அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதிகாரபூர்வ தகவல்களின்படி நடப்பாண்டில் 9.6 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய் திருக்கிறார்கள், இதே காலத்தில் 8.6 லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுத்திருக்கிறார்கள். நிகர முதலீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
அதிக முதலீடு வெளியே சென்றாலும் டிசம்பர் மாதத்தில் மட்டும் 4,032 கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறது.
கடந்த இரு வருடங்களாகவே இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. நடப்பாண்டில் இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வருட இறுதியில் அந்நிய முதலீடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013-ம் ஆண்டு ரூ.1.13 லட்சம் கோடி அந்நிய முதலீடும், 2012-ம் ஆண்டில் 1.28 லட்சம் கோடி அந்நிய முதலீடும் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.
இருந்தாலும் நடப்பாண்டில் பங்குச்சந்தையை விட கடன் சந்தையில் அந்நிய முதலீடு அதிகமாக இருக்கிறது. கடன் சந்தையில் இதுவரை நிகர அந்நிய முதலீடு 1.55 லட்சம் கோடி ரூபாயாகும். பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை இரண்டிலும் 2.55 லட்சம் கோடி ரூபாய் இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீடு அதிகரிப்பு காரணமாக நடப்பாண்டில் மட்டும் சென்செக்ஸ் 27 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதுதான் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரிக்க காரணம் என்றும் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment