Monday, 21 April 2014

கப்பல் வேலை கை நிறைய சம்பளம்

இந்தியாவில் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. ஆகவே இத்துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதற்காகப் புதுமையான படிப்புகளை மத்திய கடல்சார் மீன்வளத் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training) வழங்குகிறது. இதைச் சுருக்கமாக சிப்நெட் என்கிறார்கள். இது இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (I.C.A.R.) கீழ் இயங்குகிறது.
சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிப்நெட் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெசல் நேவிகேட்டர் (Vessel Navigator), மரைன் பிட்டர் டிரேடு (Marine Fitter Trade) ஆகிய தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிப்பிலும் தலா 48 இடங்கள் உள்ளன. 2 ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது 16-20-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஓராண்டு மீன்பிடி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப் படுவோருக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த இரு படிப்புகளையும் விடுதியில் தங்கியிருந்தே கற்க முடியும். மிகக் குறைந்த கட்டணத்தில் விடுதி வசதியும் உள்ளது. 2 ஆண்டுகள் படித்து முடித்ததும் 6 மாதங்களுக்கு மீன்பிடி படகுகளில் சிறப்புப் பயிற்சி பெற சிப்நெட் நிறுவனமே ஏற்பாடு செய்கிறது. அப்போது மாதம் ரூ. 8,000 உதவித்தொகை வழங்கப்படும்.
“தற்போது கடலில் 100 மீட்டர் வரையிலான தூரத்தில் மீன்வளம் அடியோடு குறைந்துவிட்டது. ஆழ்கடல் பகுதியில் மீன்வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களில் வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. எனவே, வெசல் நேவிகேட்டர், மரைன் பிட்டர் டிரேடு பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் எளிதில் வேலை பெற முடியும். வெசல் நேவிகேட்டர் பயிற்சியை முடிப்பவர்கள் மீன்பிடி கப்பல்களில் முதலில் மேட் என்ற பணியில் சேரலாம். அதன்பிறகு தேர்வெழுதி ஸ்கிப்பர் (Skipper) என்று அழைக்கப்படும் கேப்டனுக்கு இணையான பதவிக்கு உயர்வடையலாம் என்கிறார் சென்னை சிப்நெட் நிறுவனத்தின் துணை இயக்குநர் எம்.ஹபிபுல்லா.
இதேபோல், மரைன் பிட்டர் டிரேட் பயிற்சி முடிப்பவர்கள் சீப் இன்ஜினியர் ஆகலாம். தொடக்கத்தில் 20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஸ்கிப்பர், சீப் இன்ஜினியர் ஆகிவிட்டால் ரூ.50 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும். வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கவும் தயாராக உள்ளன. கப்பல்களில் பிடிக்கப்படும் மீன்களின் மதிப்பில் 2 சதவீதம் ஊக்கத்தொகையும் தனியாகக் கிடைக்கும்” என்கிறார் அவர். மேலும் இங்கு படித்து முடித்த மாணவர்களில் 90 சதவீதம் பேர் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார் ஹபிபுல்லா.
சென்னை சிப்நெட் முகவரி:
மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்),
59, எஸ்.என். செட்டி தெரு,
ராயபுரம், சென்னை 600 013.
தொலைபேசி எண்கள்:
044-25952691, 92.
விண்ணப்பிப்பது எப்படி?
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சிப்நெட். தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. (எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ. 150) விண்ணப்பக் கட்டணத்தை “Sr. Administrative Officer, CIFNET, Kochi” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். தபாலில் பெற வேண்டுமானால் ரூ.15 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட தபால் உறையை சென்னையில் உள்ள சிப்நெட் நிறுவனத்துக்கு அனுப்பி பெறலாம். மேலும், சிப்நெட் இணையதளத்தில் (www.cifnet.gov.in) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துக்கான டி.டி.யை அனுப்பியும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மே 16-ம் தேதி ஆகும். நுழைவுத்தேர்வு ஜூன் 21-ம் தேதி அன்று சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெறும்.

No comments:

Post a Comment