டிசம்பர்-1, உலக எய்ட்ஸ் தினம்
மக்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, அந்த நோய் குறித்த தவறானகருத்துக்களை அகற்றுதல், நோய் பற்றிய கல்வி அறிவை மேம்படுத்துதல், நோய்விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் நிதியை உருவாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 1-ல் உலகஎய்ட்ஸ் நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா. சபையின் ஒரு அமைப்பாகச் செயல்படும் யு.என்.எய்ட்ஸ் (UNAIDS)அமைப்பின் மதிப்பீடுகளின்படி தற்போது உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 34 லட்சம் பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 26 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் 1.8 லட்சம் பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகப்புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?
1.பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி. உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவலாம்.
2.பரிசோதிக்கப்படாத ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவலாம்.
3.சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்துகொள்வதால் பரவலாம்.
4.எச்.ஐ.வி. உள்ள கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரவலாம்.
எப்படித் தடுக்கலாம்?
1.பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துதல்.
2.சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடிய ஊசிகளைப் பயன்படுத்துதல்.
3.பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்; பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையைப் பயன்படுத்துதல்.
மூன்றாம் உலக நாடுகளும் எய்ட்ஸும்
உலகம் முழுவதும் எச்.ஐ.வி-யின் தாக்கம் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி. தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
உலக சுகாதார நிறுவனம், எச்.ஐ.வி. பரவுவதற்கான பல காரணங்களைப் பட்டியலிடுகிறது. கல்வியறிவின்மை, சந்தைப் பொருளாதாரம், ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), ஊடகங்களின் தாக்கம், வறுமை, அடிப்படைவாத, மதவாத, பிற்போக்குத்தனங்கள் ஆகியவையே அந்தக் காரணங்கள்.
மேற்கண்ட காரணங்களை வைத்து எய்ட்ஸ் நோய்த் தடுப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் எய்ட்ஸ் நோய்த் தடுப்புத் திட்டங்கள் போதுமான அளவு மக்களிடம் கொண்டுசெல்லப்படவில்லை. தற்போது இந்தியாவில் செயல்படுத்தப்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எய்ட்ஸ் தடுப்புச் சட்டங்களில் அரசு-தனியார் பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது. பெரும்பாலும் நோய்த் தடுப்புத் திட்டங்கள் தொண்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.
காப்புரிமையின் பிடியில்…
புதிய காப்புரிமைச் சட்டம் 2005-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் எய்ட்ஸ் முதல், காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும் எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி மலிவான இந்திய மருந்துகளை சார்ந்து உயிர்வாழும் வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களையும் மரணத்துக்குத் தள்ளிவிடும். இந்தியாவில் மொத்த மருத்து உற்பத்தியின் கணிசமான பகுதி யுனிசெஃப், ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 வறிய நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்காக நுகரப்படும் மருந்துகளில் 80%, எச்.ஐ.வி. கிருமியுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்துகளில் 92% இந்தியாவிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. பல்வேறு நோய்களுக்கான மூல மருந்துகளை இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்குத் தருவதால்தான் உலகின் மருந்துத் தொழிற்சாலை , ஏழை நாடுகளின் மருந்துக் கடை என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இதையெல்லாம் நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
இந்தியாவில் 31% பேர் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வது பற்றியும் அனைத்து விதமான தகவல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். அதே நேரத்தில், இதற்கு இயைந்த விகிதாச்சாரத்தில் ஆசிரியர்களிடமும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியுள்ளது என்று ஐ.நா. ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது.
ஐ.நா. சபையின் மக்கள்தொகை நிதியம் நடத்திய ஆய்வின் படி பருவக்கல்வித் திட்டத்தில் (ஏஇபி) 31% மாணவர்களும், ஏஇபி திட்டத்தில் இல்லாத 20% மாணவர்களும் எச்.ஐ.வி. பற்றியும், எய்ட்ஸ் பற்றியும் போதுமான அளவு விவரங்களைத் தெரிவித்திருக்கின்றனர். எச்.ஐ.வி. எந்தெந்த வழிகளில் பரவுகிறது என்பதை அடையாளம் காணக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
அதே நேரத்தில் 30%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எச்.ஐ.வி. பரவும் விதங்கள் பற்றியும், கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை. எச்.ஐ.வி./ எய்ட்ஸ் தொடர்பாக அவர்கள் மேலும் விழிப்புணர்வுத் தகவல்களை அறிந்துகொண்டு தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள். எச்.ஐ.வி-யையும் கர்ப்பத்தையும் தவிர்ப்பது தொடர்பான முறைகளை மாணவர்கள் மிகக் குறைந்த அளவே அறிந்திருந்தார்கள்.
வீடுகளில் மனைவிகள் அடிக்கப்படுவதை, குறிப்பிட்ட சதவீதத்திலான ஆசிரியர்களும், குறிப்பிட்ட சூழலில் மனைவிகள் அடிக்கப்படுவது நியாயமே என்று 40% மாணவர்களும் இந்த ஆய்வில் தெரிவித்திருப்பது சமூகத்தில் ஆணாதிக்கம் எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்பதற்குச் சான்று. ஏ.இ.பி. கல்வித் திட்டத்தில் உள்ள 14-18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவியர் 19,666 பேரிடமும் ஏ.இ.பி. அல்லாத 2301 மாணவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 5 மாநிலங்களில் 200 பள்ளிகளில் தேர்வுசெய்யப்பட்டு அறிக்கை முடிவு வெளியிடப்பட்டது.
இவை எல்லாம் சுட்டிக்காட்டுவது என்ன? எச்.ஐ.வி. பரவுவது என்பது தனிநபர் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; இது சமூக/ பொருளாதார/ கலாச்சார/ அரசியல் பிரச்சினையுமாகும்.
எச்.ஐ.வி. பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் வளரும் இளம் பருவத்தினருக்குப் பாலியல் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில்தான் மேற்கண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது. அரசு என்ன செய்யப்போகிறது?
மா. சேரலாதன்,
மாநிலச் செயலாளர்,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கம்.
தொடர்புக்கு: cheralathan.2009@gmail.com
மாநிலச் செயலாளர்,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கம்.
தொடர்புக்கு: cheralathan.2009@gmail.com
No comments:
Post a Comment