Wednesday, 28 May 2014

கோதுமையைக் காத்த விஞ்ஞானி

இந்தியாவின் முக்கிய விவசாய விஞ்ஞானியான பெஞ்சமின் பியாரி பால்1906-ம் ஆண்டு மே 26-ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகுந்த்பூரில் பிறந்தார். சிறுவயதில் அவர் பர்மாவில் தனது நாட்களைக் கழித்தார். பள்ளியில் படித்தபோதும் கல்லூரிக் காலத்திலும் அநேகப் பரிசுகளைப் பியாரி பால்வாரிக் குவித்துள்ளார்; கல்வி உதவித் தொகைகளும் அவருக்குக் கிடைத்துள்ளன. அவரது தந்தை மருத்துவராக இருந்தார். அவர் தனது ஆர்வம் காரணமாக ஓய்வு நேரத்தைத் தோட்டத்தில் செலவிடுவார். பூச்செடிகளை வளர்ப்பதும், காய்கறிகளைப் பயிரிடுவதும் அவரது பொழுதுபோக்கு. எனவே சிறுவயதிலேயே தந்தை மூலமாகச் செடி, கொடிகள் உள்ளிட்ட தாவர வகைகள் பியாரி பாலுக்கு அறிமுகமாயின.
பியாரி பாலின் தந்தை, தோட்டவேலையில் சோர்வடையும்போது பாலைத் தோட்டத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கோருவார். பியாரி பாலும் அதை விருப்பத்துடன் நிறைவேற்றிவந்தார். வெறுமனே தோட்டத்தைக் கவனிப்பதுடன் நில்லாமல் தாவரங்கள் குறித்த தனது அறிவையும் புத்தகங்கள் மூலம் பியாரி பால்வளர்த்துக்கொண்டார். இதனால் ஆயுள் முழுவதும் தாவரங்கள் பியாரி பாலுக்கு உற்ற தோழனாக விளங்கின. பியாரி பால்தனது இளங்கலை, முதுகலைப் பட்டங்களை ரங்கூன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். 1929-ல் கோதுமை தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பிஎச்டி பட்டம் பெற்று பர்மாவுக்குத் திரும்பினார்.
1933-ல் புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு ஆய்வுப் பணி கிடைத்தது. இந்திய விடுதலைக்கு முன்னர் இந்தியாவில் அதிகமாக ஆராய்ச்சி நடந்ததில்லை என்கிறார்கள். பயிர்கள் எல்லாம் நோய்களுக்கு இரையாயின. கோதுமைப் பயிரைப் பூஞ்சை நோய் தாக்கியதால் அப்பயிர் பெருவாரியாக அழிவுற்றது. கோதுமை அதிக விளைச்சலைக் கொடுக்க முடியாமல் வதங்கியது. இதைக் கண்ட பியாரி பால்புது வகைக் கோதுமைப் பயிரைக் கண்டறிய முனைந்தார்.
என்பி 700, 800 வகைக் கோதுமைகளை அவர் உருவாக்கினார். இவை குறிப்பிட்ட ஒரு பூஞ்சை நோயைத் தான் முறியடித்தது. ஆனால் 1954-ல் அவர் என்பி 809 ரகக் கோதுமையைக் கண்டறிந்த பின்னர்தான் இந்த முயற்சியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. இந்த ரகம் கோதுமையைத் தாக்கும் மூன்று விதப் பூஞ்சை நோய்களையும் எதிர்த்து நின்று மகசூலை அள்ளிக் கொடுத்தது. இந்தியக் கோதுமை உற்பத்தியில் அவரது பங்களிப்பு முக்கியமானது. உலகம் முழுவதும் அவரது கண்டுபிடிப்புக்கு வெகுவான பாராட்டுக் கிடைத்தது.
1965-ல் பியாரி பால்இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research - ICAR) தலைமை இயக்குநரானார். அவர், சுமார் 40 வகைப்பட்ட ரோஜா ரகங்களையும் உருவாக்கியுள்ளார். ரோஜாச் செடிகள் தொடர்பாக அநேகப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். 1987-ல் இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருதளித்துக் கௌரவித்தது. 1989-ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அவர் காலமானார்.

முதல் பெண் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் என்ற சிறப்பைப் பெறுகிறார், சுஷ்மா ஸ்வராஜ்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், வெளியுறவு மற்றும் வெளிநாடு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் (62) பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம், அவர் இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் என்ற சிறப்பைப் பெறுகிறார். அத்துடன், தற்போது வெளியுறவுத் துறைக்கு செயலராக இருப்பதும் சுஜாதா சிங் என்ற பெண் என்பதும் கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகள் பெரும் சவாலாக உள்ள வேளையில், வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்புகள் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சட்டம் பயின்றவரான சுஷ்மா ஸ்வராஜ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். 1970-களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்ததன் மூலம், அவர் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தனது 25 ஆவது வயதில் ஹரியாணாவின் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், 1977 ஆம் ஆண்டு, அவர் பாஜகவின் முதல் பெண் செய்தித்தொடர்பாளாராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக சுஷ்மா நியமிக்கப்பட்டார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு கட்சியால் முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார்.
பின்னர், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததன் காரணமாக, டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விலகிய அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு உள்துறை; ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு; சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
கேபினட் அமைச்சர்கள்:
1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.
2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.
4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.
5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.
7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.
8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.
9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.
10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.
11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.
12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.
13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.
14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.
15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.
17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.
18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங்- விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று (திங்கள்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 45 அமைச்சர் களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.
2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.
8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.
இணை அமைச்சர்கள்:
1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை
2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை
3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.
4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.
5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.
6. கிரண் ரிஜிஜு- உள்துறை.
7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.
8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.
9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.
10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.
11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.
12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.
பிரதமராக பொறுப்பேற்றார் மோடி:
பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்று காலை முறைப்படி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
காலை பிரதமர் அலுவலகத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து கையசைத்து விட்டு அலுவலகத்திற்குள் சென்ற மோடி, உள்ளே இருந்த மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.
நிதிஅமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி:
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி, "தன் முன் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்துவதும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் தற்போதைய தேவை" என்றார்.
வெளியுறவு அமைச்சரான முதல் பெண்:
சுஷ்மா ஸ்வராஜ் (62), இந்திய அரசியல் வரலாற்றில் வெளியுறவு அமைச்சரான முதல் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
25 வயதிலேயே ஹரியானா அமைச்சரவையில் இடம்பிடித்து. இளம் அமைச்சர் என்ற சாதனையை படைத்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
பின்நாளில், டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதல்வர், அரசியல் கட்சியின் முதல் பெண் செய்திதொடர்பாளர் ஆகிய பெருமைகளும் சுஷ்மா ஸ்வராஜை சேர்த்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவின் பிரதமர்கள் வரிசை

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையில் 13 பேர் முழு நேரப் பிரதம மந்திரிகளாகப் பதவி வகித்துள்ளனர்.
குல்சாரிலால் நந்தா மட்டும் 2 முறை இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். நேருவின் மறைவுக்குப் பிறகு 27.5.1964 முதல் 9.6.1964 வரை 13 நாள்களும், லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு 11.1.1966 முதல் 24.1.1966 வரையில் மீண்டும் ஒரு 13 நாள்களும் இடைக்காலப் பிரதமராக இருந் திருக்கிறார்.
பாரதிய ஜனதா தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் 3 முறை பிரதமராகப் பதவியேற்றுள்ளார். முதல்முறை வெறும் 16 நாள்கள் மட்டுமே பதவியிலிருந்துவிட்டு எந்தக் கட்சியும் ஆதரவு தர முன்வராததால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்று பதவி விலகினார்.
இரண்டாம் முறை அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சுமார் 13 மாதங்கள் பதவியிலிருந்தார். அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு ராஜிநாமா செய்தார்; மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தார். மொத்தம் 6 ஆண்டுகள் 64 நாள்கள் பதவியிலிருந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹர்லால் நேரு 1952, 1957, 1962 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்றது மட்டும் 4 முறை. அவர் மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாள்கள் பதவியில் இருந்துள்ளார். இந்தியப் பிரதமராக அதிக காலம் பதவி வகித்தவரும் இவரே.
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற இந்திரா காந்தி அதன் பிறகு 1967, 1971 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு 2 முறை பதவியேற்றார். பிறகு 1980 பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பதவியேற்றார். அவரும் நேருவைப்போல மொத்தம் 4 முறை பதவியேற்றிருக்கிறார். அவர் 15 ஆண்டுகள் 350 நாள்கள் பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார்.
நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் 24.3.1977-ல் பிரதமராகப் பதவி ஏற்றார். 28.7.1979-ல் பதவி விலகினார். அவர் 2 ஆண்டுகள் 126 நாள்கள் பதவி வகித்தார்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ராஜீவ் காந்தி பதவியேற்றார். அதன் பிறகு பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் பதவி யேற்றார். அவர் 2 முறை பதவியேற்றார். அவர் மொத்தம் 5 ஆண்டுகள் 32 நாள்கள் பதவி வகித்தார்.
சரண் சிங் (170 நாள்கள்), சந்திரசேகர் (223 நாள்கள்), எச்.டி. தேவகௌடா (324 நாள்கள்), ஐ.கே. குஜ்ரால் (332 நாள்கள்) ஆகியோர் ஓராண்டுக்கும் குறைவாகப் பதவி வகித்தனர்.
நரசிம்ம ராவ் 21.6.1991-ல் பதவியேற்று 16.5.1996 வரை பதவி வகித்தார். மொத்தம் 4 ஆண்டுகள் 330 நாள்கள்.
மன்மோகன் சிங் 22.5.2004-ல் முதல் முறையாகப் பிரதமர் பதவி ஏற்றார். பிறகு 2009-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றார். மொத்தம் 10 ஆண்டுகள் 4 நாள்கள் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். நேரு, இந்திராவுக்குப் பிறகு அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
இப்போது 26.5.2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
ஜவாஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவகௌடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் என்று 14 பேர் இதுவரை பதவி வகித்துள்ளனர்.
இவர்களில் குல்சாரிலால் நந்தா 'இடைக்காலப் பிரதமர்தான்' என்பதால் அவரை முழுநேரப் பிரதமர் பட்டியலில் சேர்க்காமல் சிலர் விட்டுவிடுவதுண்டு. ஆனால், அரசியல் சாசன சட்டப்படி இடைக்கால/ தற்காலிகப் பிரதமர் என்றெல்லாம் இல்லை என்பதால், குல்சாரிலால் நந்தாவும் அதிகாரப்பூர்வ பிரதமரே. ஆகவே, மோடி 15-வது பிரதமர்.
பிரதமர்கள் பதவிக்காலம்
1. ஜவாஹர்லால் நேரு 1947-1952
2. ஜவாஹர்லால் நேரு 1952-1957
3. ஜவாஹர்லால் நேரு 1957-1962
4. ஜவாஹர்லால் நேரு 1962-1964
5. குல்சாரிலால் நந்தா 1964-1964
6. லால்பகதூர் சாஸ்திரி 1964-1966
7. குல்சாரிலால் நந்தா 1966-1966
8. இந்திரா காந்தி 1966-1967
9. இந்திரா காந்தி 1967-1971
10. இந்திரா காந்தி 1971-1977
11. மொரார்ஜி தேசாய் 1977-1979
12. சரண் சிங் 1979-1980
13. இந்திரா காந்தி 1980-1984
14. ராஜீவ் காந்தி 1984-1989
15. வி.பி. சிங் 1989-1990
16. சந்திரசேகர் 1990-1991
17. பி.வி. நரசிம்ம ராவ் 1991-1996
18. அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-1996
19. எச்.டி தேவகௌடா 1996-1997
20. ஐ.கே. குஜ்ரால் 1997-1998
21. அடல் பிஹாரி வாஜ்பாய் 1998-1999
22. அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004
23. மன்மோகன் சிங் 2004-2009
24. மன்மோகன் சிங் 2009-2014
25. நரேந்திர மோடி 26.5.2014
நரேந்திர மோடி : இந்தியப் பிரதமர் | மே 26, 2014
இயற்பெயர்: நரேந்திர தாமோதர்தாஸ் மோடி
பிறந்த தேதி, இடம்: 17 செப்டம்பர் 1950 (வயது 63), வட்நகர், மேஷனா மாவட்டம், குஜராத்
கல்வி:
அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம், குஜராத் பல்கலைக்கழகம்.
மனைவி: யசோதாபென் (1968-ல் திருமணம்)
• பிற்படுத்தப்பட்ட சமூகம் (ஓ.பி.சி.) நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்
• தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி, ஹிராபென் தம்பதியருக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தார்.
• சிறுவயதில் தனது சகோதரருடன் இணைந்து டீ கடை நடத்தினார்
• சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து தனது கல்லூரி பருவத்தில் அந்த அமைப்பின் முழுநேர பிரச்சாரகராகப் பணியாற்றினார்.
குஜராத் முதல்வர் பதவி
07 அக். 2001 முதல் 22 டிச. 2002 வரை
22 டிச. 2002 முதல் 22 டிச. 2007 வரை
23 டிச. 2007 முதல் 20 டிச. 2012 வரை
20 டிச. 2012 முதல் 22 மே 2014 வரை
17 செப்டம்பர் 2011- 2012 தொடக்கம் வரை: சத்பாவனா இயக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முறை உண்ணாவிரதம் இருந்தார்.
செப்டம்பர் 2013: கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு
மே 16, 2014: மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் போட்டியிட பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது.
வெளிநாட்டுப் பயணங்கள்:
சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
1995: ஐந்து மாநில பொறுப்புடன் பாஜக தேசிய செயலாளராக நியமனம்
1998: தேசியச் செயலாளராக பதவி உயர்வு. 2001-ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்தார்.
2002: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

நோட்டாவுக்கு விழுந்த பசுமை வாக்குகள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி- தோல்விகளைப் பற்றியே பெரிதாகப் பேசப்படுகிறது. அத்துடன் அவசியம் பேசப்பட்டிருக்க வேண்டிய மற்றொரு விஷயம் நோட்டா (None Of The Above).
முன்பு 49 ஓ என்ற பெயரில் இருந்த இந்த வாய்ப்பு, தற்போது நோட்டாவாக மாறியிருக்கிறது. வாக்கைச் செலுத்துவேன், ஆனால் களத்தில் உள்ள வேட்பாளர்கள் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டது. நீண்டகாலமாகச் சட்டத்தில் இருந்தும், நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இது பற்றித் தேர்தல் அலுவலர்களுக்கே தெரியாத நிலைமையும் இருந்தது.
2013-ல் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலேயே நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதுதான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டது. பா.ஜ.கவுக்குக் கிடைத்த பெருவெற்றி, பதிவான நோட்டா வாக்குகளின் முக்கியத்துவத்தைச் சற்றுக் குறைத்துவிட்டது என்று சொல்லலாம்.
இந்த முறை நாடு முழுவதும் 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நோட்டாவில் பதிவாகி இருக்கின்றன. இது மொத்த வாக்குகளில் 1.1 சதவீதம். இதில் உத்தரப்பிரதேசம் 5.9 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. வாக்குகள் எண்ணிக்கை 5,82,062. இது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம் நம்மைப் போன்ற இரண்டு மடங்கு தொகுதிகளைக் கொண்ட மாநிலம். அங்கே பெற்றுள்ள நோட்டா வாக்குகளுக்கு இணையாகத் தமிழகமும் பெற்று உள்ளதைக் கவனிக்க வேண்டும்.
நீலகிரி நாட்டிலேயே அதிகம்
தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் குறைந்தபட்சமாக 4,748 வாக்குகள் பதிவாயின, அதிகபட்ச மாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா போட்டியிட்ட நீலகிரி தொகுதியில்தான் நாட்டிலேயே அதிகபட்ச நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கை 46,559. இதற்கு அந்தத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் போட்டியிட முடியாமல் போனதும் ஒரு காரணம். ஆ.ராசா 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கியது மற்றொரு காரணம்.
மோடி முன்பு முதல்வராக இருந்த குஜராத், 4.5 லட்சம் நோட்டா வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. நோட்டா சதவீத அடிப்படையில் மேகாலயா முதலிடத்தில் இருக்கிறது. அங்குப் பதிவான மொத்த வாக்குகளில், நோட்டா வாக்குகள் 2.8 சதவீதம்.
பழங்குடி தொகுதிகளில்
தி இந்து (ஆங்கிலம்) நடத்திய ஓர் ஆய்வில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் சராசரியாக 10,000 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாகப் பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் பதிவான நோட்டா வாக்குகளின் சதவீதம், பொதுத் தொகுதிகளைப் போல இரண்டு மடங்கு.
நீலகிரி தொகுதி தலித் தனித் தொகுதி என்பதைக் கவனிக்க வேண்டும். "தேர்தலுக்கு முன் யாருக்கு வாக்களிப்பது என்று பழங்குடிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஒரு பிரிவு நோட்டாவைத் தேர்ந்தெடுத்தாலும், மற்றொரு பிரிவினர் தங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பினர். அதாவது, நிலப் பட்டா பெற்றுத் தரும் கட்சிக்கு. பழங்குடிகள் நிறைந்த இந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் பட்டா இல்லாமல் போராடி வருகின்றன” என்று ‘டவுன் டு எர்த்' சுற்றுச்சூழல் இதழிடம் பழங்குடி செயல்பாட்டாளர் சி.ஆர்.பிஜாய் கூறியுள்ளார்.
குஜராத்தில்
குஜராத்தில் சுற்றுச்சூழல், காடு தொடர்பான பிரச்சினைகள் நிலவும் தொகுதிகளில்தான் அதிக நோட்டா வாக்குகள் பதிவாகி இருப்பதாகச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் ரோஹித் பிரஜாபதி, திருப்தி ஷா ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாஹோத் தொகுதியில் பதிவான 32,000 வாக்குகள் அந்தத் தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. பழங்குடிகளுக்கான உரிமைகளும், தண்ணீர் பற்றாக்குறையும் இந்தப் பழங்குடி தனித் தொகுதியில் நிலவும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள்.
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் தொகுதியில் 38,772 வாக்குகளைப் பெற்று நோட்டா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு, மாவோயிஸ்ட் தாக்குதலில் இறந்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் தீபக்கை 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவின் தினேஷ் காஷ்யப் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதி சுற்றுச்சூழல், வளர்ச்சிப் பிரச்சினைகளால் திணறிவருகிறது. தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தின் கனிமச் சுரங்க நடவடிக்கைகளை மக்கள் இங்குக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அதேநேரம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நிலவும் எல்லாத் தொகுதிகளிலும் நோட்டா வாக்குகள் அதிகம் பதிவானதாகக் கூறிவிட முடியாது. நாட்டிலேயே அதிக சதவீத நோட்டா வாக்குகள் பதிவான மேகாலயத்தில் இந்த நிலைமையைப் பார்க்கலாம். "நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் இடங்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கே வாக்களித்திருக்கிறார்கள்" என்கிறார் நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கு எதிராகப் போராடிவரும் அர்வத் சல்லம்.
மேற்கண்ட உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது, சுற்றுச்சூழல்-வளர்ச்சிப் பிரச்சினைகள் அதிகமுள்ள இடங்களிலும் பழங்குடி, தலித் தொகுதிகளிலும் மக்கள் நோட்டா வாக்கைக் கூடுதலாகத் தேர்ந்தெடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மாநில அளவில் நோட்டா வாக்குகள் தற்போது மட்டும் 1 - 3 சதவீதம் பதிவாகி இருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நோட்டா பற்றி கடந்த தேர்தல் வரை பெரும்பாலோருக்குத் தெரியாது. இந்த முறையும் பரவலான விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களில் நோட்டா முக்கிய இடத்தைப் பெறும். வாக்கு இயந்திரத்தில் அது கடைசி இடத்தைப் பிடித்தாலும், அரசியல் வாதிகள் மீதான அவநம்பிக்கையின் அளவுகோலாக அது மாறும் காலம் வரும் என்று நம்பலாம்.

மே 31- புகையிலை எதிர்ப்பு நாள்: உயிர் குடிக்கும் இலை

அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை மோசமானதுதான்.
அதிகரிக்கும் இறப்புகள்
உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக Lancet oncology journal-ன் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.
உலக அளவில்
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபித்துவிடும். இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.
இந்திய அளவில்
சரி, இந்தியாவின் நிலைமை? இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாதிப்புகள் என்ன?
புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
யாருக்குப் பாதிப்பு
“ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லார்மின்.
நிறுத்துவோம்
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடிப்பது, பான், குட்கா, புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டும். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து அது வேகமாக நிகழும்.
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைக்கு உலக விருப்பமாக உள்ளது. இதை 27 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டுக்கான வாசகம், புகையிலை மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

Monday, 26 May 2014

பனிக்கட்டியுடன் உப்பைச் சேர்க்கும்போது அதன் உருகுநிலை

01. ஒரு பொருள் தனிச்சுழி வெப்பநிலையில் மட்டுமே கதிர்வீச்சு ஆற்றல் உமிழ்வதை நிறுத்தும்.
02. அழுத்தம் அதிகரித்தால் கொதிநிலை அதிகரிக்கும் என்ற தத்துவம் பிரஷர் குக்கரில் பயன்படுகிறது.
03. மனித உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது இரத்தத்தின் பாகியல் எண் மதிப்பு குறைகிறது.
04. பாதரசம் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்பட முக்கிய காரணம் - குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன்.
05. பனிக்கட்டியுடன் உப்பைச் சேர்க்கும்போது அதன் உருகுநிலை குறைகிறது.
06. வெவ்வேறு திரவங்கள் வெவ்வேறு அளவில் பருமப்பெருக்கம் அடைகின்றன.
07. நிலை மாற்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் வெப்பம் - உலர்மறை வெப்பம்.
08. சூடான காற்ரு சாதாரணக் காற்றைவிட லேசானது.
09. ஒரு இயக்கும் குளிர்பதனி மூடிய அறையில் வைக்கப்படும்போது அறையின் வெப்பநிலை உயரும்.
10. பருமன் மாறாத போது வாயுவின் வெப்ப நிலை அதிகரித்தால் அது அழுத்தப் பெருக்கம் அடைகிறது.

11. ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருட காலத்தில் பயணிக்கும் தொலைவு.
12. ஒளியின் தீவிரத்தை (Intensity) அளக்க உதவும் கருவி - கான்ட்லா.
13. கண்ணுக்கு சுகத்தைக் கொடுக்கும் நிறம் - மஞ்சள்.
14. ஒளியைக் குறித்த படிப்பு -  Optics
15. ஒளி வெற்றிடத்தில்தான் மிக அதிக வேகத்தில் பாயும்.
16. குவாண்டம் சித்தாந்தத்தை வெளியிட்டவர் - மாக்ஸ் பிளாங்
17. ஒளியின் அடிப்படை நிறங்கள் - பச்சை, சிவப்பு, நீலம்
18. மின்மினிப்பூச்சிகள் இரவில் ஒளி சிதற அதன் உடலில் உள்ள லூஸிஃபெரின் என்ற வேதிப்பொருளே காரணம்.
19. ஒளியலைக்கொள்கையை கண்டுபிடித்தவர் - கிறிஸ்டியன் ஹைகன்ஸ்
20. வானவில்லின் மேற்பகுதியில் காணப்படும் நிறம் - சிவப்பு

21. ஆப்டிகல் பைபரில் பயன்படும் தத்துவம் - முழு அக எதிரொளிப்பு.
22. வானவில் உருவாகக் காரணமான நிகழ்வு - நிறப்பிரிகையும் முழு அக எதிரொளிப்பும்.
23. பொருள்களின் ஒளிவிலகல் எண்ணைக் காணப்பயன்படுவது - நிறமாலைமானி.
24. தொலை நகலியினால் (Fax) அனுப்ப வேண்டிய ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை - வரிக்கண்ணோட்டம்.
25. சூரிய அடுப்பில் பயன்படுவது - குழி ஆடி.
26. ஒளிச்செறிவின் அலகு - கேண்டிலா.
27. ஒளிவிலகலின் போது ஒளியின் திசையில் மாற்றம் ஏற்படும்.
28. ஒளியின் திசைவேகத்தை முதன் முதலில் வெற்றிகரமாக கணக்கிட்டவர் - ரோமர்.
29. இரு இணையான சமதள ஆடிகளுக்கு இடையிலுள்ள பொருளின் பிம்பங்களின் எண்ணிக்கை - எண்ணில்லாதது.
30. நீரின் ஒளிவிலகல் எண்: 1.33. ஒளிவிலகல் எண் : 2.42.

31. இந்த பிரபஞ்சத்தின் மிக அதிகமாகக் காணப்படும் வாயு - ஹைட்ரஜன்.
32. காற்று மண்டலத்தில் மிக அதிகமாக காணப்படும் வாயு - நைட்ரஜன்
33. சிரிப்பூட்டும் வாயு என்பது - நைட்ரஜன் ஆக்ஸைடு.
34. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.
35. மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்ததே ஒஸோன்.
36. தண்ணீரில் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய வாயு - குளோரின்
37. போபால் விஷவாயு விபத்தில் வெளியேறிய வாயு - மீதைல் ஐசோசோ சயனைட்
38. இயற்கை எரிவாயுவில் பெரும்பான்மையாக அடங்கியிருப்பது - மீத்தேன்.
39. ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர் - ஜோசப் ப்ரீஸ்ட்லி
40. கார்பன்-டை ஆக்சைடைக் கண்டுபிடித்தவர் - ஜோசப் பிளாக்.

41. புறவிசை செயல் படாதவரை ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருக்கும் என்பது - நியூட்டன் விதி.
42. பொருளின் நிலைமைப்பண்பு அதன் நிரையைப் பொறுத்தது.
43. மேலிலிருந்து ஒருபொருள் தானாக கீழே விழும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கும்.
44. இயங்கும் பொருளின் உந்தம் நிறையையும், திசைவேகத்தையும் சார்ந்தது.
45. புவியின் விடுபடு திசைவேகத்தின் மதிப்பு - 11.2 கி.மீ/வி
46. துருவப்பகுதியில் புவியின் ஆரம் குறைவாக இருப்பதால் அங்கு புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு அதிகம்.
47. மூன்று வகை அலைகள்: இயந்திரவியல் அலைகள், மின்காந்த அலைகள் மற்றும் பருப்பொருள் அலைகள்.
48. ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலைபரவும் போது அலை நீளமும், திசை வேகமும் மாறும்.
49. ஒரு பொருள் எந்த நிலையிலிருந்தாலும் அதன் எடை முழுவதும் ஒரு புள்ளியின் வழியேதான் செயல்படுகிறது.
50. அதிகத் திசை வேகத்தோடு புவியின் வளி மண்டலத்தின் நுழையும் பொருள் தீப்பிடித்து எரியக் காரணம் - காற்றின் பாகுநிலை.

ஆழ்கடலின் ஆபரணங்கள்

சங்குகள், முத்துச்சிப்பிகள் இரண்டும் மெல்லுடலி வகையைச் சேர்ந்தவை. மென்மையான உடலைக் கொண்டிருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும் பாதுகாப்புக் கவசமாக இயற்கையிலேயே மேல் ஓட்டைப் பெற்றுள்ளன. பிறந்தது முதல் இந்த ஓடு சிறிது சிறிதாக உருவாக்கப்படுகிறது.
சங்குகள்
சங்குகள் (Counch, Cowry shell) கடலடி மட்டத்தில் மணற்பாங்கான பகுதிகளில் கூட்டமாக வசிக்கும். இவை அதிகமாகக் காணப்படும் பகுதிகள் சங்குப் படுகைகள் என்றழைக்கப்படுகின்றன. மணலில் புதைந்திருக்கும் புழுக்களை இவை உண்கின்றன. ஆண் சங்குகளைவிட, பெண் சங்குகள் அளவில் பெரியவை.
இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் சங்கு வெளியிடும் முட்டைக்கூடு, சங்குப்பூ என்றழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டில், குறுக்குவாட்டில் ஒன்றன்மீது மற்றொன்றாக 28 - 34 அறைகள் இருக்கும். இவற்றில் கருத்தரித்த முட்டைகள் இருக்கும். கூட்டின் பக்கவாட்டில் உள்ள பிளவு வழியாகக் கடல் நீர் உள்ளே சென்றுவரும். இதன்மூலம் கருவுற்ற முட்டைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள மன்னார் வளைகுடாவில் வெண் சங்கு, மாட்டுத் தலை சங்கு, தவளைச் சங்கு, வாழைப்பூ சங்கு, விநாயகர் சங்கு, ஐவிரல் சங்கு, தேள் சங்கு போன்ற வகைகள் உள்ளன.
முத்துச் சிப்பிகள்
மன்னார் வளைகுடாவில் நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் அதிகம் இருப்பதால், அவற்றை உண்டு வாழும் முத்துச்சிப்பிகளும் (Pearl) இங்கு அதிகம். முத்தை உற்பத்தி செய்யும் பிங்டாடா ஃபியுகடா (Pinctada fucata) என்ற வகை முத்துச்சிப்பி இங்குள்ளது.
முத்துச் சிப்பிகள் தங்களது ஓட்டுக்குள் நேக்ரியஸ் என்ற மென்மையான அடுக்கைக் கொண்டுள்ளன. இந்த மெல்லுடலிகளின் உடலுக்குள் வேற்றுப் பொருள் செல்லும்போது ரத்தம் அல்லது சீழ் போலிருக்கும் நேக்ரி (Nacre) என்ற திரவத்தை, அந்த நேக்ரியஸ் அடுக்கு சுரக்கிறது. இந்தத் திரவம் அந்த வேற்றுப் பொருளைச் சூழ்ந்து, காலப்போக்கில் கடினமான முத்தாக மாறிவிடுகிறது.
கறுப்பு, வெளிர் சிவப்பு, தங்கம், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் முத்துகள் இருக்கும். வட்ட வடிவ முத்துகள் அதிக மதிப்புடையவை. எடை, நிறம், பளபளப்பைப் பொறுத்து முத்துகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முத்துச்சிப்பிப் பூச்சிகள் கடலில் இருந்து பிடித்து வளர்க்கப்பட்டு, செயற்கையாகவும் முத்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆபத்துகள்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவு, கழிவுநீர், வரைமுறையற்ற மீன்பிடித்தல் போன்றவை காரணமாகச் சங்குப் படுகைகள், முத்துச் சிப்பிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முத்துக் குளி துறை என்று பண்டைக் காலத்தில் இருந்து பெயர்பெற்று விளங்கிய தூத்துக்குடியில், இன்றைக்கு முத்துக்குளித்தலே நடைபெறாத அளவுக்கு முத்துச் சிப்பிகள் குறைந்துவிட்டது நம்முடைய அலட்சியத்துக்கு உதாரணம்.

தொழிலாளர் நல அதிகாரியாக ஆசையா?


தொழிலாளர் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய-மாநில அரசு துறைகளில் தொழி லாளர் ஆய்வாளர்கள், நல அதிகாரிகள், உதவி ஆணையர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் பணிபுரிந்துவருகிறார்கள். இதேபோல், அமைப்புசார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி (பி.எப்.) உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் வழங்குவதற்காகத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் உள்ளனர்.
இத்தகைய பணிகளில் சேர தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர் மேலாண்மை தொடர்பான பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் நேரடி உதவி ஆணையர் பதவிக் கான தேர்வெழுத தொழிலாளர் நலச் சட்ட பட்டயப் படிப்பு, தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பு (Labour Management) போன்றவை கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வித் தகுதி பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்படும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் (Assistant Inspector of Labour) பணியில் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரையில், தொழிலாளர் உதவி ஆணையர், உதவி தொழிலாளர் நல அதிகாரி, தொழிலாளர் அதிகாரி, உதவி இயக்குநர் (தொழிலாளர் நலன்) போன்ற பதவிகளும், பி.எப். உதவி ஆணையர் பதவியும் மேற்சொன்ன கல்வித்தகுதி கொண்ட பட்டதாரிகளால் யூபிஎஸ்சி (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் மாநில அரசுக் கல்வி நிறுவனமான தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம் தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு (B.L.M.), பட்டமேற்படிப்பு (M.L.M.) மற்றும் பகுதிநேர, வாராந்திர முதுநிலைப் பட்டயப் படிப்புகளை வழங்குகிறது. இளநிலை படிப்பில் 55 இடங்களும், பட்ட மேற்படிப்பில் 40 இடங்களும், பகுதிநேர முதுநிலை பட்டயப் படிப்பில் 100 இடங்களும், வாரஇறுதி பட்டயப் படிப்பில் 100 இடங்களும் உள்ளன.
இளநிலை பட்டப் படிப்பில் சேர பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். முதுகலைப் படிப்பிலும், முதுநிலை டிப்ளமா படிப்பிலும் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு தேவை. குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டியது அவசியம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் என்றால் 40 சதவீத மதிப்பெண்ணே போதுமானது.
இந்த ஆண்டில் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100. விண்ணப்பங்களைத் தபால் மூலமாக பெற, கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இதற்கு, விண்ணப்பக் கட்டணத்தை ‘இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம், சென்னை-5’ பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டாக அனுப்ப வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளில் சேர மே 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்ட மேற்படிப்புக்கு இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனத்தை 044-28440102, 28445778 ஆகிய தொலைபேசி எண்களிலும் அக்கல்வி நிறுவன பேராசிரியர் வி.ஜி. தியாகராஜனை 98411-92332 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். “இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்கிறோம்” என்றார் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனத்தின் இயக்குனரும் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையருமான ஏ.பாலசுப்ரமணியன்.

இந்திய மருத்துவ கவுன்சில்


பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு முன்பே இந்தக் காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்துவிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்வு செய்யும் முன் பலருடன் பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள். ஆனால், நம்மில் எத்தனை பேர் நாம் தேர்ந்தெடுக்கும் துறைக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முயல்கிறோம்? மிகவும் சொற்ப அளவிலேயே இருப்பார்கள். அதைப் போக்கும் வகையில் ஒவ்வொரு கல்வி சார்ந்த அமைப்புகள் பற்றித் தொடர்ந்து பார்ப்போம். இந்த வாரம் இந்திய மருத்துவ கவுன்சில் பற்றி:
இந்திய மருத்துவ கவுன்சில் என்பது நம் நாட்டில் சீரான, தரமான மருத்துவக் கல்வியை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. இது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1933-ம் ஆண்டின் படி, 1934-ல் நிறுவப்பட்டது. இது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. சுதந்திரம் அடைந்த பிறகு மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன் படி, மாற்றியமைக்கப்பட்டது. இது தன்னாட்சி கொண்ட அமைப்பாக இருந்தாலும், மத்திய மனித வள அமைச்சகத்தின் உயர்க் கல்வித் துறையின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது.
பணிகள்
இந்த அமைப்பு மருத்துவக் கல்வி சார்ந்த பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமான பணி. இந்த அமைப்பே மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்குவது, தேர்ச்சி பெறும் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, மருத்துவப் பணிகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளையும் செய்து வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த புட்டா சீனிவாஸ் இருக்கிறார். இவரது தலைமையில் 68 உறுப்பினர்களுடன் இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கெனத் தனியாக http://www.mciindia.org/என்னும் இணையதளம் உள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் அறிந்துகொள்ளப் பல தகவல்கள் இதில் உள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பல்கலைக்கழங்கள் உள்ளன, அரசு, தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிலவரம், ஸ்பெஷாலிட்டி துறைகளுக்குச் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. மருத்துவர்களின் பதிவு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவப் பேராசிரியர்களின் தகவல், கல்லூரிகளின் தர ஆய்வு அறிக்கைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்துகொள்ள வசதியாகப் பல்வேறு கல்லூரிகளின் தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடு, விதிகள், அதிகாரங்கள் எனப் பல தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலையும், அதன் இணைய தளத்தையும் ஒருமுறை பார்ப்பது மிகவும் நல்லது.

மதிப்பெண்களுக்கு அப்பால்...

சுந்தருக்கு வயது 22. புத்திசாலி. பி.எஸ்.சி. பட்டப் படிப்பு முடித்திருக்கிறான் தற்போது மேற்கொண்டு படிக்க அவனுக்கு விருப்பமில்லை. வேலைக்கு விண்ணப்பித்தான்.
சாந்தியும் பி.எஸ்.சி. அவளுக்கும் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை. சாந்திக்கு உடனடியாக வேலை கிடைத்துவிட்டது. சுந்தருக்குக் கிடைக்கவில்லை. இருவருக்கும் மதிப்பெண்களிலோ புத்திசாலித்தனத்திலோ பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சாந்திக்குக் கிடைத்தது சுந்தருக்குக் கிடைக்கவில்லை.
சுந்தர் படித்தான். நன்றாகப் படித்தான். ஆனால் வேறு எதையும் அவன் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சாந்தி அப்படி அல்ல. படிக்கும்போதே கணினிப் பயிற்சி முடித்தாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள், மக்கள் தொடர்பிலும் குறுகிய காலப் பயிற்சியை முடித்தாள்.
இதுதான் இருவருக்குமிடையே வித்தியாசம். இதுதான் வேலை கிடைப்பதற்கும் வேலை கிடைக்கத் தாமதமாவதற்கும் காரணம்.
சாந்தி வேலை என்னும் உலகத்திற்குள் நுழையும்போது, அந்த உலகத்திற்குத் தேவையான திறன்களுடன் உள்ளே நுழைந்தாள். சுந்தரோ, அனுபவமற்ற பட்டதாரியாக வேலை தேடத் தொடங்கிவிட்டான். வேலைக்கான நேர்காணலில், சாந்தியின் கணினித் திறன், மக்கள் தொடர்புத் திறன் போன்றவை, அத்தகைய திறமைகள் அற்ற இன்னொரு பட்டதாரியைவிட அவளை முன்னணியில் நிறுத்தின.
நமது நாட்டில் வேலையற்ற, தகுதிக்குக் குறைவான வேலையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இதுதான் நடக்கிறது.
திறமை வளர
அறிவை வளர்த்துக்கொள்வது என்பது வேறு, திறமையை வளர்த்துக்கொள்வது என்பது வேறு. மதிப்பெண்கள் முக்கியம்தான். ஆனால் அவை மட்டும் எல்லாவற்றையும் முடிவுசெய்துவிடுவதில்லை.
சுந்தர் வேலை என்ற உலகத்தில் நுழைந்தபோது, அது சார்ந்த சில திறன்களுக்கு முன்னால், அவன் படிப்பு ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. அவனது திறமைகள் மிகவும் குறைவு. அவனைப் போன்ற பலர், வேலை உலகத்தில் போட்டியிடத் தேவையான, கூடுதல் தகுதிகள் இல்லாமலேயே வேலை உலகத்தில் நுழைய நினைக்கிறார்கள்.
கல்லூரிகள் பாடத்தை மட்டும் சொல்லித் தருகின்றன. வேலை உலகத்திற்கான பிற திறன்களைக் கற்றுக் கொடுப்பதில்லை. பிற திறமைகள் குறைவாக இருந்தால் வேலை கிடைக்கத் தாமதமாகும். நல்ல வேலை கிடைப்பது கடினமாகும். தகுதிக்குக் குறைவான வேலையைச் செய்ய வேண்டியிருக்கும்.
வெறும் கோட்பாட்டை (தியரி) மட்டும் படிப்பது போதாது. உங்கள் அறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால்தான் நல்ல வேலை கிடைக்கும். ஆகையால், நீங்கள் சேர இருக்கும் துறைசார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதென்பது மிகவும் முக்கியம். எந்தத் துறைக்கும் பொருந்தும் சில திறமைகளை வளர்த்துக்கொள்வதும் முக்கியம்.
வேலை கொடுக்கும் முதலாளிகள், வரும் விண்ணப்பதாரர் வெறும் கல்லூரிப் படிப்புச் சான்றிதழை மட்டும் வைத்திருக்காமால், அது தவிர வேறு என்ன செய்திருக்கிறார் என்றே பார்க்கிறார்கள்.
பிற விஷயங்கள் என்பவை என்ன?
இலக்கியச் செயல்பாடுகளில் கலந்துகொள்வது, சமூக சேவை, என்.சி.சி., சாரணர் இயக்கம் என்பன போன்ற எந்தச் செயல்பாடாக இருந்தாலும் சரி. அது கூடுதல் தகுதியாக அமையும். விளையாட்டில் சற்றே ஆழமாக ஈடுபடும் ஒரு விண்ணப்பதாரர், வெறுமனே படித்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரரைவிட வேலை உலகத்தில் முன்னணியில் இருப்பார். பேச்சுத் திறன், கலைத் துறைகளில் விசேஷ ஈடுபாடு, இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருத்தல், புகைப்படம் எடுத்தல், புத்தகங்கள் வாசித்தல் போன்றவை பணி உலகில் கூடுதல் திறன்களாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு நிறுவனத்துக்குத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசத்திலும் டெல்லியிலும் கிளைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் தெரிந்த விண்ணப்பதாரருக்கு நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்கும் அல்லவா?
வெட்டுவது, வரைவது, குறிப்பது, ட்ரில் செய்வது, லேத் மிஷினைக் கையாள்வது போன்ற திறன்கள் இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்ப வேலைகளோடு சம்பந்தப்பட்டவை.
தட்டச்சுத் திறன், கணினித் திறன், மக்கள் தொடர்பு, அலுவலகப் பராமரிப்பு, கோப்புகளைச் சரியாக வைப்பது, மொழித் திறன், கணக்கு தொடர்பான திறன்கள் போன்றவை தொழில்நுட்பம் சாராத வேலைகளோடு தொடர்புடையவை. விண்ணப்பதாரர்கள் இந்தத் திறன்களைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட திறமைகளை எப்போது வளர்த்துக்கொள்ள வேண்டும்? நீங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதற்குச் சற்று முன்பு அல்ல. உயர்நிலைப் பள்ளியை முடித்த கையோடு இதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட வேண்டும். இது குறித்த சில யோசனைகள்:
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு ஒன்றைப் பழக்கிக்கொள்ளுங்கள். இளைஞர்கள் சிலர் தங்களுக்குப் பொழுதுபோக்கு என்று ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர், படிப்பு, படிப்பு என 24 மணி நேரமும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மதிப்பெண்கள் முக்கியம்தான். ஆனால் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் மத்தியில் தனித்து நிற்க வேண்டுமானால் சிறப்புத் திறமைகள் தேவை. வேலை கிடைப்பதற்கு மட்டுமல்ல. கிடைத்த வேலையில் சிறப்பாகச் செயல்படவும் இந்தத் திறமைகள் உதவும்.
உங்கள் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, பொழுதுபோக்கு ஒன்றைப் பழக்கிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும். உங்கள் திறன்களை வளர்க்கவும் உதவும்.
கருவிகளைக் கையாளுதல்
கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், சுத்தியல் இவை நமது அன்றாட வாழ்க்கையின் பகுதிகள். இவை எந்தச் சமயத்தில் நமக்குக் கைகொடுக்கும் என்று சொல்லவே முடியாது. ஆண்கள் மட்டுமே கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆண்கள், பெண்கள் அனைவருமே உபகரணங்கள், இயந்திரங்கள், மற்றும் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், அது நமது வாழ்க்கையை எளிதாக்கும்.
புதிய வாய்ப்புகள்
வேலை அனுபவத்தை உருவாக்கும் வாய்ப்புகளைத் தேடுங்கள். ஒரு நிறுவனத்தில் தன்னார்வலராக வேலை பார்த்தால் வேலைக்கான அடிப்படைத் திறன்களை அது உங்களுக்கு அறிமுகப்படுத்தும். தொலைபேசியைக் கையாள்வது, அலுவலக விஷயங்கள், மற்றும் அலுவலகத்தின் அன்றாடச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை திறமைகளைக் கற்பதற்கான அம்சங்கள்.
நேர்காணலின்போது, ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வாலன்டியராக வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது உங்கள் அனுபவம் குறித்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். கூடவே, நீங்கள் வேலை தொடர்பான திறனை அறிந்திருக்கிறீர்கள் என்ற செய்தியையும் வேலை தருபவர்களுக்குத் தெரிவிக்கும்.
அனுபவமே இல்லாமல் சில வேலைகள் கிடைக்காது. ஆனால் தன்னார்வலராகப் பணிபுரிந்தவர்களுக்கு அனுபவம் கிடைத்திருக்கும். அந்த அனுபவம் வேலைச் சந்தையில் நுழைய உதவும்.
இன்று இந்திய முதலாளிகள் கவர்ச்சிகரமான பட்டப் படிப்புகளைப் படித்தவர்களை மட்டும் தேடுவதில்லை. உண்மையில், பல பட்டப் படிப்புகள், வேலை உலகத்திற்குத் தேவையான திறன்களைக் கற்றுத் தருவதில்லை என்பதை முதலாளிகள் அறிந்திருக்கிறார்கள். எனவே, திறமைகளை அதிகரிக்கும் முயற்சியை இன்றே தொடங்குங்கள். புதிய கல்வி நிறுவனத்தில் சேரும்போதோ, வேலைக்கு விண்ணப்பிக்கும்போதோ அது உங்களை முன்னணியில் நிறுத்தும்.
அதிகத் திறமைகள் உங்களுக்கு இருந்தால் அது வேலை என்னும் உலகில் உள்ள தடைகளைத் தகர்த்தெறியும். மிகச் சிறந்த வேலையிலும் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்துவதால் தொடரும் விபத்துகள்: எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்குமா?

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்கள் காலாவதியான பிறகும் நுகர்வோருக்கு விநியோ கிக்கப்படுவதால் விபத்துகள் தொடர்கின்றன. எண்ணெய் நிறு வனங்கள் இதைத் தடுத்து நிறுத்தா விட்டால் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று நுகர்வோர் அமைப்புகள் எச்சரிக்கின்றன.
முன்பெல்லாம் வீடுகளில் சமையல் செய்வதற்கு மண்ணெண் ணெய் ஸ்டவ்வும், விறகு அடுப்பு களும் பயன்படுத்தப்பட்டு வந் தன. ஆனால், தற்போது எரி வாயு சிலிண்டர்கள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங் கள் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.
சிலிண்டரின் ஆயுட்காலம்
ஒரு சிலிண்டர் உற்பத்தி செய்யப் பட்டு பத்து ஆண்டுகள்தான் பயன் படுத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதை பரிசோதனை செய்து, உபயோகத்திற்கு ஏற்ற தாக இல்லை என்றால் அந்த சிலிண்டரை அழித்து விட வேண்டும். சிலிண்டரில் காஸ் நிரப்பும் ஆலைகளில் ‘ரீபில்’ செய்யும் முன் இது உறுதி செய் யப்படும். எரிவாயு சிலிண்டர் களின் மேல்பகுதியில், பேச் நம்பர், பரிசோதனை செய்த நாள் போன்ற விவரங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். எந்த நாளில் இருந்து அந்த சிலிண்டர் பயன் படுத்த தகுதியற்றது எனவும் குறிப் பிடப்பட்டிருக்கும். ஓராண்டை நான் காக பிரித்து, ஏ, பி, சி, டி என குறிக்கப்பட்டிருக்கும்.உதாரண மாக, ஒரு சிலிண்டரில் ஏ-20 என குறிப்பிட்டிருந்தால், 2020ம் ஆண்டு முதல் காலாண்டுடன் அந்த சிலிண்டர் பயன்பாட்டிற்கு தகுதி யற்றதாகி விடும்.
அதிகரிக்கும் விபத்துகள்
அண்மைக்காலமாக, எரி வாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மறைமலை நகர் அருகே வீட்டில் சிலிண் டர் வெடித்து மூன்று குழந்தை கள் உள்பட ஐந்து பேர் பலியா னார்கள். இதேபோல், வெள்ளிக் கிழமை சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு டீக்கடையில் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. காலாவ தியான சிலிண்டர்கள் பயன் படுத்தப்பட்டதாலேயே விபத்து ஏற் பட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதற்கிடையே, திருவள் ளூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தின் ஏஜென்சியில் இருந்து காலாவதியான சிலிண்டர் ஒன்று வாடிக்கையாளருக்கு விநியோ கம் செய்யப்பட்டது. அந்த சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. சிலிண்டரில் சி-12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2012ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் இந்த சிலிண்டர் உபயோகத்திற்கான தகுதியை இழந்துள்ளது. அதன் பிறகு, அந்த சிலிண்டரை சோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், சோதனை செய்யாமல், மீண்டும் ரீபில் செய்து வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த எரி வாயு சிலிண்டரை பெற்ற வாடிக்கை யாளர் ராகவேந்திர பட் கூறுகை யில், “சிலிண்டர் குறித்து எனக்கு சில அடிப்படை பாது காப்பு விஷயங்கள் தெரியும் என்ப தால், நான் உடனே அதை மாற்றி விட்டேன். ஆனால், பொது மக்களில் எத்தனை பேருக்கு இத் தகைய விஷயங்கள் தெரியும்?’’ என கேள்வி எழுப்பினார்.
நுகர்வோர் அமைப்பு
தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் மையத்தின் ஒருங்கிணைப் பாளர் சடகோபன், இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘சிலிண் டர்களின் மேல் பொருத்தப்படும் ரப்பர் வாஷர்களை முன்பு எண் ணெய் நிறுவனங்களே உற்பத்தி செய்தன. தற்போது, அவை ‘அவுட்சோர்சிங்’ முறையில் உற் பத்தி செய்யப்படுகின்றன. அவை போதிய தரத்து டன் இல்லை. எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி இதுபோன்ற காலாவதியான சிலிண்டர்களை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோர் அமைப்புடன் இணைந்து, எரி வாயு சிலிண்டர்களை எப்படி பாது காப்புடன் கையாள்வது என்பது குறித்து, பெண்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்’’ என்றார்.