Wednesday, 16 April 2014

இந்திய அரசியலின் மொழி!

இந்திய அரசியல் என்பது வினோதமான மிருகம். பிரச்சினைகளின் அடிப்படையில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெரிவிப்பதாகக் கூறிய 'ஆன்-லைன்' அரசியல் புதிர் நிகழ்ச்சிக்குப் பதில்களை அனுப்பினேன். பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, சுகாதார நலத் திட்டங்கள், நாய்க்கான உணவு என்ற விதவிதமான கேள்விகளுக்கு எதிராக 81%, 78%, 68% என்று மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகக் குறிப்பிட்டேன். உண்மை என்னவென்றால், இந்திய அரசியல் என்றாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கு விடை அளித்த பிறகு, தெரிவிக்கப்பட்ட முடிவு அப்படியொன்றும் அபத்தமாக இல்லை!
இந்திய அரசியல் என்றாலே என்ன நினைக்கத் தோன்றுகிறது? ‘அரசியலின் மூன்று மொழிகள்' (The three languages of politics) என்ற சிறந்த நூலில் ஆர்னால்டு கிளிங்க் அற்புதமாகக் கூறியிருப்பார். “அமெரிக்க அரசியல் மூன்று அம்சங்களையே மையமாகக் கொண்டது. அவை: அடக்குவோன்-அடங்குவோன், நாகரிகம்-காட்டுமிராண்டித்தனம், சுதந்திரம்-ஒடுக்குமுறை.
மூன்று அம்சங்கள்
முற்போக்காளர்கள் அடக்குமுறையின் அளவு, தன்மை, தீவிரம் ஆகியவற்றைக் கொண்டு உலகை எடைபோடுவார்கள். பழமைவாதிகள் மேற்கத்திய வாழ்வியல் கலாச்சாரத்துக்கு வந்துள்ள ஆபத்துகுறித்து அஞ்சுவார்கள். விடுதலைக் கோட்பாட்டாளர்களுக்குத் தனிநபர் சுதந்திரம் எந்த அளவுக்கு உறுதி செய்யப்படுகிறது என்பதே முக்கியமாக இருக்கும்.
இந்த மூன்று பிரிவுகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அவரவர்க்கென்று தனி அரசியல் மொழியை வைத்திருப் பார்கள். தங்களுடைய கருத்தை ஏற்காத எதிராளிகளை, ‘நியாயத்தை ஏற்க மறுப்பவர்கள்' என்று சாடுவார்கள். உள்நோக்கத்தோடு பகுத்தறிவு பேசுவார்கள். தாங்கள் ஏற்கெனவே எடுத்துவிட்ட முடிவுக்கு ஏற்ப வாதத்தை அடுக்குவார்கள். உண்மையில் நடப்பது என்ன, பேசப்படுவது என்ன, செய்ய வேண்டுவது என்ன என்று ஆக்கபூர்வமாகச் சிந்தித்துப் பேச மாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாதபடிக்குக் கருத்து வேறுபாடுகள் முற்றிவிட்டதால், அமெரிக்காவில் அரசியல் என்பது வெவ்வேறு முனைகளில் குவியத் தொடங்கிவிட்டது என்பார் கிளிங்க்.
ஒருவகையில் பார்த்தால், அந்தக் கருத்து இந்தியாவுக்கு இப்போது நன்றாகப் பொருந்திவருகிறது. மத தேசியத்தில் ஊறிய பா.ஜ.க-வை அமெரிக்காவின் பழமைவாதிகளுக்கு இணையானது என்று கூறலாம். உள்ளூர் அரசியல்வாதிகள் இந்திய அரசியலை வலதுசாரி, இடதுசாரி என்றே பிரித்து ஆராய்ந்துவருகின்றனர். இதுமிகவும் பொருத்தமில்லாதது.
அமெரி்க்காவில் மூன்று குழுக்களும் மற்ற இரு குழுக்களின் கருத்துகளை முட்டாள்தனமானது என்று கருதினாலும், உள்ளுக்குள் அவை ஒரேவிதமாகப் பார்க்கவும் பேசவும் பழகியிருக்கின்றன. இந்தியாவிலோ இதற்கு நேர்மாறானது. யார் எதைப் பேசுவது என்று வரம்பே கிடையாது. இந்திய அரசியல் கட்சிகள் வெளி யிட்ட தேர்தல் அறிக்கையை ஆங்காங்கே வெட்டியும் தனியொரு தாளில் ஒட்டியும் வைத்துவிட்டு, எதை, யார் சொன்னார்கள் என்று கேட்டால், பதில் சொல்ல முடியாமல் தோற்றுவிடுவேன். காரணம், ஒவ்வொரு அம்சம்குறித்தும் ஒவ்வொரு கட்சியும் அதேவிதமான கருத்துகளைத்தான் பெரும்பாலும் முன்வைக்கின்றன.
யார் இடது? யார் வலது?
தேர்தலுக்கு முன்னால் அவர்கள் என்ன பேசுகிறார் கள் என்பது இருக்கட்டும், தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்தால் அவர்கள் மத்தியில் ஆட்சி செய்தாலும், மாநிலத்தில் பதவியில் இருந்தாலும் - அவர்களுக்கிடையிலான வித்தியாசம் அப்படியொன்றும் பெரிதாக இல்லை என்பதால், நிராகரிக்கவே தோன்றும்.
சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று பா.ஜ.க. அறிவிக்கும்போது, ஒரு பிரிவினரின் மனது புண்படுகிறது என்பதால், சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்' நூலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இதில் யார் இடதுசாரி, யார் வலதுசாரி?
இந்தியாவில் அரசியலை வழிநடத்துவது இரண்டு. 1. அரசு நிர்வாகத்தின் இயல்பும் அமைப்பும். 2. நம்முடைய வாக்காளர்களின் இயல்பு. நம்முடைய அரசாங்க இயந்திரம், தேவைக்கும்மேல் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. சாமானியர்களை ஆட்டிப்படைக்கும் விதத்தில் அரசாங்கத்துக்கு ‘விருப்ப அதிகாரங்கள்' ஏராளமாகத் தரப்பட்டிருக்கின்றன. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் நம்முடைய நிலைமை படுமோசமாகத்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தைவிட நாம் இப்போது அதிகமாக அலைக்கழிக்கப்படுகிறோம், அடக்கியாளப்படுகிறோம். நம்முடைய அரசாங்கமானது நமக்கு சேவை செய்ய அல்ல நம்மை அடக்கியாளத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சும்மா ஆண்டால் போதுமா, கசக்கிப்பிழிந்து வரி வசூலிக்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் என்பவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மைக் கொள்ளையடிக்க உரிமை கோரும் மாஃபியா கும்பல்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்!
வாக்காளர்களின் இயல்பு
நம்முடைய அரசியலை வழிநடத்திச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பது நம்முடைய வாக்காளர்களின் தன்மை, இயல்பு ஆகியவையே. நம்முடைய அரசியல் பெரும்பாலும் உள்ளூர் பிரச்சினைகளைச் சார்ந்தவையே, அதிலும் பெரும்பாலும் பழங்குடிகளுக்கு உள்ளதைப் போன்றவையே! நம்முடைய பழங்குடிகள், எண்ணங்கள் வழிவந்தவர்களோ சித்தாந்தங்களின் அடிப்படையிலானவர்களோ அல்லர். பழங்குடிகள் என்றாலே அவர்கள் என்ன சாதி, எங்கே வசிக்கின்றனர் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பல்வேறு குழுவினரை அப்படியே தொகுத்தும் பகுத்தும் தங்களுடைய வாக்கு வங்கிகளாக வைத்திருப்பதில்தான் இந்திய அரசியலே இருக்கிறது.
சிறுபான்மைச் சமூகத்தை ஈர்ப்பதால்தான் காங்கிரஸ் கட்சிக்குப் போலி மதச்சார்பின்மை பேசும் கட்சி என்ற பட்டம் கிட்டியது. 1980-களின் இறுதியிலும் 1990-களின் தொடக்கத்திலும் குஜராத்தில் பா.ஜ.க. செல்வாக்கு பெறக் காரணமாக இருந்தது அம் மாநிலத்தைச் சேர்ந்த படேல்களும் பிராமணர்களும், காங்கிரஸ் கட்சியின் ‘காம்' (KHAM) என்ற அடிப்படை உத்தி பிடிக்காமல் எதிர் முகாமான பாரதிய ஜனதாவுக்குச் செல்லத் தொடங்கினர். ‘காம்' என்பது க்ஷத்திரியர், ஹரிஜனங்கள், ஆதிவாசி, முஸ்லிம்கள் ஆகியோரைக் குறிக்கும் சொற்களின் ஆங்கில முதல் எழுத்தைச் சேர்த்தால் வருவது. இவர்களைத் தன் பக்கம் ஈர்க்க இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தைக் காங்கிரஸ் பயன்படுத்தியது. இதை வெறுத்தவர்கள் பா.ஜ.க-வை ஆதரித்தனர். மிச்சமீதியிருந்தவர்களையும் பா.ஜ.க-வின் ராமஜன்மபூமி இயக்கம் கடத்திக்கொண்டுபோய்விட்டது.
அடையாள அரசியல்
இரண்டு முகாம்களும் மிகப் பெரிய சித்தாந்தங்களை இங்கே புகுத்திவிடவில்லை. வெறும் அடையாள அரசியல்தான்! இந்திய அரசியலில் வெற்றியே இதில்தான் இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே வெறுக்கத்தக்கவைதான். காங்கிரஸ் கட்சி என்பது காலி கூடாகிவிட்டது. எந்தவித ஆக்கபூர்வ சிந்தனைகளும் கொள்கைகளும் இல்லாத, ஒரு குடும்பத்துக்கு மட்டுமே கட்டுப்பட்ட விசுவாச அமைப்பாகிவிட்டது. இது நம்முடைய நாட்டை மட்டும் பலவீனப்படுத்தவில்லை, மோடி என்பவரைத் தேசத் தலைவராகவும் பார்க்கும் எண்ணத்தை மக்களிடையே வளர்த்துவிட்டது.
பாரதிய ஜனதா என்பது மதவாத அமைப்பில் வேர்கொண்டது. வளர்ந்த ஆண்கள்கூட காக்கி அரை டிராயரில் தங்களுடைய உடல் வனப்பை எடுத்துக்காட்ட வாய்ப்பு தரும் இயக்கம் அது! அவர்களுடைய தலைவருக்கு வீர சாவர்க்கரைவிட முகேஷ் அம்பானி என்றால் உற்சாகம் கொப்பளிக்கும் என்றே நம்புகிறேன். “நரகத்தில் ஆட்சி, சொர்க்கத்தில் சேவை இவ்விரண்டில் எது வேண்டும் உங்களுக்கு?” என்று நரேந்திர மோடியிடம் கேட்டால், ‘நரகமே கொடுங்கள்' என்பார். அதிகாரம்தான் எல்லோருக்கும் பிடித்த மதம்.
ஆம் ஆத்மியைப் பார்க்கும்போது இதற்கெல்லாம் விதிவிலக்காகத் தெரிகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை ஊழல்தான் என்று அரவிந்த் கேஜ்ரிவால் மிகச் சரியாக அடையாளம் கண்டார். ஆனால், அதை ஒழிப்பதற்கு அவர் கையாண்ட வழிமுறைதான் பிரச்சினையை மேலும் மோசமாக்கிவிட்டது. ஊழல்களுக்கெல்லாம் மூல காரணமாக இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்த ‘விருப்ப அதிகாரங்களை' (Discretionary power) ஒழிப்பதற்குப் பதிலாக - ஜன் லோக்பால் என்ற மற்றொரு அடுக்கை அதன் மீது போர்த்த முற்பட்டார். மிகப் பிரமாதமாக அரசியல் களத்தில் செயல்படத் தொடங்கி, அதே அளவுக்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டார்கள்.
2014 மக்களவைத் தேர்தலில் பாராட்டத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால், இந்நாட்டு இளைஞர்களை, நகர்ப்புற மக்களை, நடுத்தர வர்க்கத்தினரை, ‘இனியும் மெத்தனமாக இருந்தால் நாட்டுக்குக் கதி மோட்சமே கிடையாது’ என்று உலுக்கி எடுத்திருக்கிறது.
பிசினஸ் லைன், தமிழில்: சாரி

No comments:

Post a Comment