உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், நடப்பு ஆண்டில் இந்தியா 2 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது, நாட்டில் ஓரளவு ஏற்பட்டுள்ள சாதக நிலையைக் காட்டுகிறது.
நடப்பு ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 178 நாடுகள் கொண்ட இந்தத் தரநிலைப் பட்டியலில், இந்தியா 2 இடங்கள் ஏற்றம் கண்டு 85-வது இடத்தை அடைந்துள்ளது.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில், நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டு 87-வது இடத்தில் இருந்தது.
ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட உயர் அதிகாரிகள் பலர் அண்மைக் காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுள்ளதையடுத்து, இந்தியாவின் ஊழல் மீதான பார்வை சற்றே முன்னேறியுள்ளதாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு எடுத்த இந்த சர்வதேச ஆய்வில், இந்தியாவில் ஊழலுக்கு எதிரான அண்மைக்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது புதிய தலைமையின் கீழ் ஊழல் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 178 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 36, பிடித்துள்ள இடம் 85. இலங்கை, தாய்லாந்து, பர்கினோ பாசோ ஆகிய நாடுகளும் இதே இடத்தில் இருக்கின்றன.
டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2013-லும் டென்மார்க் நாடே முதலிடத்தில் இருந்தது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த் நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மற்ற நாடுகளைவிட முன்னேறிய நிலையிலேயே இருக்கிறது. இருப்பினும், பூட்டான் மற்றும் சற்று முன்னே உள்ளது.
உலக வங்கி, சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்கள் இணைந்து, உலக நாடுகளில் நடைபெறும் பொதுத்துறை ஊழல்களில் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த ஊழல் பார்வை குறியீடு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் 9 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, பொதுமக்கள் கருத்துக் கேட்பும் நடந்துள்ளது.
இது தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் சீனிவாசன் 'தி இந்து' (ஆங்கிலம்) பத்திரிகைக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ள தகவலில், "இந்தியா ஊழல் மீதான் பார்வை குறியீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளதற்கு, 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஊழல் ஆகியனவற்றில் அரசியல் பெரும்புள்ளிகள், குடிமைப் பணி அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு, அரசு அங்கங்களில் சட்டதிட்டங்கள் நிலைநிறுத்தப்பட்டது ஒரு காரணமாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "புதிய தலைமையின் கீழ் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக உள்ளதால், ஊழல்களால் சாமான்ய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களும் கட்டுக்குள் வருமென்ற நம்பிக்கை உதயமாகியுள்ளது. உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், இந்தியாவை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றால், கிடப்பில் இருக்கும் ஊழல் தடுப்புச் சட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும், அரசு நிர்வாகம் தொடர்பான தகவல்கள் மக்கள் பெறும் வழிகள் மேலும் ஆழமாக்கப்பட வேண்டும்" என்றார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊழல் தடுப்புக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. சீனாவில், பொருளாதார ஏற்ற நிலையில் இருந்தபோதுகூட அங்கு ஊழல் மலிந்தே இருந்தது என டிரான்பெரன்சி இன்டர்சேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment