பெரிய குழப்பம் இது... வட இந்தியாவை எங்கிருந்து தொடங்குவது? மேலே ஜம்மு காஷ்மீரிலிருந்து இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, சண்டீகர், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் வரை நீண்டு கிடக்கும் மாபெரும் பரப்பின் பயணத்தை எங்கிருந்து தொடங்குவது? உண்மையிலேயே மிக நீண்ட அலைச்சல் இது.
ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால், நிலப்பரப்பில் அது காங்கோவுக்குச் சமம். உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், மக்கள்தொகையில் அது பிரேசிலுக்குச் சமம். டெல்லி, ஜெய்பூர், லக்னோ, கான்பூர், இந்தூர், போபால், காசியாபாத், லூதியானா, அமிர்தசரஸ் என்று நீளும் வாய்ப்புகளில் வாரணாசியைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு நகரத்தை எவ்வளவு நாசம் ஆக்கலாம், எப்படியெல்லாம் நாசம் ஆக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் வாரணாசியின் ரயில் நிலையத்திலிருந்தே தெரிகின்றன. புகையும் புழுதியும் கலந்த காற்றைக் கிழித்துக்கொண்டு, நெரிசல் மிகுந்த குறுக லான சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இடையே மெல்லப் புகுந்தது ஆட்டோ. “எங்கள் ஊர் உள்ளபடி இரண்டு ஊர்கள்.
நீங்கள் இந்த நவீன ஊரை மறந்துவிட வேண்டும். கங்கைக் கரையை ஒட்டியுள்ள பழைய காசியை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். காசிக்கு ஐந்து சிறப்புகள் உண்டு. இங்கு மாடுகள் முட்டாது, கருடன்கள் பறக்காது, பல்லிகள் கவுளி சொல்லாது, பூக்கள் மணக்காது, பிணங்கள் நாறாது” என்று தொடங்கினார் ஆட்டோக்காரர். “இங்கு போக்குவரத்து விதிகள் எதுவும் எடுபடாது என்ற இன்னொரு சிறப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “அந்தச் சிறப்பு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்துக்கும் சொந்தமானது. வாரணாசிக்காரர்கள் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?”
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் அடைந்து காசி கங்கைக் கரையை அடைந்தேன்.
சாவதற்கு ஓர் ஊர்
மரணத்துக்குப் பேர்போன ஊர் காசி. காசியில் சாக வேண்டும் அல்லது செத்த பின் இங்கு எரியூட்டப்பட வேண்டும் - அப்படி நடந்தால் வாழும் காலத்தில் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் களைந்து சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. காசி கங்கைக் கரையை ஒட்டியுள்ள நூற்றுக் கணக்கானோரின் பிழைப்பை இந்த நம்பிக்கை வாழவைக்கிறது.
“ஒரு பிணத்தை இங்கு எரிக்க குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் ஆகும்; வசதி படைத்தவர்கள் என்றால், இருபது முப்பதாயிரமும் செலவழிப்பார்கள். இங்கு சீசன், உச்சபட்சக் கோடையும் உச்சபட்சக் குளிரும்தான். சீசனில் நூறிலிருந்து இருநூறு பிணங்கள் வரை வரும்” என்கிறார்கள்.
அரிச்சந்திரா படித்துறை நோக்கிச் சென்றேன். காசியில் இப்படி ஏராளமான படித்துறைகள் உண்டு. அவற்றில் மன்னர் அரிச்சந்திரன் பிணங்களை எரித்த கரையாம் இது. ஏற்கெனவே பிணங்கள் எரிந்துகொண்டிருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் பிணங்கள் வாகனங்களில் வரிசை கட்டி நின்றன. படித்துறையில் அமர்ந்து, எரியும் பிணங்களை ஏராளமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். தவிர, அரசாங்கம் வேறு, உட்கார்ந்து பார்க்கும் மேடையைக் கட்டிவிட்டிருக்கிறது.
அதிலும் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிணங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் சிறுவர்கள். தீயின் உக்கிரத்துக்கு அருகே, கொட்டும் வியர்வையில் எதையும் பொருட்படுத்தாமல், ஏற்கெனவே எரிந்த பிணங்களின் சாம்பலை மண்வெட்டியால் வெட்டிச் சுமந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். “படிக்கவில்லையா?” என்று கேட்டால், “ஏதோ இதனால்தான் சாப்பாடு கிடைக்கிறது சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையைப் பார்க்கிறார்கள். எதிரே ஒரு கடல்போல பிரம்மாண்டமான கங்கை. இந்தியாவின் சகல பாவங்களையும் சுமந்து நகர்ந்துகொண்டிருக்கிறது.
அம்மா, ஐயா, இளவரசர், சாமியார்கள் கதை
வட இந்தியாவின் உயிர்நாடி கங்கைதான். “ஆனால், கங்கை கொஞ்சம்கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே யமுனையைக் கொன்றுவிட்டோம்; இப்போது கங்கையையும் கொன்றுகொண்டிருக்கிறோம்” என்கிறார் சூழலியலாளர் வந்தனா சிவா. சுற்றுச்சூழல் விஷயத்தில், அரசியல்வாதிகள் காட்டும் அலட்சியத்தைக் கடுமையாக அவர் சாடுகிறார். “ஆனால், வட இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில் எல்லாமே அவர்களுக்கு அலட்சியம்தான்” என்கிறார் விவசாயி ராஜு பையா.
சிரிக்காமல் கேலி பேசும் இந்த மனிதரை அமேத்தியில் சந்தித்தேன். “எங்களூரில் ஆட்சியாளர்களிடையே ஒரே வேறுபாடுதான். அம்மா (மாயாவதி) தான் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது சாலைகளைக் கழுவிவிடச் சொல்வார். ஐயா (முலாயம் சிங் யாதவ்) தன் மகன், மருமகள் எங்கு சென்றாலும் அவர்கள் நடப்பதற்கு ரோஜா மலர்களைச் சாலையில் இறைக்கச் சொல்கிறார். அவ்வளவுதான்.
சாமியார்கள் (பா.ஜ.க.) கதையைச் சொல்ல வேண்டியதில்லை. அக்கப்போர் அரசியல் அவர்களுடையது. இளவரசர் (ராகுல்) இங்கு எப்போதாவது வருவார். ஒரு ரயில் விட்டால் எங்களுக்கு எல்லாம் நடந்துவிடும் என்பது இளவரசர் குடும்பத்தின் நினைப்பு” என்கிறார்.
அமேதியைப் பார்த்தபோது உண்மை உரைத்தது. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று இந்திரா குடும்பம் மாற்றி மாற்றிக் கையில் வைத்திருக்கும் தொகுதி இது. ரயில் நிலையத்தையும் ஊரை இணைக்கும் சில சாலைகளையும் தவிர, ஒரு சராசரியான உத்தரப் பிரதேச நகரத்துக்கும் அமேதிக்கும் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியவில்லை. ரேபரேலியின் நிலையும் இதுதான். “நாட்டுக்கு எட்டுப் பிரதமர்களைத் தந்த மாநிலம் இது. இன்றைக்கும் உத்தரப் பிரதேசம்தான் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப்போகிறது. ஆனால், எங்கள் தலைவிதி மாறப்போவதில்லை” என்கிறார்கள்.
கிராமங்களின் உறைநிலை
இமயமலை எல்லையில் தொடங்கினால், விந்திய- சாத்புரா மலைத்தொடர்கள் வரை மேற்கே தார் பாலைவனம் நீங்கலாக, வட இந்தியாவின் பெரும் பகுதிகள் வளமானவைதான். சிந்து – கங்கைச் சமவெளியில்தான் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளன. உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இமயமலையை ஒட்டியிருக்கின்றன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை காடுகள் மிகுந்தவை. ஆக, வளங்களுக்குக் குறைவு இல்லை.
பிரச்சினை எங்கே ஆரம்பிக்கிறது என்றால், வட இந்தியாவின் ஆகப் பெரும்பான்மைப் பகுதிகள் கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன; ஆனால், கிராமங்களை இன்னும் அரை நூற்றாண்டு பின் தள்ளியே வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள் (நகரங்களும் நாசமாக இருப்பது தனிக் கதை).
உத்தரப் பிரதேசத்தில் அசாரா கிராமத்தில் பெண்கள் ஆண்களைக் கண்டால் இன்னமும் முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள். பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று பஞ்சாயத்துக்காரர்களால் தடை விதிக்கப்பட்ட கிராமம் இது. மத்தியப் பிரதேசத்தில் பகாரியா சோர் கிராமத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுச் சிலர் இறக்க அதோடு அந்தக் கிராமத்தையே எய்ட்ஸ் கிராமம் என்று புறக்கணித்துவைத்திருக்கின்றன சுற்றுப்புற ஊர்கள்.
ஹரியாணாவின் பல கிராமங்களில் பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் சுரிதார் நீங்கலாக எந்த உடையும் போடக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றன பஞ்சாயத்து அமைப்புகள். எல்லா இடங்களிலுமே சாதிய அமைப்பு மிக வலுவான சங்கிலிகளால் தலித் மக்களைப் பிணைத்து அவர்கள் மீதேறி நிற்கிறது.
வட இந்தியாவின் பெரும்பாலான கிராமங்கள் – குறிப்பாக சத்தீஸ்கரில் - மிகுந்த இடைவெளிக்கு இடையே இருக்கின்றன. அகன்ற நிலப்பரப்பில் முப்பது நாற்பது கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு கொத்தாகப் பத்து இருபது வீடுகள். அவ்வளவுதான். அது ஒரு கிராமம்! சாலை, மருத்துவமனை வசதி ஏதும் இல்லை. மக்கள் தாங்களாக மண் பாதையில் செங்கற்களைப் பதித்து சைக்கிள் ஓட்டும் வழி அமைத்திருக்கிறார்கள்.
“அரசாங்கம் எந்தப் பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ளாததாலேயே ஊர்ப் பஞ்சாயத்துக்கு எல்லா அதிகாரங்களும் சென்றுவிடுகின்றன. ஆகையால், அவர்கள் வைத்ததே சட்டம். ஓட்டுக் கேட்க இவர்களிடம்தான் வர வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் இவர்களைப் பகைத்துக்கொள்வதில்லை. வட இந்தியக் கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் குறுநில மன்னர்கள்” என்று சொன்னார் டெல்லியில் படிக்கும் ஹரியாணா மாணவி ஆதீத்ரி.
தண்ணீர் தண்ணீர்
இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்சினைக்கு முதல் களபலியாகும் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அஜ்மீரில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம், அதற்கு மக்கள் இரவு இரண்டு மணிக்கு சாலையில் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சூழல். மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அஜ்மீரைச் சேர்ந்த ரதோட்டிக்கு இது சகஜம். “எங்கள் நிலை எவ்வளவோ மேல். பார்மர், பாலி, நகௌர் பகுதிகளில் எல்லாம் வாரத்துக்கு ஒரு முறைதான் விநியோகம்.
இன்னும் கிராமப்புறங்களை நோக்கிச் சென்றால், இரண்டு குடம் தண்ணீருக்குப் பல மைல்கள் நடப்பவர்களை சகஜமாகப் பார்க்க முடியும். குடிக்கவே இந்தக் கதி என்றால், விவசாயத்தின் கதியை ஊகித்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.
கொல்லும் போதை
பஞ்சாப், ஹரியாணாவில் இந்தப் பிரச்சினை இல்லை. இப்போதும் பஞ்சாப் வாரிக்கொடுக்கிறது. நாட்டின் கோதுமை உற்பத்தியில் 19.5%, அரிசி உற்பத்தியில் 11%, பருத்தி உற்பத்தியில் 10.26% பஞ்சாப் மட்டுமே தருகிறது. கார் இல்லாத கிராமங்கள் இல்லை. நன்றாக உழைக்கிறார்கள்; நன்றாகச் சாப்பிடுகிறார்கள்; நன்றாகக் கொண்டாடுகிறார்கள் பஞ்சாபிகள்.
இங்கே பிரச்சினை என்னவென்றால், அதீதமான பணப் புழக்கத்தின் விளைவாக ஏற்படும் தீமைகள். ஏற்கெனவே, மது நுகர்வில் நாட்டிலேயே முதல் இடத்தில் பஞ்சாப்தான் இருக்கிறது. இந்நிலையில், போதைப் பழக்கம் பஞ்சாபின் மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஹெராயின், பிரவுன் சுகர் தொடங்கி கஞ்சா, அபினி வரை சகல வஸ்துகளும் சரளமாகப் புழங்குகின்றன. “பஞ்சாபின் கிராமப்புறங்களில் 67% வீடுகளில் வீட்டுக்கு ஒருவராவது போதை நோயாளி. இவர்களில் 70% இளைஞர்கள்” என்கிறார் பேராசிரியை நவ்னீத்.
டெல்லி உங்களை வரவேற்பதில்லை
வட இந்தியாவைப் பொறுத்த அளவில், ஊரில் வேலை இல்லாவிட்டால், உடனே ரயில் ஏறும் ஊர் டெல்லி. ஒவ்வொரு நாளும் பல நூறு இளைஞர்கள் டெல்லிக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள். தானும் பிதுங்கி, வருபவர்களையும் பிதுக்கி நைந்துபோக வைக்கிறது டெல்லி. நகரங்களின் நகரமான டெல்லியில், அரசு புது டெல்லி பகுதியை மட்டும் ஒய்யாரமாக வைத்துக்கொண்டால் போதும் என்று நினைப்பதுபோல் இருக்கிறது. குதுப் மினார் சென்றபோது வெளியே ஆட்டோவுடன் சவாரிக்காக வெகுநேரம் காத்துக்கொண்டிருந்த அன்சாரியிடம் பேசினேன்.
“இங்கே சந்தோஷம் இல்லை சார். ஊருக்குப் போய்விடலாம் என்றால், பிச்சைதான் எடுக்க வேண்டும். என்றைக்காவது சூழல் மாறும் என்று நினைத்துதான் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். என்ன வாழ்க்கை இது” என்று தலையைக் குனிந்துகொண்டார். டெல்லியிலிருந்து இந்தியாவைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் அன்சாரியின் வாக்கியங்கள்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தன!
தொடர்புக்கு: samas@kslmedia.in
No comments:
Post a Comment