அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பெரியோர் வாக்கு!
அது சரிதானே?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அணுக்களைப் பற்றி விவாதித்த நம் முன்னோர்கள் பெருமைமிக்கவர்கள்தானே?
நாமே அணு
அணுக்களின் சேர்க்கைதான் நீங்களும், நானும். நாம் சுவாசிக்கும் காற்றும், இந்தக் கணினியும் ,உங்கள் கையில் உள்ள நாளிதழும், தூரமாகத் தெரிகிற நட்சத்திரங்களும் எல்லாமும் கூட அணுக்களால் ஆனவை. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி ஓடும் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் எனும் அணுத் துகள்களின் எண்ணிக்கைகள் மாறுபடும்போது வேறுவேறு பொருள்கள் உருவாகின்றன. பார்வைக்குப் பலவிதமாகப் பொருள்கள் தோற்றமளித்தாலும் உள்கட்டமைப்பில் எல்லாம் அணுக்கள்தான்.
அதனால் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழிக்குள்ளே விஞ்ஞானம் இருக்கிறது.
எங்கும் அணுவா?
அணுக்கள் இல்லாத இடத்தில் அந்தப் பழமொழி பொருந்துமா?
பிரபஞ்சத்தில் அணுக்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றனவா? என்ற கேள்விகளை நாம் கேட்டால் என்ன ஆகும்?
பூமியைப் பொறுத்தவரை அது 71 சதவீதம் தண்ணீரும் 29 சதவீத நிலமுமாக இருக்கிறது. இவை அனைத்தும் அணுக்களின் சேர்க்கைதான்.
நமது பூமி சூரியன் எனப்படும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றும் கோள்களில் ஒன்றாக உள்ளது. சூரிய மண்டலம் மொத்தமும் பால்வெளி மண்டல விண்மீன் பேரடை எனப்படும் கேலக்ஸியில் உள்ளது.அந்த காலக்ஸியைப் போலக் கோடிக்கணக்கானவை பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றில் பல அணுக்களால் கட்டமைந்து இருக்கின்றன.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பூமியைப் போலவே அணுக்களால் ஆனவையாக இருக்க வேண்டும் என 30 வருடங்களுக்கு முன்பாகக்கூட விஞ்ஞானிகள் நம்பினர். தற்போது வந்துள்ள தகவல்களை மதிப்பிட்டுப் பார்க்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் அணுக்கள் என்பவை 4.6 சதவீதம்தான் இருக்கின்றன எனத் தெரிய வந்துள்ளது. மீதி உள்ள 95 சதவீத பிரபஞ்சமும் அணுக்கள் இல்லாத வகையில்தான் கட்டமைந்துள்ளது.
கரும்பொருள்
4.6 சதவீத அணுக்களின் சேர்க்கையின் விளைவாக உருவான பொருள்களைத்தான் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத வடிவத்தில் கரும் பொருள் பிரபஞ்சத்தில் 24 சதவீதம் இருக்கிறது, அது எந்த ஆய்வகத்திலும் இன்னமும் பரிசோதிக்கப்படாதது என்கிறது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா. அது மட்டும் அல்ல. இது வரை அறியப்படாத கரும் ஆற்றல்தான் 71.4 சதவீதம் பிரபஞ்சத்தில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
அவனன்றி...
பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி இதுவரை விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டுள்ள ‘மாபெரும் வெடிப்பு’ எனும் கொள்கையின்படி அணுக்கள் என்பவை பிரபஞ்சத்தின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தோன்றியவை. அவை காலப்போக்கில் மாறியும் வருகின்றன. அந்த மாற்றத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றாக நாமும் இருக்கிறோம். அணுக்கள் எங்கும் நிறைந்தவையாக இல்லை. அதனால் இனி “ அவனன்றிக் கரும் பொருளும் அசையாது” என்றுதான் மாற்றிச் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment