யூதர்களும் பாலஸ்தீனர்களும் சமாதான வாழ்க்கையால் மட்டுமே புராதனமான ஜெருசலேமைக் காப்பாற்ற முடியும்.
சில வாரங்களுக்கு முன்னால் ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 பாலஸ்தீன இளைஞர்கள் நகரின் மேற்கு ஓரத்தில் இருந்த யூத வழிபாட்டுத் தலத்துக்குள் நுழைந்து தாக்கினார்கள். அங்கு வழிபட்டுக்கொண்டிருந்தவர்களில் 4 பேரைக் கொன்றார்கள், மேலும் பலரைக் காயப்படுத்தினார்கள். தாக்குதல் நடத்திய 2 இளைஞர்களும் பிறகு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
பாலஸ்தீனர்களில் பயங்கரவாதிகள் இந்தப் படுகொலையைக் கொண்டாடினார்கள். மிதவாதிகள் கண்டித்தார்கள். இதற்குப் பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளில் ஒருவரின் வீட்டை இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியது. மற்றவர்களின் வீட்டையும் தகர்க்கப்போவதாக எச்சரித்தது. இஸ்ரேலிய அதிகாரிகள் வழக்கம்போலவே ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள். யூதர்களின் நிரந்தரத் தலைநகரமான ஜெருசலேத்தின் ஒற்றுமை சிதறிவிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற அறிவிப்புதான் அது. ஏற்கெனவே, பிளவுபட்டுக்கிடக்கும் நகரத்தின் ஒற்றுமையைக் காப்போம் என்று அறிவிப்பதற்கு என்ன அர்த்தம்?
யூதர்களின் வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளாக மையமாக இருந்துவருவது ஜெருசலேம். உலகின் 160 கோடி முஸ்லிம்களுக்கும் அது புனித நகரம். கிறிஸ்தவர்களுக்கும் இது புனித நகரம். இந்நகரில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அதன் பழைய நகரம்தான் உலக வரலாற்றில் அதிக அளவு துயரங்களைச் சுமந்த நிலமாகத் திகழ்கிறது. ஜெருசலேமின் வரலாற்றைப் பார்த்தால் அதைத் தங்களுக்கென்று சொந்தாக்கிக்கொள்ள விரும்பியவர்களால் கைப்பற்றப்பட்டும் பிறகு விடுதலை பெற்றும் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச நகரம்
1947-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜெருசலேம் சர்வதேச நகரமாக அறிவிக்கப்பட்டது. ஜெருசலேம் நகரில் கிறிஸ்தவத்துடன் தொடர்புள்ள பகுதிகள் யூதர்கள் அல்லது முஸ்லிம்கள் கட்டுப்பாட்டுக்குள் வராதபடிக்கு புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டது.
1948-ல், போரிடும் இரு தரப்புக்கு இடையிலான சமரச ஒப்பந்தப்படி, பிரிட்டிஷ் அரசு ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியை ஜோர்டானிடமும் மேற்குப் பகுதியை இஸ்ரேலிடமும் ஒப்படைத்தது. முள்கம்பி வேலிகளும் எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகள் என்று பல திட்டுகளும் நகரின் குறுக்கே இருந்தன. 1948-ல் இஸ்ரேல் சுதந்திர நாடானது. தங்களுடைய புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் யூதர்கள் தடுக்கப்பட்டார்கள், தங்களுடைய முன்னாள் இல்லங்களுக்குச் செல்ல முடியாமல் அரபுகள் தடுக்கப்பட்டார்கள்.
1967-ல் நடந்த போருக்குப் பிறகு ஜோர்டானிடமிருந்து ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியையும் பழைய ஜெருசலேம் நகரையும் இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவித்தது. இந்த நகரம் இஸ்ரேலிய இறையாண்மையைப் பறைசாற்றும் விதத்தில் ஒரே நகரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகரைச் சுற்றிலும் யூதர்கள் வசிக்கும் குடியிருப்புகளை இஸ்ரேலிய அரசு ஏற்படுத்தியது. அரபுகளின் வசிப்பிடங்களைச் சுற்றிலும் தங்களின் குடியிருப்புகளை யூதப் பயங்கரவாதிகள் ஏற்படுத்தினார்கள்.
3 லட்சம் பாலஸ்தீனர்கள்
ஜெருசலேம் நகரில் அதிகாரபூர்வமாக 3 லட்சம் பாலஸ்தீனர்கள் இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன; அதாவது, மொத்த மக்கள்தொகையில் 37%. அவர்கள் ‘நிரந்தரக் குடியிருப்பாளர்கள்’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர்கள். இந்த அடிப்படையில் அவர்கள் இஸ்ரேல் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்யலாம், வேலை பார்க்கலாம். அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாக்குரிமைகூட உண்டு. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. குடியுரிமையைப் பறிக்க முடியாதே தவிர, குடியிருப்பவர்கள் என்ற உரிமையை இஸ்ரேலிய அரசால் பறித்துவிட முடியும்! பாலஸ்தீனர்கள் தங்களுடைய தேசிய உணர்வு காரணமாக, இஸ்ரேல் அனுமதித்தாலும் உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில்லை. அதே போல நகர மைய அரங்கிலும் யூதர்களுடன் கலந்து பழகுவதில்லை.
இணைத்தது மின்சார ரயில் சேவை
சில மாதங்களுக்கு முன்னால் வரையிலும்கூட ஜெருசலேம் நகரின் மின் ரயில் சேவை இரு சமூகங்களையும் இணைத்திருந்தது. நகரின் மேற்குப் பகுதியில் தொடங்கி பழைய நகரின் புராதனச் சுவர்களுக்கு அருகில் ஓடி கிழக்கு ஜெருசலேத்தின் சுற்றுப்பகுதிகளுக்குச் செல்கிறது அந்த ரயில். அரசியலும் மதமும் இணைக்காத மக்களை நவீனத் தொழில்நுட்பம் இணைத்துவிடும் என்பதற்குச் சான்றாக அது இருந்தது.
அரபுகளும் யூதர்களும் தங்களுடைய வேலைகளுக்குச் செல்ல அந்த ரயிலைப் பயன்படுத்தினார்கள். இருவரும் ஒரே பெட்டியில் சென்றாலும் ஒருவரை மற்றொருவர் கண்டுகொண்டதைப் போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். காலை, மாலை நெரிசல் நேரங்களில் பெட்டிக்குள் ஏறும்போதும் இறங்கும்போதும் மௌனமாக தோளோடு தோள் உரசிக்கொள்வார்கள். இப்போது இந்த உறவுக்கும் வந்தது ஆபத்து.
ஜூலை 2 சம்பவம்
கடந்த ஜூலை 2-ம் தேதி ஷுவாஃபத் என்ற கிழக்கு ஜெருசலேம் பகுதிக்கருகில் யூத பயங்கரவாதிகள், 16 வயது பாலஸ்தீனச் சிறுவனைக் கடத்திச் சென்று எரித்துக் கொன்றுவிட்டார்கள். அதற்கும் முன்னால் ஜூன் மாதம் இஸ்ரேலியச் சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் அது. அதையடுத்து ஆகஸ்ட் 4-ம் தேதி கிழக்கு ஜெருசலேம் நகரைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனர், கனரக வாகனம் ஒன்றை வேகமாக ஓட்டிவந்து இந்த மின் ரயில்மீது மோதி பலத்த சேதத்தை விளைவித்தார்.
அதில் ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் காயமடைந்தனர். அதற்குப் பிறகு அக்டோபர் 22-ம் தேதி கிழக்கு ஜெருசலேம் நகரைச் சேர்ந்த பாலஸ்தீனக் குடியிருப்பாளர் ஒருவர் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிவந்து, டிராமிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த யூதர்கள் மீது மோதினார். 3 மாதக் குழந்தையும் 22 வயது இளம்பெண்ணும் அதில் இறந்துபோனார்கள். இதற்கிடையில் காஸா மீது இஸ்ரேலியர்கள் மிக மோசமான தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.
இதற்குப் பிறகு யூதர்களும், மின்சார ரயிலில் சென்ற பாலஸ்தீனர்களைத் தாக்கினார்கள். இதையடுத்து இரு தரப்பினருமே அச்சம் காரணமாக அவரவர் பகுதியை விட்டு எல்லை மீறுவதில்லை.
தொழில்நுட்பம் மட்டும் போதாது
பிரிந்துகிடக்கும் மக்களை இணைக்க தொழில்நுட்பத்தாலும் முடியாது என்பது இதிலிருந்து தெரிகிறது. அரபுகளும் யூதர்களும் சேர்ந்து வாழ முடியும், சேர்ந்து வாழ்கிறார்கள் என்று காட்டும் முயற்சியாகத்தான் இந்த ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பைத் தொடரவும், மேலும் பல பகுதிகளைத் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவும் யூதர்கள் மேற்கொண்ட முயற்சிதான் இந்த ரயில் சேவை என்று பாலஸ்தீனர்கள் கருதுகிறார்கள்.
ஜூலை மாதம் சிறுவன் கடத்திக் கொல்லப்பட்ட பிறகு தொடர்ந்து இந்த ரயில்கள் தாக்கப்படுகின்றன. தங்கள் பகுதிக்கு அருகில் இந்த ரயில் வரும்போது இதன் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் எறிகிறார்கள் பாலஸ்தீனர்கள். ஜெருசலேம் இஸ்ரேலுடன்தான் சேர்ந்திருக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளும், ஜெருசலேம் எங்களுக்கே சொந்தம் என்று பாலஸ்தீனர்களும் மாறி மாறி அறிவித்துக்கொள்கிறார்கள். ஜெருசலேம் நகரை இரண்டாகப் பிரிக்க இருவரும் விரும்பவில்லை; அதே சமயம் ஒன்றாக வைத்துக்கொண்டு சுமுகமாக வாழவும் விரும்பவில்லை.
ஜெருசலேத்தைக் கட்டுப்படுத்த முடியாது
ஜெருசலேம் நகரை யூதர்கள், பாலஸ்தீனர்கள் என்ற இரு தரப்பாராலும் கட்டுப்படுத்த முடியாது; அதே வேளையில் இரு தரப்பாரும் சமாதானமாகப் பகிர்ந்துகொண்டு வாழலாம். இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இரு பகுதிகளுக்குமே அது தலைநகரமாக இருக்கட்டும். இரு தரப்பாருடைய தேசிய, மத உணர்வுகளை அது சமாதானப்படுத்தும். கிழக்கு, மேற்கு ஜெருசலேம் பகுதிகளை இருவேறு நகரமன்றங்கள் நிர்வகிக்கட்டும். பழைய நகரப் பகுதியில் இருவருமே இணைந்து சர்வதேச ஆதரவுடன், கண்காணிப்புடன் நிர்வாகத்தை மேற்கொள்ளலாம்.
இந்த ஏற்பாட்டுக்கு நல்ல முன்னுதாரணம் இருக்கிறது. இத்தாலி, ஸ்லோவேனியா நாடுகளின் எல்லையில் இத்தகைய ஏற்பாடு மிகச் சிறப்பாக நடந்துவருகிறது. பெல்ஃபாஸ்ட், சாராயேவோ, பெய்ரூட் நகரங்களும் ஒரு காலத்தில் இப்படிக் கொந்தளிப்பாகத்தான் இருந்தன, இப்போது அமைதியடைந்துவிட்டன.
ஜெருசலேம் நகரம் சொர்க்கபுரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மனிதர்கள் வாழும் அமைதியான நகரமாகவாவது மாற வேண்டும்.
© தி நியூயார்க் டைம்ஸ்,
தமிழில்: சாரி
தமிழில்: சாரி
No comments:
Post a Comment