Tuesday, 2 December 2014

நடுக்கடலில் தத்தளித்த பிட்சு

ஃபாஹியான் கி.பி. 400-ல் முதல் கி.பி. 414 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் பற்றி அவர் குறிப்பும் எழுதி வைத்துள்ளார். அதில் இந்தியாவைப் பற்றி கிடைக்கும் மேலும் சில குறிப்புகள்:
தண்டனையும் பணமும்
உத்தரப்பிரதேசம் எனப்படும் பகுதி அந்நாட்களிலேயே மக்கள் நெருக்கம் மிகுந்ததாக இருந்துள்ளது. இந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னர் நீதியை நிலைநாட்டிய விதத்தை ஃபாஹியான் பாராட்டியுள்ளார். குற்றம் இழைத்தவர்களுக்கு அந்தப் பகுதியின் மன்னர் உயிரைப் பறிக்கும் சிரச்சேதமோ, உடல் சார்ந்த தண்டனைகளையோ வழங்கவில்லை. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் அனைத்துமே அபராதம் மட்டுமே. அது வழக்கின் தன்மைக்கு ஏற்பக் கடுமையாகவோ, குறைவாகவோ இருந்திருக்கிறது.
பொருட்களை வாங்கவும், விற்கவும் கிளிஞ்சல்கள்-சோழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தாலும்கூட, வெறும் கிளிஞ்சல்களைக்கொண்டே வாங்கும் அளவுக்குப் பொருட்கள் மலிவாகக் கிடைத்துள்ளன. மன்னரின் மெய்க்காப்பாளர்கள், சேவகர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு முகம்
அதேநேரம், தீண்டாமைக் கொடுமைகள் கடுமையாக இருந்துள்ளன. தீண்டப்படாதவர்கள் சமூகத்தில் இழிந்தவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் நகருக்குள்ளோ, சந்தைக்கோ வரும்போது, வருவதை அறிவிக்கக் கம்புகளால் தட்டி ஓசை எழுப்புவார்கள். அந்த ஓசையைக் கேட்டு மற்றவர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள். யாரும் அவர்கள் அருகே செல்வதில்லை.
இந்தியாவில் பல ஆண்டு களுக்குத் தங்கியிருந்த பிறகு கங்கையின் முகத்துவாரம் இருந்த தாம்ரலிப்தியில் (தாம்லுக்) புறப்பட்டு 14 நாட்கள் கடல் வழியாகப் பயணித்து ஃபாஹியான் இலங்கையை அடைந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டு, பிறகு கடல் வழியே சீனா சென்றார். திரும்பிச் செல்லும் கடல் பயணத்தில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளையும், துணிச்சலுடன் அவற்றைச் சமாளித்ததையும் அவர் விவரித்துள்ளார்.
உயிர் தப்பித்தல்
கப்பலில் பயணம் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின் பெருங்காற்று வீசத் தொடங்கியது. ஃபாஹியான் சென்ற கப்பலில் ஓட்டை விழுந்தது. கப்பல் மூழ்கிவிடும் என்ற களேபரத்தில், தப்பிக்க வைத்திருந்த படகையும் இழந்துவிட்டார்கள். இதையடுத்துக் கப்பலில் இருந்த வியாபாரிகள் தங்களிடம் இருந்த கனமான பொருட்களைக் கடலில் வீசினார்கள். ஃபாஹியானும் தனது தண்ணீர் பாத்திரம், கழுவும் கலயம், வேறு சில பொருட்களைக் கடலில் எறிந்துள்ளார்.
அதற்குப் பிறகு திசையை அறிய முடியவில்லை. சந்திரன், சூரியன், நட்சத்திரங்களைப் பார்த்துக் கப்பலைச் செலுத்தியுள்ளனர். இருண்டு மழை பெய்யத் தொடங்க, காற்றடிக்கும் போக்கில் கப்பல் தத்தளித்துள்ளது. பெரிய கடலாமைகள், பெரிய அலைகள் மோதிக்கொள்வது மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது.
எந்தப் பக்கம் போகிறோம் என்பதே தெரியவில்லை. கடைசியாக வானம் தெளிவடைந்தபோது, திசையைக் கண்டறிய முடிந்தது. அப்போது கப்பல் சரியான பாதையில் போய்க்கொண்டிருந்தது. நல்ல வேளையாகப் பாறை எதிலும் கப்பல் மோதவில்லை.
அவதானிப்பு
ஃபாஹியானின் விவரிப்புகளில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டு இந்தியா, இலங்கை, சீன நிலைமையை ஓரளவு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் குப்தர்கள் ஆட்சி செலுத்தி வந்தனர். புத்த மதம் வெளிநாடுகளில் செல்வாக்குடன் இருந்தபோதும், தோன்றிய இந்தியாவில் அது மக்கள் செல்வாக்கையும் அரசர் ஆதரவையும் இழந்திருந்தது. அத்துடன் புத்தர் தீவிரமாகக் கண்டித்து வந்த சாதிப் பாகுபாடுகளும் மறைந்திருக்கவில்லை என்பதே அவரது விவரிப்புகளின் சுருக்கம்.

No comments:

Post a Comment