Tuesday, 15 April 2014

விண்வெளிப் பயண நாள் ஏப்ரல் 12: விண்ணைத் தாண்டி

விண்வெளி குறித்து அறிந்துகொள்ள மனிதர்களுக்கு எப்போதுமே அதிக விருப்பம். நிலவு, செவ்வாய் எனப் பிற கோள்களில் என்ன இருக்கின்றன, அவை நமக்குப் பயன்படுமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் மனித இனம் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யாரென்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் நாள் அன்று ரஷ்யாவைச் சேர்ந்த யூரி காகரின் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். யூரி ககாரின் வஸ்தோக்-1 விண்கலத்தில் பயணித்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்தபின்பு பாதுகாப்பாகத் தரையிறங்கினார். உலகத்தின் முக்கியமான அறிவியல் சாதனைகளில் இதுவும் ஒன்று என்பதை மறுக்க இயலாது. இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் ஐநா இந்த நாளை சர்வதேச விண்வெளிப் பயண நாளாகக் கொண்டாட முடிவு செய்தது.
சர்வதேச மனித விண்வெளிப் பயண நாள் பற்றி 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஐநா தீர்மானம் இயற்றியது. ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாளை சர்வதேச மனித விண்வெளிப் பயண நாளாகக் கொண்டாட வேண்டும் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது. விண்வெளிப் பயண முயற்சிகளை நினைவுகூர்வது, விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றதில் அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, மனித இனத்திற்குப் பயன்படும் வகையில் ஆராய்ச்சி மேற்கொள்வதை உறுதிசெய்வது ஆகியவை இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கங்கள்.
சர்வதேச அளவில் புகைப்படக் கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் போன்றவற்றை நடத்தி இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

No comments:

Post a Comment