உலகத்தின் மகாகவிகளுள் ஒருவரான ஷேக்ஸ்பியர் ஐம்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து 1616 ஏப்ரல் 23-ல் மறைந்தார். அவருடைய பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவருக்கு ஞானஸ்னானம் வழங்கப்பட்ட நாள் ஏப்ரல் 26 என்று தெரிகிறது. எனவே, ஏப்ரல் முழுவதையும் ஷேக்ஸ்பியர் மாதமாகக் கொண்டாடுவதில் தவறில்லை.
தமிழ்நாட்டில் ஷேக்ஸ்பியர்
ஷேக்ஸ்பியருடைய நாடகங்களில் இலக்கியவாதி களுக்கு உள்ள ஈர்ப்பு இன்றுவரை வலுவாகத்தான் இருக்கிறது. நாடக ரசிகர்களால் மட்டுமின்றி புகழ்மிக்க கவிஞர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் வெகுவாகப் போற்றப்பட்டவர். தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி அறிமுகமான நாட்களிலிருந்தே ஷேக்ஸ்பியரின் படைப்புகள், மாணவர்கள் படிக்க வேண்டுமென்று பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவந்தன. ஏதாவது ஒரு இலக்கிய வடிவில் நாடகங்களின் சுருக்கப்பட்ட கதைகளாகவோ, அவரது கவிதைகளாகவோ, நாடகங்களாகவோ மாணவர்கள் அவற்றைப் படித்தும் விவாதித்தும் நடித்தும் வந்துள்ளனர். இன்றைக்கும் பள்ளியிலோ கல்லூரியிலோ நாடகப் போட்டி நடைபெறுமானால் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் தவறாமல் இடம்பெறும்.
தமிழ்நாட்டில் மேடை நாடகங்களின் தொடக்க காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின் ஷேக்ஸ்பியர் நாடகத்தழுவல் மேடையேறியுள்ளது. தமிழ்த் திரைப்படங்களும் இதற்கு விலக்கல்ல. நீதிபதி எஸ். மகராஜனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் ஷேக்ஸ்பியருக்குத் தமிழ்நட்டிலிருந்த வரவேற்புக்குச் சான்று. படித்தவர்கள் தங்களது இலக்கிய ரசனையின் நுட்பத்தைக் காட்டிக்கொள்வதற்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டைச் சான்றாக முன்வைப்பார்கள். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியர் தன் காலத்திலோ பின்னாட்களிலோ விமர்சனமில்லாமல் அப்படியே ஏற்று அங்கீகரிக்கப்பட்டவரல்ல.
மரபுக்குக் கட்டுப்படாதவர்
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இலக்கியவாதிகளின் கவனத்துக்கு உரியவைதான். அதைவிடக் கவனத்துக்கு உரியதும் சுவாரசியமானதும் இந்த நாடகங்கள் நாடுதோறும், காலந்தோறும் எப்படி ஏற்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன என்பதுதான். ஒரு படைப்பு எப்படித் தோன்றியது என்பது மட்டுமல்ல வரலாறு. மக்களிடையே அதற்கு வெவ்வேறு காலங்களில் இருந்த வரவேற்பின் தன்மையும் அந்தப் படைப்பின் இலக்கிய வரலாறுதான்.
இந்த அடிப்படையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பார்க்கலாம். அவர் காலத்திலும் அதற்கு முன்பும் கிரேக்கப் படைப்பிலக்கியக் கோட்பாடுகளும், விமர்சன மரபும் அப்படியே ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஒத்துவராத படைப்புகள் இலக்கியமல்ல என்று கூறப்படும் அளவுக்கு அவை போற்றிப் பின்பற்றப்பட்டன. நாடகத்தில் நிகழ்வுகளின் ஓர்மை (ஓர்மை - யூனிட்டி), நிகழ்விடத்தின் ஓர்மை, நிகழும் காலத்தின் ஓர்மை இப்படி மீற முடியாத ஓர்மைக் கோட்பாடுகள் மூன்று இருந்தன. ஷேக்ஸ்பியர் இவற்றை மதித்தவராகத் தெரியவில்லை. கிரேக்கமோ லத்தீன் மொழியோ அறியாத அவருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்றுகூட வாதிட்டார்கள். ஆனாலும், அவரது நாடகங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறி, இணையற்ற நாடக ஆசிரியராக அவர் விளங்கினார். இது விமர்சன உலகுக்கு ஒரு இக்கட்டுதான். செவ்விலக்கியக் கோட்பாடுகளுக்கு ஒத்துவராத நாடகங்களின் வெற்றியை எப்படி விளங்கிக்கொள்வது? அந்தக் கோட்பாடுகள் போதாதவை என்பதா அல்லது ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் புதிதாக அறிய வேண்டிய கோட்பாடுகளுக்கு அறிகுறியைக் காட்டுகின்றன என்பதா?
மேதையா கலைஞரா?
அவர் எடுத்துக்கொண்ட படைப்புச் சுதந்திரம் தறிகெட்டதனமானது என்று சிலர் சொல்வார்கள். அவர் மேதைதான் ஆனால் அந்த மேதைமையில் நாடக மேடைக்கான திறமையில்லை என்றார் அவருடைய சமகாலத்தவரான பென் ஜான்சன். மாத்யு ஆர்னல்ட் கூட ஷேக்ஸ்பியரிடம் முழுமைபெற்ற நடையின் அழுத்தத்தைக் காண முடியவில்லை என்றார். மற்ற சிலரும் அவரை மேதை என்று ஏற்பார்களே தவிர கலைஞர் என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மெத்தப் படித்திருக்கத்தான் வேண்டுமா? கலை, இயற்கையின் வரமல்லவா? மேதைமை திறமை, படிப்பறிவு இயற்கை, இப்படியாக ஷேக்ஸ்பியரின் வெற்றியை விளங்கிக்கொள்வதற்கு நுட்பமான பாகுபாடுகளையெல்லாம் கற்பிதம் செய்துபார்த்தார்கள். விமர்சன மரபும், விமர்சன உலகும் புதிதாக எதிர்கொள்ள வேண்டியிருந்த ஒரு சவாலாக ஷேக்ஸ்பியர் இருந்தார்.
கவி நியாயம் அல்லது இலக்கிய நியாயம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது. நாடகமோ கதையோ இறுதியாக நல்லவை வெல்வதாகவும், அல்லவை தோற்பதாகவும் காட்ட வேண்டும். நல்லவனாக இருப்பதன் பயனை இப்படிச் சுட்ட வேண்டும். ஷேக்ஸ்பியரின் கிங் லியர், ஒத்தெல்லோ போன்ற நாடகங்களெல்லாம் இதற்கு ஒத்துப்போகாதவை. அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த நாடகங்களின் துன்பகரமான முடிவைச் சகித்துக்கொள்ள இயலாமல் மாற்றியமைத்து நடித்தார்கள். ஆனால், மாற்றப்பட்ட முடிவுகள் வெற்றி பெறவில்லை. அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கோலோச்சிய இலக்கியக் கோட்பாடு தோற்றுப்போனது. மேலைநாட்டு விமர்சன மரபுக்கு இது ஒரு புதிர்.
டி.எஸ். எலியட் உட்பட மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர்கள் பலர் ஷேக்ஸ்பியரிடம் குறைகண்டவர்களோடு ஒத்துப்போயினர். அதே நேரத்தில் வில்சன் நைட் போன்ற விமர்சகர்கள் நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் பொருட்செறிவுள்ள புதிய தளம் ஒன்றினை ஷேக்ஸ்பியரின் சொற்கள் வாயிலாகவே கண்டார்கள்.
போதாமையை வெளிச்சம் காட்டியவர்
செவ்விலக்கியக் கோட்பாடுகளின் போதாமையைக் காட்டியவர். புதிய கோட்பாடு களுக்கான தேவையைப் புரியவைத்தவர். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை வளமாக்கி மேம்படுத்தியவர். இப்படிப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் கதைகளெல்லாம் அவரது சொந்தக் கற்பனையல்ல. கதை மரபுகள் பலவற்றிலிருந்து அவற்றை எடுத்து நாடக மேடைக்கு மறுவடிவமைப்பு செய்துகொண்டார். நல்லவர்களை மேலும் நல்லவர்களாக்குவார், கெட்டவர்களை மேலும் கெட்டவர்களாக்குவார் அல்லது கெட்டவர்களை நல்லவர்களாக்குவார். இல்லாத கதைமாந்தர்களையும் நிகழ்வுகளையும் தானே உருவாக்கி ஒட்டிவைப்பார். இப்படி, பழைய கதைகளையெல்லாம் உருமாற்றி நாடகமாக்குவார். கதைகள் ஏற்கெனவே மக்கள் அறிந்தவையாகப் புழக்கத்தில் இருக்கும். நாடக ஆசிரியருக்கு இந்த நிலைமையில் ஒரு வசதியும் அத்துடன் ஒரு ஆபத்தும் உண்டு. ஏற்கெனவே தெரிந்த கதையின் புதிய நாடக வடிவம்பற்றி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
இப்படிப் புழக்கத்தில் இருக்கும் கதைகளை நாடகமாக வடிவமைப்பது இன்றைய இலக்கிய உலகில் ஒரு இரண்டாம்தரப் படைப்பாகக் கருதப்படலாம். அவர் காலத்தில் இது பெருமையாகப் போற்றி வளர்க்கப்பட்ட மரபு. அசல், போலி என்பதெல்லாம் அப்போது இலக்கிய விழுமியங்கள் அல்ல. வடிவமாற்றம் செய்வதில் வெளிப்படும் திறமையும், அதில் காணும் கற்பனையும்தான் படைப்பின் மதிப்பீட்டுக்கான அடிப்படை. பழைய கிரேக்க மரபு ஒன்றை ஷேக்ஸ்பியர் உலுக்கி ஆட்டம்காண வைத்தார். அதே காலத்தின் மற்றொரு இலக்கிய மரபுக்கு வலுசேர்த்தார். இப்படியெல்லாம் கருதாமல் அவரது நாடகங்களை மேடைக் கூத்து என்று கண்டவர்களும் உண்டு.
படைப்பிலக்கிய விமர்சன மரபுகளையும் கோட்பாடுகளையும் கிரேக்க-ரோமானிய காலத்திலிருந்து இன்றுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் கொண்டே கற்கலாம், கற்பிக்கலாம். இவரது நாடகங்களைக் கற்பிக்க இயலாது; இவற்றைக் கற்கும் திறன் மாணவர்களுக்குக் குறைவு; பொது ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இவை இருந்தால் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும்; இவ்வாறு சில காரணங்களைக் கண்டு தமிழகப் பல்கலைக்கழகங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து ஷேக்ஸ்பியரை நீக்கிவிட்டன.
எந்த ஒரு பாடத்தையும் அதன் உள்ளடக்கத்துக்காக மட்டுமே வாசிப்பதும் கற்பிப்பதும் மேம்போக்கான கல்வி. உள்ளடக்கம் அதன் பின்புலத்தில் இருக்கும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் விளக்குவதற்கும் கற்பதற்கும் ஒரு வாய்ப்பு. ஷேக்ஸ் பியர் நல்கும் இந்த வாய்ப்பைத் தமிழகம் மறுத்து விட்டது என்றுதானே சொல்ல வேண்டும்!
ஷேக்ஸ்பியர் எழுதிய கிங் லியர் படைப்பிலிருந்து...
வீடின்றி, புயலில் சிக்கி அவதியுறும்
பரிதாபத்துக்குரிய உயிர்களே
இத்தகையதொரு இரவை எப்படி நீங்கள்
தாக்குப்பிடிப்பீர்கள்?
உங்கள் தலைக்கு மேல் கூரை இல்லை.
உங்களைக் கதகதப்பாக்கிக்கொள்ளக் கணப்பு இல்லை
உங்கள் உடல்களை மறைக்கக் கந்தல்களைத் தவிர வேறில்லை.
நான் அரசனாக இருந்தபோது
உங்களுக்காகப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை.
வலிமை வாய்ந்த மனிதர்களே...
இந்த எளியவர்கள் படும் துயரத்தை அறிந்து
அதன்மூலம் உங்களை குணப்படுத்திக்கொள்ளுங்கள்
வெளியே செல்லுங்கள். ஏழைகளின் பாடுகளை உணருங்கள்
உங்களிடம் உபரியாக இருக்கும் செல்வத்தை அவர்களுக்கு அளியுங்கள்
இந்த உலகை மேலும் நியாயம் உள்ளதாக ஆக்குங்கள்.
தமிழில்: அரவிந்தன்
தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
No comments:
Post a Comment