வாழ்க்கை என்பது பிறரோடு பழகுதல், இணைந்து வாழுதல். பழகுதல் என்றால் என்ன? நம் கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளுதல், திறந்த மனங்களோடு அவர்கள் கருத்துகளைக் கேட்டல்.
சொல்வதற்கு எளிதான இந்தச் சமாச்சாரம் கடைப்பிடிக்கக் கஷ்டமானது. ஏன் தெரியுமா? நாம் என்னதான் அறிவார்த்தமாகப் பேசினாலும், அதை மற்றவர்கள் அனைவரும் முழுமனதாக ஏற்றுக்கொள்வதில்லை. நாமும் அப்படித்தான். அவர்கள் கருத்துகளை மனமார ஏற்பதில்லை. காரணங்கள்? முதலில் நம் ஈகோ. அத்தோடு நம் ஒவ்வொருவரின் மனோ பாவம், கண்ணோட்டம், ஆளுமை, வளர்ந்த பின்புலம் ஆகியவை வித்தியாசமானவை.
என் நண்பர்கள் சிலரைச் சந்திக்கிறீர்களா?
கோபால். கல்லூரிப் பேராசிரியர். எதையும் அறிவு பூர்வமாக அணுகுவார். ஆனால், ஜோதிடம், கை ரேகை ஆகியவற்றில் அழுத்தமான நம்பிக்கை. நாங்கள் இருவரும் சமீபத்தில் கன்னியாகுமரி போயிருந்தோம். குறி சொல்லும் பெண்ணிடம் கை நீட்டினார், கிளி ஜோசியரிடம் சீட்டு எடுத்துப் பார்த்தார். பயபக்தியோடு அவர்கள் சொல்வதைக் கேட்டார்.
எல்லா விஷயங்களையும் உணர்வு வசப்படாமல் விவாதிக்கும் கோபால், ஜோசியத்தை விமர்சித்தால், எமோஷனல் ஆகி விடுவார், அவர்களை எதிரிகள் பட்டியலில் சேர்த்துவிடுவார். கோபாலை முதன் முதலாகச் சந்திப்பவர்கள் அவரிடம் ஜோசியம் பற்றி விவாதிக்க நேர்ந்துவிட்டால், அவரை மூடநம்பிக்கைக்காரர் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அவருடைய பாஸிட்டிவ் அம்சங்களை அவர்கள் அறியவே முடியாது.
****
சரோஜா. அரசாங்க அலுவலகத்தில் வேலை. சுஜாதா கதைகள், நாதஸ்வரம் தொலைக்காட்சித் தொடர், மன்மோகன் ஆட்சி, ஷேர் மார்க்கெட் நிலவரம், உலகப் பொருளாதாரம், கூகுள் கம்பெனி தயாரிக்கும் ஓட்டுநர் இல்லாத கார் (Driverless Car) – அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவர். ஆனால், பெண்ணுரிமை பற்றி அவருடன் பேசினீர்களோ, சமநிலை மறப்பார், கோபத்தில் குதிப்பார்.
****
குமார். எப்போது வெயில் கொளுத்தும், எப்போது மழை கொட்டும் என்று தெரியாத ஊட்டி க்ளைமேட் மாதிரியான புரியாத புதிர் கேரக்டர். திடீரென்று அன்பைப் பொழிவார்: காரணமே இல்லாமல் கத்துவார்.
****
கோபால், சரோஜா ஆகியோர் சில சமாச்சாரங்களைப் பேசும்போதும், குமார் போன்றவர்கள் சில நேரங்களிலும் விசித்திரமாக நடந்துகொள்வது ஏன்? கோபால், சரோஜா, குமார் போன்ற ஏராளமானவர்களோடு பிஸினஸில், வேலையில், தினசரி வாழ்க்கையில் நாம் தொடர்புகொள்கிறோம், சிலரோடு தோள் கொடுத்துப் பணியாற்றுகிறோம். அந்த உறவுகளில் நாம் ஜெயிக்கவேண்டுமானால், கோபால். சரோஜா, குமார் போன்றவர்களின் செயல்முறைக்கான காரணங்களை நாம் புரிந்துகொண்டேயாகவேண்டும்.
****
கமல் நடித்த ஆளவந்தான் படம் நினைவிருக்கிறதா? “கடவுள் பாதி, மிருகம் பாதி இரண்டும் சேர்ந்த கலவை நான்” என்று கமல் வலம் வருவார். ஒரே மனிதனுக்குள் இரண்டு வேறுபட்ட மனிதர்கள் இருக்கமுடியும் என்பது கதை.
நம் எல்லோருக்குள்ளும் இரண்டல்ல, ஏழு பேர் இருக்கிறார்கள் என்கிறார் டேவ் வெபர் (Dave Weber). இவர் சினிமா கதாசிரியர் இல்லை, பாங்க் ஆஃப் அமெரிக்கா, ஐ.பி.எம், நைக்கி (Nike), ஃபெடெக்ஸ் (Fedex) போன்ற முன்னணிக் கம்பெனிகளுக்கு மேனேஜ்மென்ட் ஆலோசகர். நம் எல்லோருக்குள்ளும் இருப்பதாக டேவ் வெபர் சொல்லும் ஏழு பேர் இவர்கள்தாம்:
என் பார்வையில் நான்
(The Me I think I am)
நிஜமாக நான் (The Me I really am)
கடந்த காலத்தில் நான்
(The Me I used to be)
பிறர் பார்வையில் நான்
(The Me others see)
பிறருக்கு என்னைக் காட்டிக்கொள்ள விரும்பும் நான்
(The Me I try to project)
பிறர் எவ்வாறு என்னை மாற்ற முயற்சிக்கிறார்களோ, அந்த நான் (The Me others try to make me)
எப்படி மாற விரும்புகிறேனோ, அந்த நான் (The Me I want to be)
இந்த ஏழு பேருக்குள்ளும் எக்கச்சக்க வித்தியாசங்கள் இருக்கின்றன என்று டேவ் வெபர் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்தார். நமக்குள் இத்தனை வித்தியாசங்கள் எப்படி இருக்கமுடியும் என்று உங்களுக்குள் சந்தேகங்கள் வரலாம். எப்படிக் கண்டுபிடிப்பது? உங்களையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். மேலே சொன்ன ஏழு ”நான்”களும் எப்படிப்பட்டவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
இந்த “நான்”களுக்குள் ஒற்றுமை இருக்கலாம்: அல்லது ஏழு பேரும் வித்தியாசமான குணங்கள் கொண்டவர்களாக இருக்கலாம் – ஒரு “நான்” பிறரோடு இணங்கிப் போகிறவர். இன்னொருவர் முரட்டுப் பிடிவாதக்காரர், ஒருவர் சாந்த சொரூபி, இன்னொருவர் முன்கோபி, ஒருவர் பேசிக்கொண்டேயிருப்பவர், மற்றவர் மெளனி.......நீங்கள் பிறரிடம் பேசும்போது,இந்த ஏழு “நான்”களில் ஏதாவது ஒரு “நான்” தன்னை வெளிப்படுத்துவான்.
இந்த வெளிப்படுத்துதல் நீங்கள் திட்டமிட்டு வருவதல்ல, உங்கள் ஆழ்மனத்தின் செயலால் வரும் அனிச்சைச் செயல். சில சமயங்களில் நம்மை அறியாமலேயே சில வார்த்தைகளைப் பேசி விடுகிறோம், உடல் மொழியால் சில உணர்வுகளை வெளிப்படுத்திவிடுகிறோம். இவை அனிச்சைச் செயலாக, நாம் அறியாமலேயே வெளி வருவதால், ஏழு “நான்”களில் எந்த ஆசாமி வெளியே வந்தான், ஏன் வந்தான் என்பது நமக்குத் தெரிவதில்லை.
நீங்கள் உங்கள் நண்பர் கண்ணனோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அவருக்குள்ளும் ஏழு “கண்ணன்கள்”ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஏதாவது ஒரு கண்ணன் வெளிப்படலாம். இருவரிடமும், விட்டுக் கொடுக்கும் “நான்” வெளிப்பட்டால், பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பிடிவாத ‘நான்” வெளிவந்தால், தோல்வியோடு முறியும்,
நீங்களும் கண்ணனும் பேசும்போது, உங்கள் பேச்சு 7 x 7 = 49 திசைகளில் பயணிக்கலாம். மூன்று பேர் சேர்ந்து பேசுகிறீர்களா, 7 x 7 x 7 = 343 வகையான பரிவர்த்தனைகள் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன. இதுவே பேசுபவர்கள் எண்ணிக்கை 4, 5, 6 என்று அதிகமாகும்போது,
7 x 7 x 7 x 7
7 x 7 x 7 x 7 x 7
7 x 7 x 7 x 7 x 7 x 7
என்று அதிகமாகிக்கொண்டே போகும்.
பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத சிக்கல்களும் திருப்பங்களும் வருவது இந்த ஏழு “நான்”களால்தான். உங்களுக்குள்ளும், நீங்கள் நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களுக்குள்ளும் ஏழு ”நான்” கள் இருப்பதை உணருங்கள், ஒத்துக்கொள்ளுங்கள். டீல்களை முடிப்பது செம ஈஸி!
slvmoorthy@gmail.com