Thursday, 10 April 2014

சந்தை அமைப்பு முறை - என்றால் என்ன?

பொருளியலில் சந்தை அமைப்பு முறை என்ற வகைப்பாடு உண்டு. ஒரு சந்தையில் உள்ள விற்பவர், வாங்குபவர் எண்ணிக்கையின் அடிப்படையில் சந்தையில் போட்டி எவ்வாறு இருக்கும் என்று கருதி அதன் அடிப்படையில் சந்தை அமைப்பு முறை வகைப்படுத்தப்படுகிறது.
ஒரு சந்தையில் எண்ணற்ற வாங்குபவரும் விற்பவரும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு பூரண போட்டி இருப்பது சாத்தியம். நீங்களே இதை பல முறை பார்த்திருப்பீர்கள். உங்கள் ஊரில் உள்ள காய்கறி கடைகள் பல ஒன்றாக ஓர் இடத்தில் இருக்கும். அவற்றில் எல்லா கடைகளிலும் பொருட்களும் விலைகளும் ஓரளவிற்கு ஒரே மாதிரியாக இருக்கும்.
இது எதனால்? பல விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் ஒரே பொருளை விற்கும்போது, ஒவ்வொருவரும் சந்தையில் ஒரு சிறு பகுதிதான். எனவே ஒவ்வொருவரும் தன்னிச்சையாக பொருளின் விலையை உயர்த்த முடியாது. அதேபோல் சந்தையில் பல பொருள்கள் வாங்குபவர்கள் இருக்கும்போது ஒருவர் மட்டும் குறைந்த விலையில் பொருளை வாங்க முடியாது. இவ்வாறு அதிக எண்ணிக்கையில் விற்பவர்களும் வாங்குபவர்களும் இருந்தால் அதனை பூரண போட்டி சந்தை என்பர்.
ஒரே ஒரு விற்பனையாளர் இருந்தால் அதனை முற்றுரிமை (Monopoly) என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். ஒரு சில விற்பனையாளர்கள் இருந்தால் அதனை சிலர் முற்றுரிமை (Oligopoly), என்றும், சில வாங்குபவர்கள் இருந்தால் அதனை oligopsony என்றும் கூறுவர்.
நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் சந்தைகள் யாவும் oligopoly போன்றவைதான். இதில் விற்பனையாளர்கள் எளிதில் வாங்குபவரை ஏமாற்றி பொருட்களை அதிக விலையில் விற்கமுடியும்.
சந்தை ஒழுங்குமுறை ஆணையம்
சந்தையில் சரியான போட்டி நிலவவில்லை என்றால் சந்தை ஒழுங்குமுறை ஆணையங்கள் உருவாக்கப்படுகின்றன. சந்தையில் போட்டியை நிலைநாட்டவும், வாங்குபவர்களின் நலனைக் காப்பதும் இந்த ஆணையங்களின் முக்கிய வேலை. ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ஒழுங்கு முறை ஆணையம், இதுபோல் TRAI என்பது தொலைத்தொடர்பு சந்தை ஒழுங்கு முறை ஆணையம். Competition Commission என்பது பொதுவாக ஒழுங்கு முறை ஆணையம் இல்லாத சந்தைகளில் சரியான போட்டியை உருவாக்க உள்ளது.

No comments:

Post a Comment