Tuesday, 9 December 2014

வேருக்கு வெந்நீர் பாய்ச்சுவோம்!

எல்லா அரசியல் கட்சிகளுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதாகவே திரும்பத் திரும்பக் கூறிவருகின்றன. தற்போதைய அரசும் அதையே சொல்கிறது. அதேநேரம் முந்தைய அரசுகளில் இருந்து மாறுபட்டு, வளர்ச்சிக்குப் புதியதொரு வழிமுறையை இந்த அரசு கண்டறிந்துள்ளது!
வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சட்டங்களைத் தளர்த்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு வேக வேகமாகச் செய்து வருகிறது. இது நம் தலையிலேயே வைத்துக்கொள்ளும் கொள்ளி என்று சுற்றுச்சூழல்-இயற்கை ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும் எச்சரிக்கின்றனர்.
அவசர நடவடிக்கை ஏன்?
1. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்கும் அந்நிய முதலீட்டை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், நீர், காற்று பாதுகாப்புச் சட்டங்கள், இந்திய வனம், வனஉயிரினம் மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 6 சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக உயர்மட்டக் குழு ஒன்றை மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் (MoEF & CC) அமைத்துள்ளது. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த நேரடி கள அனுபவம், ஆராய்ச்சி அனுபவம் இல்லாதவர்கள். முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் தலைமையில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், முன்னாள் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆகியோரை உறுப்பினர்களாக இந்தக் குழு கொண்டிருக்கிறது. தாங்கள் கொண்டுவரப் போகும் மாற்றங்கள் இயற்கையை எந்த அளவு பாதிக்கும் என்பதைக் குறைந்தபட்சமாக முன் உணரும் ஆற்றல், இந்தக் குழுவில் உள்ள யாருக்கேனும் உண்டா என்பது பெரும் சந்தேகமே.
2. இந்தக் குழுவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவுசெய்ய ஏற்படுத்தியுள்ள வழிமுறைகள், அதைவிட மோசமானவை. மேலே குறிப்பிடப்பட்ட சட்டத் திருத்தங்களைப் பற்றி கருத்துகளை 1000 வார்த்தைகளில் மின்னஞ்சல் மூலமாகப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆங்கிலம் படித்தவர்கள், மின்னஞ்சல் பயன்பாடு தெரிந்தவர்கள் மட்டுமே இப்படிக் கருத்தைப் பதிவு செய்ய முடியும் என்ற நெருக்கடி வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.
3. இந்தக் குழு தனது ஆலோசனைகள், அது சார்ந்த ஆய்வுகளை முடித்து திருத்தங்கள் செய்யப்பட்ட நகலை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறி உள்ளது. இது எப்படிச் சாத்தியம்? இது போன்ற நடப்பில் சாத்தியமில்லாத விதிமுறைகள் இந்தக் குழுவின் செயல்பாடுகளையும், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன.
மறைமுக உணர்த்தல்
இதற்கிடையே நிலம் கையகப் படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்தில் (2013) உள்ள சில உட்பிரிவுகளால்தான் பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கூறியுள்ளார். எனவே, இது சார்ந்த திருத்தங்கள், மேற்கண்ட சட்டத்தில் தேவை என்பதை அரசு மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறது.
ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நிலம் கையகப் படுத்துவதில் பல தடைகள் இருப்பதால், புதிதாகச் செய்யப்பட இருக்கும் சட்டத் திருத்தங்கள் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று தொழில் அதிபர்கள் நம்புகின்றனர். பழங்குடி செயல் பாட்டாளர் தயாமணி பர்லா உள்ளிட்டோர் இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோலச் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் விரிவாக்க விதிமுறை களைத் தளர்த்தி, ஓர் ஆண்டில் நாடு முழுவதும் 80 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுதான் மாற்றமா?
அத்துடன் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதவி ஏற்று 100 நாட்களில் 240 திட்டங் களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இதனால் 7,200 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட உள்ளன. இது பெரிய அளவாக நம்மில் சிலருக்குத் தோன்றாமல் இருக்கலாம் ஆனால், இந்தியாவில் பத்து சதவிகிதக் காடுகளே நல்ல நிலையில் இருப்பதாகப் பிரபலக் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் சேகர் தத்தாத்ரி கூறியுள்ளதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
இதனால் காடுகள் மோசமாகத் துண்டாடப்பட்டு எஞ்சியிருக்கும் காடுகளும், அதைச் சார்ந்த உயிரினங்களும் அழிக்கப்படும். மாற்றத்துக்கான அரசு என்ற கோஷத்துடன் பதவியேற்ற மத்திய அரசு, பதவியேற்ற குறுகிய காலத்திலேயே மேற்கண்டது போன்ற மாற்றங்களையே அவசர அவசரமாகக் கொண்டுவந்துள்ளது.
இது எப்படிப்பட்ட மாற்றம் என்பதையும், இது எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்துகொள்ள நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியே போனால் நமது மகன்களும் மகள்களும் காடுகளையும், அங்கிருக்கும் அரிய தாவரங்களையும், பறவைகளையும், உயிரினங்களையும் ஒளிப்படமாகவும் அருங்காட்சியகங்களிலும் மட்டுமே பார்க்கக்கூடிய நிலை வெகு தொலைவில் இல்லை.
கட்டுரை ஆசிரியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

No comments:

Post a Comment