வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவிதமான மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. ரெபோ விகிதம் 8 சதவீதம் என்ற நிலையிலேயே தொடர்கிறது.
அதேபோல ரொக்கக் கையிருப்பு விகிதமும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 4 சதவீதம் என்ற நிலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் வட்டி குறைப்பு இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சூசகமாக தெரிவித்தார். ஆனால் பணவீக்க விகிதமும், அரசாங்கத்தின் நிதி நிலைமையும் வட்டி குறைப்புக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் வட்டி குறைப்பு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கையை அறிவிக்கும் கூட்டம் நடைபெறும். ஆனால் சாதகமான சூழ்நிலை அதற்கு முன்பாக இருந்தால் கூட வட்டி குறைப்பு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருக்கிறது. அதனால் மீண்டும் பணவீக்கம் உயரலாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது. மேலும் பணவீக்கத்துக்கான இலக்கு 4 சதவீதம் என்பதுதான் சரி. இதிலிருந்து இரண்டு சதவீதம் அதிகமோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். மிதமான பணவீக்கமே நீடித்த நிலையான வளர்ச்சியை அளிக்க முடியும் என்றார்.
மேலும் நாட்டின் வளர்ச்சி மீது ரிசர்வ் வங்கிக்கு அக்கறை இல்லை என்பது போன்ற தவறான கண்ணோட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இந்த காலாண்டில் வளர்ச்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும். இல்லை எனில் அதிக பணவீக்கம், குறைவான வளர்ச்சி என்ற நிலைமைக்குத் தள்ளப்படுவோம். குறுகிய கண்ணோட்டத்தில் வளர்ச்சியை மட்டும் பார்க்கக் கூடாது.
மேலும் இப்போது முதலீடு செய்பவராக இருந்தால் வட்டி விகிதங்களை பற்றிக் கவலைப் படலாம் என்றார்.பேமெண்ட் வங்கிகள் குறித்து பேசியபோது, இப்போதைக்கு எத்தனை வங்கிகளுக்கு அனுமதி கொடுப்போம் என்று தெரியாது. இதற்காக இரண்டு குழுக்களை நியமனம் செய்திருக்கிறோம். அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் முடிவெடுப்போம். எப்படி இருந்தாலும் இரண்டு வங்கிகளுக்கு மேல் அனுமதி கொடுக்கப்படும் என்றார். நிறுவனங்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். மூன்று முதல் நான்கு மாதங்களில் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது. அடுத்த கடன் மற்றும் நிதிக்கொள்கை குறித்த கூட்டம் பிப்ரவரி 3-ம் தேதி நடக்க இருக்கிறது.
No comments:
Post a Comment