தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 2005-ல் நடைபெற்ற 13-வது சார்க் மாநாட்டில், தெற்காசிய நாடுகளைத் தவிர வேறு நாடுகளை, பார்வையாளர்களாக ஏற்க முடிவுசெய்யப்பட்டது. இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகள் சார்க் அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன.
தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950-ல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954-ல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை அந்த நாடுகள் முன்வைத்தன. 1981-ல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள்.
தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது. அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
1983-ல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 1985 டிசம்பர் 8-ல் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment