அதன்படி அதிலேயே வாழாமல் இருக்கவும் உரிமை இருக்கிறது” என்று தீர்ப்பு அளித்தது. பேச்சுரிமைக்காக அரசியல் சாசன பிரிவிலேயே பேசாமல் இருப்பதற்கான உரிமையும் இருப்பதை போலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், 1988-ம் ஆண்டு பஞ்சாப்பின் ‘கவுர்’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச் மேற்கண்ட தீர்ப்பை மறுத்தது. “அப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. தற்கொலை முயற்சி என்பது குற்றமா, குற்றமற்றதா என்பதில் நீதி மன்றங்கள் தலையிட கூடாது. நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தது.
அன்று முதல் இந்த சர்ச்சை தொடர்கிறது. எனவே 309-வது பிரிவு நீக்கப்படுவது சரியானதே. அதேபோல தற்கொலை செய்துகொள்வதையும் குற்றம் என்கிற சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று சந்துரு தெரிவித்தார்.

No comments:

Post a Comment