நம் நாட்டில் விவசாயம் அழிந்து வருகிறது என்று ஆளாளுக்குப் பேசி வருகிறார்கள். 1993-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டிலும் இதே நிலைமைதான். ஆனால், புதுமையாகச் சிந்தித்தால் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளலாம் அல்லவா? சமயோசிதமாகச் செயல்பட்டு விவசாயத்தைக் காப்பாற்றினார்கள் அங்குள்ள இனாகாடேட், அமோரி பகுதி விவசாயிகள். என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்த நேரத்தில் அவர்களுக்குக் கைகொடுத்தது நெல் விளையும் சித்திரங்கள்.
இந்தியாவில் பச்சரிசி, பொன்னி, சீரகசம்பா என அரிசி ரகங்களை அழைப்பது போல, ஜப்பானில் கொடைமை, சுகாரு எனப் பல்வேறு ரக அரிசி வகைகள் உள்ளன. இதில் கொடைமை அரிசியின் நெற்கதிர் வெளிர் மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில் வளரும். சுகாரு நெற்கதிர் வழக்கமான பச்சை நிறத்தில் இருக்கும். இது போதாதா ஜப்பான் மூளைகளுக்கு. கலர் கலரான நெற்கதிர்களை ஒன்றாகப் பயிரிட்டு வண்ணங்கள் கொண்ட நிலங்களாக மாற்றினர்.
கொஞ்சம் தீவிரமாக யோசித்த பின் மான், ஜப்பான் நாட்டு போர் வீரர்களைப் போலவே நெல் மணிகளை நட்டனர். என்னே ஆச்சர்யம்! அவை வளர்ந்ததும், நிலங்களில் மான், போர் வீரர்களின் உருவங்கள் தத்ரூபமாகத் தெரிந்தன. இப்படி நெல்மணிகளைப் பல வடிவங்களில் விதைத்து உருவங்களை உருவாக்கி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தச் சித்திரப் பயிர்களைப் பார்க்கவே ஆயிரக்கணக்கில் மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் ஒரு புறம் வியாபாரமும் களைகட்டுகிறது. இன்னொரு புறம் விவசாயமும் வளர்ந்தது.
வித்தியாசமான, புதுமையான எண்ணங்கள் என்றுமே வெற்றி தரும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான்.
No comments:
Post a Comment