Tuesday, 2 December 2014

விளையாடிக்கிட்டே படிங்க!

‘இரண்டு மணி நேரம் ஒழுங்கா உட்கார்ந்து பாடப் புத்தகத்தைப் படிச்சீனா…வெளியே போய் விளையாட விடுவேன்.’
‘பிசிக்ஸ் லாஸ் முழுக்க ஒப்பிச்சீனா…உன் இஷ்டப்படி டான்ஸ் கிளாஸுக்குப் போகலாம்.’
எப்படியாவது குழந்தை படித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர்கள் இப்படிச் சொல்கிறார்கள். அவர்கள் நோக்கம் படிப்பு அவசியமானது என்பதைக் குழந்தைக்கு உணர்த்த வேண்டும் என்பதுதான். ஆனால் உளவியல் ரீதியாக இது வேறு மாதிரி வேலை செய்யும். ‘உனக்குப் பிடித்த விளையாட்டு, நடனம் போல் படிப்பும் சுவாரஸ்யமானதுதான்’ என்பதை உணர்த்தத் தவறிவிட்டுப் படிப்பு கசப்பானது, சுவாரஸ்யமற்றது, கடனே என்றாவது படித்து முடி, பிறகு உனக்கு எது விருப்பமோ அதைச் செய் என்பதைத்தான் இந்த அணுகுமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“சரி, அம்மாதான் இந்தப் பாடத்தைப் படித்து ஒப்பித்துவிட்டால் விளையாட அனுமதிப்பாங்களே” எனக் குழந்தை பொறுப்பாகப் படிக்க முயலும். ஆனால் அப்பத்தான் தூக்கம் சொக்கும், எண்ணம் சிதறும், நண்பர்களோடு பள்ளியில் அடிச்ச லூட்டி ஞாபகத்திற்கு வரும், பக்கத்து வீட்டில் ஓடும் டிவி நிகழ்ச்சியை காதுகள் கூர்ந்து கவனிக்கும். இந்தச் சிக்கலை எப்படி அணுகுவது என்பது பெற்றோர்களுக்கும் புலப்படுவதில்லை, குழந்தைகளுக்கும் புரிவதில்லை.
கண்டுபிடி! கண்டுபிடி!
சலிப்பூட்டும் உங்கள் வழக்கமான படிப்பை சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற உளவியல் நிபுணர் கார்டனரிடம் ஜாலியான தீர்வு உள்ளது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு உங்களுக்கு உகந்த கற்றல் முறையை கண்டுபிடிக்கலாம் வாங்க. இதில் சரி, தவறு என்று எதுவும் இல்லை.கீழே காணப்படும் பெட்டியில் உள்ள ஒவ்வொரு செயலையும் நீங்கள் எப்படி அணுகுவீர்கள் எனக் குறித்துக் கொள்ளுங்கள்.
கடைசிக் கட்டத்தில் ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் பார்த்தல், கேட்டல், உடல் சார் ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுத்தீர்களோ அதன் அடிப்படையில் அதற்குரிய காலிக் கட்டத்தில் கூட்டலை எழுதவும். இதன் மூலம் அடிப்படையில் நீங்கள் காட்சி ரீதியான அறிவுத் திறன் கொண்டவரா? அல்லது ஒலியில் நாட்டம் கொண்டவரா? அல்லது உடல் ரீதியான அறிவுத்திறன் படைத்தவரா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். இவற்றில் உடல் சார் அணுகுமுறையில் நீங்கள் அதிகமானப் புள்ளிகள் பெற்றிருந்தால், உங்களுக்கு உகந்த கல்வி கற்கும் முறையைப் பரிந்துரைக்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர்.
சீட்டுக்கட்டில் படிக்கலாம்
யாரோடும் பேசாமல், எந்த அசைவுமின்றி, ஒரு இடத்தில் அமைதியாக உட்காரப் பயிற்சி எடுத்தால் மட்டுமே மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க முடியும் என்று காலங்காலமாக நம்பப்படுகிறது. ஆனால் ஒரு குழுவாக கலந்து பேசி, புத்தகத்தில் உள்ள தகவல்களைச் சோதனை செய்து, துறுதுறுவென விளையாட்டாகப் படிக்க முடியும் என்கிறது கார்டனரின் ஆய்வு. அதில் ஒரு வழி ஃபிலாஷ் கார்டு எழுதி கற்பது. உதாரணத்திற்கு, அறிவியல் பாடங்களில் பல சொல்லாடல்கள் இடம் பெறும்.
அவற்றை மனதில் நிறுத்திக் கொள்வது கடினமாக இருக்கும். அது போன்ற கலைச் சொற்களைச் சிறிய அட்டைகளில் எழுதி, அதற்குத் தொடர்பான சிறு குறிப்புகளை அந்தந்த அட்டைகளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வேறு சில அட்டைகளின் முன்புறத்தில் அந்தச் சொல்லாடல்களை மட்டும் எழுதுங்கள். மற்ற அட்டைகளில் உங்கள் குறிப்புகளை மட்டும் எழுதுங்கள். இப்போது நண்பர்களோடு இணைந்து முதல் தொகுப்பு ஃபிலாஷ் கார்டுகளைப் படித்து, உங்களுக்குள் கலந்துரையாடி அதன் உட்கருத்தை நன்றாக விவாதித்துப் புரிந்து கொள்ளுங்கள். முதல் தொகுப்பைத் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்.
ஜெயிக்கப் போவது யார்?
மீதமிருக்கும் ஃபிலாஷ் கார்டுகளை சீட்டுக்கட்டுகளைப் பிரித்து விநியோகிப்பது போல அனைவருக்கும் பகிர்ந்து போடுங்கள். ஆனால் ‘ஜோக்கர்’ விளையாடுவது போல ஒரு அட்டையை மட்டும் ஒளித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது செட்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு சொல்லாடலையும் அதற்குரிய குறிப்புகள் கொண்ட அட்டையோடு ஜோடி சேர்க்க வேண்டும். கடைசியில் ஒரு அட்டை மட்டும் தன்னந்தனியே நிற்கும். யார் முதலில் அதன் ஜோடி அட்டையில் உள்ள தகவல்களைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்கிறாரோ அவர்தான் வெற்றியாளர்.
எவ்வளவோ இருக்கு!
இந்த ஒரு விளையாட்டின் மூலம், உங்கள் பாடத்தை மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், குழுவாகப் படித்தல், குழு கலந்துரையாடல், நினைவாற்றல் சோதனை, சோதனை மற்றும் பிழை கண்டறியும் முறை போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் குஷியாகப் போகிறபோக்கில் கற்றுக்கொள்வீர்கள். சமீபத்தில் ஃபிலாஷ் கார்டு மொபைல் ஆப்ஸ், இலவச ஆன்லைன் ஃபிலாஷ் கார்டு எனப் பல விதமான நூதன முறைகளில் ஃபிலாஷ் கார்டு விளையாட்டுகள் அறிமுகமாகியுள்ளன.
இது ஒரு வகை அணுகுமுறை மட்டுமே. சிறுகதை, நாவல் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தல், உங்கள் துறை சார் சுற்றுலாப் பயணம் போவது, உங்கள் பாடத்தைக் கணினியில் பிபிடி (PPT) யாக உருவாக்குதல், வீடியோ காட்சியாக பதிவு செய்தல், பாண்டி ஆட்டம் போல் கட்டங்களில் எழுதிவைத்து கணிதத் தேற்றத்தை விளையாடுதல், நீங்கள் கற்ற பாடங்களை உங்கள் சக மாணவர்களுக்குக் கற்பித்தல் என அட்டகாசமாகப் படிக்கலாம். இனி வேறு வழியின்றி படித்து முடித்துவிட்டு விளையாடப் போக வேண்டிய அவசியமில்லை. பல வழிகளில் விளையாட்டாகப் படிக்கலாம்.

No comments:

Post a Comment