Monday, 28 April 2014

நீதித்துறை எல்லை தாண்டுவது தவிர்க்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்

அரசியல் சாசன அமைப்புகளான நாடாளு மன்றம், ஆட்சி நிர்வாகம், நீதித் துறை மூன்றும் தங்கள் எல்லைகளையும், அதி காரத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 ஜூலை 19 முதல் ஒன்பதரை மாதங்கள் பதவி வகித்த பி.சதாசிவம் ஏப்ரல் 26-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் இருந்தபோது அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதஞ்சலி சாஸ்திரி 1951 நவம்பர் முதல் 1954 ஜனவரி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். தமிழகம் மாநிலமாக உருவான பின் அதுன் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பெருமை பி.சதாசிவத்துக்கு மட்டுமே உண்டு.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் உள்ள கடப்பநல்லுார் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த சதாசிவம் அவரது குடும் பத்திலும் அந்த கிராமத்திலும் முதல் பட்டதாரி. ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றை உறுதியுடன் பின்பற்றும் சதாசிவம் தன் பதவிக்காலம் குறித்து “தி ஹிந்து - தமிழ்” நிருபர் ஜா.வெங்கடேசன் உடன் உரையாடினார். அதன் சாராம்சம்:

மிக சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த நீங்கள் மிக உயர்ந்த பதவியை வகித்துள்ளீர்கள். உங்களது பணி முழு மனநிறைவைத் தருகிறதா?

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 18 ஆண்டுகள் 6 மாதங்கள் நீதிபதியாகப் பணி யாற்றி உள்ளேன். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஒருநாள்கூட விடுமுறை எடுத்தது இல்லை. உச்ச நீதிமன்றத்தில் ஒருநாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளேன். கடந்த 9 மாதங்களாக தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் என் பணி முழு திருப்தி அளித்தது. இந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள், ஆறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், 89 நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி உயர் நீதிமன்றத்தில் காலியிடங்கள் 28 சதவீதமாகக் குறைந்துள்ளது. நான் பொறுப்பேற்றபோது இந்த அளவு 30 சதவீதமாக இருந்தது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நவம்பரில் லோக் அதாலத் நடத்தப்பட்டு, 71.78 லட்சம் வழக்குகளை முடித்துவைத்தோம்.

நீதிபதிகளின் பணி குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒழுக்கம், நேரம் தவறாமை குறித்து பிரச்சினை இல்லை. நீதிமன்றத்தின் அனைத்து நிலையிலும் பெருமளவில் அதை பின்பற்றுகின்றனர். நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்பது என் கருத்து. பொதுவாக தீர்ப்புகள் அனைத்தையும் நீதிபதிகள் முடிந்தவரை உரிய காலத்தில் அளித்து விடுகின்றனர்.

வழக்குகள் தேக்கத்தை குறைக்கவும், காலியிடங்களை நிரப்பவும் நீங்கள் எடுத்த முயற்சி பலன் அளித்ததா?

நான் பதவியேற்றபோது 67,964 ஆக இருந்த நிலுவை வழக்குகள் 63,625 ஆக குறைந்துள்ளது. பத்து அரசியல் சாசன அமர்வு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்கும். ஆனால் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் முழு எண்ணிக்கையான 31 நீதிபதிகளும் பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் மத்தியப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள் இல்லை என்றும் வருத்தம் தெரிவிக்கப்படுகிறதே?

நான் பொறுப்பேற்றதும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களை உள்ளடக்கி காலியிடங்களை நிரப்பும்படி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் கடிதம் எழுதினேன். அதேசமயம், நீதிபதிகள் நியமனத்தில் தரம் குறையாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் கூறிய இரண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்தேன். ஆனால் என் பதவிக்காலத்தில் அது முடியவில்லை.

நீதிபதிகள் நியமனக் குழு தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தேசிய நீதிக்குழு அமைக்கப்பட்டால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?

தற்போதைய நீதிபதிகள் நியமனக் குழு முறையே சிறந்தது என்பது என் கருத்து. தற்போதைய நடைமுறையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. குழுவில் இருக்கும் நீதிபதிகள் புதிய நீதிபதிகளின் செயல்பாடுகள், அவர்களது சட்ட புலமை ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். இதில் குழுவுக்கு வெளியில் உள்ள மூத்த நீதிபதிகளிடம் ஆலோசிப்பது நல்லது என்று கருதுகிறேன்.

மேல்முறையீட்டுக்கான தேசிய நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை நான்கு பிராந்தியத்திலும் அமைத்தால் வழக்குகளில் தேக்கம் குறையும் என்று கருதுகிறீர்களா?

உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியாக நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளதால் தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் தேவையில்லை. வழக்குகளை இ-மெயில் மூலம் கூட பதிவு செய்யலாம். தீர்ப்புகளை இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீதிபதிகளிடம் ஊழல் எதுவும் இருந்ததா, அப்படி இருந்தால் எப்படி சமாளித்தீர்கள்,? தவறு செய்த நீதிபதிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுத்தீர்களா?

கீழ் நீதிமன்றங்களைப் பொறுத்தமட்டில் புகார்களை விசாரிக்கும் பொறுப்பு உயர் நீதி மன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற நீதிபதிகள் மீது புகார் வந்தால், அதை விசாரிக்க உள் விசாரணைக்குழு உள்ளது. அவர்கள் நீதிபதிக்கும் பதிலளிக்க வாய்ப்பளித்து விசாரிப்பார்கள். உண்மையாக இருந்தால் தலைமை நீதிபதிக்கு அனுப்பி விசாரணைக்கு உத்தரவிடப்படும். சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அனுப்பப்பட்ட புகார்களை உரிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்த புகார்கள் ஆதாரமின்றி மேலோட்டமாக இருந்ததால் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.

நீதிமன்றங்கள் எல்லை மீறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து?

அது அந்தந்த வழக்கைப் பொறுத்தது. அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன் றம், ஆட்சி நிர்வாகம், நீதித்துறை மூன்றும் தங்கள் எல்லைகளையும், அதிகாரத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும். சில நேரங்க ளில் நீதித்துறை எல்லை தாண்டுவதை ஒப்புக் கொள்கிறேன். அது தவிர்க்கப்பட வேண்டும்.

கங்குலி மீதான குற்றச்சாட்டை அணுகிய விதம் குறித்து சில நீதிபதிகளே வருத்தம் தெரிவிக்கின்றனரே?

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் இங்கு உண்மை அறியும் குழுவிடம் சாட்சியம் அளிக்க வந்தபோது கண்ணியமாக நடத்தப்பட்டார்.

நீதிபதிகள் விசாரணை மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தலைமை நீதிபதியை சேர்ப்பதில் உங்களுக்கு ஆட்சேபம் உண்டா?

சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகார உரிமை. அது நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது. அதில் எந்த தலையீடும் கூடாது.

மாநில மொழிகளை நீதிமன்ற வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?

கீழ் நீதிமன்றங்களைப் பொறுத்த அளவில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக கொண்டு வருவதில் எந்த சிரமமும் இல்லை. அதற்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றங்களில் அமல்படுத்த அரசு, நீதித்துறை, வழக்கறிஞர்கள் அமர்ந்து பேசி வழிகாண வேண்டும்.

No comments:

Post a Comment