Saturday, 19 April 2014

வி.ஏ.ஓ. பணி: 2,342 காலியிடங்களுக்கு 10.57 லட்சம் பேர் விண்ணப்பம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வி.ஏ.ஓ. பணியில் 2,342 காலியிடங் களுக்கு 10 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
10.57 லட்சம் பேர்
தமிழக அரசுப் பணியில் 2,342 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சென்ற மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டி் போட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15-ம் தேதி யுடன் முடிவடைந்தது, அறிவிக்கப்பட்டுள்ள 2,342 காலிப்பணியிடங்களுக்கு 10 லட்சத்து 57 ஆயிரத்து 601 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, ஒரு இடத்துக்கு 512 பேர் போட்டியிடுகிறார்கள். விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா என்ற விவரத்தை மே முதல் வாரத்தில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டத்தில் முதல் தேர்வு
இதற்கு முன்பு 2012-ல் நடத்தப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வில் 1,872 காலியிடங்களுக்கு ஏறத்தாழ 9 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தற்போது கடந்த தேர்வைக் காட்டிலும் கூடுதலானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
எழுத்துத் தேர்வு ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. வி.ஏ.ஓ. தேர்வுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் நடக்கும் முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில், அடிப்படை கிராம நிர்வாகம், நுண்ணறிவுத்திறன் தொடர்பாக 45 கேள்விகள் இடம்பெறும்.

No comments:

Post a Comment