Sunday, 7 December 2014

நாடு முழுவதும் நீதிமன்றத்தில் 3 கோடி வழக்குகள் தேக்கம்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, “அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்” என்றார்.

உச்ச நீதிமன்றம் அளித்த புள்ளிவிவரங்கள்படி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வரை 64,919 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் 2013 இறுதி வரையிலான புள்ளிவிவரங்கள்படி நாட்டின் 24 உயர் நீதிமன்றங்களில் 44.5 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

உயர்நீதிமன்ற நிலுவை வழக்குகளில், சிவில் வழக்குகளின் எண்ணிக்கை 34,32,493 ஆகவும் கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை 10,23,739 ஆகவும் உள்ளது.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் இரண்டிலும் சேர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 10,43,398 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறைந்தபட்சமாக சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் 120 வழக்குகள் நிலுவையில் உள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 64,652 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கீழமை நீதிமன்ற நிலுவை வழக்குகளை பொறுத்தவரை 2013 இறுதியில், உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 56 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 41,98,761 வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும்.

டெல்லி நீதிமன்றங்களில் 3,81,615 கிரிமினல் வழக்குகள் உள்பட 5,22,167 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சிவில் வழக்குகள் மற்றும் சாதாரண குற்ற வழக்குகளை லோக் அதாலத் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment