Tuesday, 22 April 2014

தமிழகத்தில் 36 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல்: பிரவீண்குமார் தகவல்

தமிழகம் முழுவதும் இன்று மாலை தொடங்கி 36 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 24-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கருத்து கணிப்புகளுக்கு தடை:
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது. இருப்பினும், தேர்தல் குறித்த விளம்பரங்களை பத்திரிகைகளில் மட்டும் வெளியிடலாம் என பிரவீண்குமார் கூறினார்.
12 ஆவணங்கள் எவை?
வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், தபால் அலுவலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, ஆதார் அட்டை, பென்ஷன் ஆவணம், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, 100 நாள் திட்ட அடையாள அட்டை போன்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment