Tuesday, 22 April 2014

பொது அறிவு: கடற்கரையில் ஒரு கடும் உழைப்பாளி

வாழ்க்கை முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? முடியும், சில தாவரங்கள் இப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதுவும் ஒன்று.
தமிழில் அலையாத்தி அல்லது கண்டல் காடுகள் என்றழைக்கப்படும் Mangrove forest உப்புத்தன்மை மிகுந்த கடல்நீரிலும் வளரும் அதிசயத் தன்மை கொண்ட தாவரங்களால் நிறைந்திருக்கிறது. நிலமும் கடலும் சேரும் பகுதியில், களிமண் நிறைந்த சகதி மண்ணில் இந்த அலையாத்திக் காடுகள் வளர்கின்றன.
உப்பு குடிக்கின்றன
இந்தத் தாவரங்கள் உப்பை எப்படிச் சகித்துக்கொண்டு வாழ்கின்றன? இந்த மரங்களின் வேர்கள், நீரிலுள்ள உப்பை வடிகட்டும் தன்மை கொண்டவை என்பதுதான் சூட்சுமம். அதையும் தாண்டி தாவரத்தில் புகும் உப்பை, இலையிலுள்ள உப்புச்சுரப்பிகள் வெளியேற்றி விடுகின்றன. மட்டுமில்லாமல் சிறிதளவு உப்பைக் கிரகித்துக்கொண்டு, இலைகள் தடிமனாகின்றன.
அடிமரமும், மரத்தின் பக்கவாட்டில் இருந்து முளைத்த முட்டு வேர்களும் (Stilt roots) மரம் கீழே விழாமல் உறுதியாகப் பிடித்துக்கொள்கின்றன. அத்துடன் மரத்தின் அடியில் உருவாகி மண்ணுக்குள் நுழைந்து, வெளியே தண்ணீருக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் சிறப்பு வேர்களில் உள்ள நுணுக்கமான துளைகள் ஆக்சிஜனைச் சுவாசிக்கவும் செய்கின்றன.
கன்னா (Rhizophora), அலையாத்தி (Avicennia), புருகெய்ரா, நிபா பாம், அலையாத்தி பெரணி (Acrostichium) போன்றவை சில முக்கியமான அலையாத்தி தாவரங்கள். இவற்றைத் தவிரத் தமிழக அலையாத்தி காடுகளில் நரிக்கன்னா (Ceriops), தில்லை (Exocoecaria) போன்ற தாவரங்களும் அதிகமுள்ளன.
கடல் அலையின் ஏற்றவற்றத்துக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள இந்தக் காடுகளைச் சார்ந்து எண்ணற்ற தாவரங்களும் உயிரினங்களும் வாழ்கின்றன. பூமியின் வளமான மீன்களுக்கான வாழிடங்களில் ஒன்றாக அலையாத்தி காடுகள் கருதப்படுகின்றன. குறிப்பாக, இறால்கள் இங்குச் செழித்துப் பெருகு கின்றன.
தமிழகத்தில் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம், முத்துப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அலையாத்திக் காடுகளைக் காணலாம். உலகிலேயே மிகப் பெரிய அலையாத்திக் காடுகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காட்டுப் பகுதியில் உள்ளன

No comments:

Post a Comment