Friday, 25 April 2014

நீண்ட நாக்கு ஏன்?

மனிதர்களின் நாக்கு வாயின் பின்புறத்தில் இருந்து வெளியே நீட்டியிருக்கும். ஆனால், தவளையின் நாக்கோ வாயின் முன்புறத்தில் இருந்து வெளியே நீட்டியிருக்கும். அதனால்தான் தவளைகளால் நாக்கை வெளியே நீளமாக நீட்ட முடிகிறது.
பொதுவாகத் தவளைகள் மூன்று வயதில் முட்டையிடத் தொடங்கும்.
காட்டில் உள்ள தவளைகளுக்கு நிறைய அபாயங்கள் இருப்பதால் அதன் ஆயுள் மிகவும் குறைவு. வளர்ப்புத் தவளைகளாக இருப்பவை அதிக காலம் வாழக்கூடியவை.
ஒரே சமயத்தில் தவளைகளால் முன்னாலும், பக்கவாட்டிலும், மேல் பகுதியிலும் பார்க்க முடியும். அவை உறங்கும்போது கண்களை மூடுவதேயில்லை.
உணவை விழுங்கிச் செரிக்கத் தவளைகள் கண்களைப் பயன்படுத்துகின்றன.
தவளை கண்சிமிட்டும் போது கண்விழி கீழே சென்று வாயின் அண்ணத்தில் ஒரு புடைப்பை ஏற்படுத்துகின்றன. அந்தப் புடைப்பு, தவளை சாப்பிட்ட உணவைத் தொண்டைக்குக் கீழே தள்ளிவிடும்.
தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரி. தவளைகள் நீரில் முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் பருவத்தில் தலைப்பிரட்டைகள் என்று அவை அழைக்கப்படுகின்றன.
தவளையாக உருமாற்றம் அடையும்வரை தலைப்பிரட்டைகள் நீரில்தான் வாழும்.
தலைப்பிரட்டைகள் பார்ப்பதற்குக் குட்டி மீன்கள் போலவே இருக்கும். நீண்ட துடுப்பு போன்ற வாலைக் கொண்டவை. செவுள்களால் சுவாசிக்கும்.
தவளைகள் நிலத்தில் வாழ்ந்தாலும், அவை வாழும் இடத்திற்கு அருகே குளமோ குட்டையோ நிச்சயம் இருக்கும். ஏனெனில் தவளையின் தோல் உலர்ந்துபோனால் அவை இறந்துவிடும்.
தவளைகள் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்குப் பதிலாகத் தன் தோல் வாயிலாகத் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.
தவளைகள் மூக்கின் வாயிலாகச் சுவாசிப்பவை. பாதி அளவு காற்றைத் தோல் வழியாக ஈர்த்து சுவாசிக்கும்.
தவளைகளின் நாக்கு பசைத் தன்மை கொண்டது. வலுவான தசைகளைக் கொண்டதும். இரையைப் பிடிப்பதற்கும் விழுங்குவதற்கும் அது உதவுகிறது.

No comments:

Post a Comment