Saturday, 19 April 2014

மீண்டும் வருமா தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம்?: குழந்தை பலிகளைத் தடுக்க சட்ட நடவடிக்கை தேவை

ஆழ்துளை கிணறு விபத்துகளைத் தடுக்க கடந்த ஆண்டு கைவிடப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாட்டுச் சட்டம் கடந்த 2003-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி ஆழ்துளைக் கிணறுகளை போடும்போது அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் அனுமதி பெறுவது, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு களைப் பாதுகாப்பாக மூடுவது, முள்வேலிகளை அமைப்பது போன்ற கண்டிப்பான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அந்தச் சட்டம் அமலில் இருந்த நிலையிலும் மேற்கண்ட விதிமுறைகளை யாரும் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், வேளாண்மைக்கு நிலத்தடி நீரை பயன்படுத்துவது, நிலத்தடி நீரைக் கொண்டுச் செல்லும் ஒவ்வொரு லாரிக்கும் அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு சட்டசபையில் இந்த சட்டத்தை நீக்கம் செய்தது. மேலும் இது தொடர்பாக புதிய விரிவான சட்டம் இயற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில்தான் கடந்த 16-ம் தேதி தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் நடந்த ஆழ்துளை கிணறு விபத்துகளைத் தடுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் மேற்கண்ட சட்ட மசோதாவை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடுவது குறித்து ஆலோசனை நடந்தது. அந்தக் கூட்டத்தில் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நிலத்தின் உரிமையாளர் மட்டுமின்றி போர்வெல் நிறுவன உரிமையாளரையும் கைது செய்வது, கைவிடப்படும் கிணறுகளில் மண் அல்லது கான்கிரீட் கொண்டு மூடுவது, கிணற்றைச் சுற்றி முள்வேலி அமைப்பது, இவற்றை உள்ளாட்சி நிர்வாகத்தின் இளநிலைப் பொறியாளர் ஒருவர் கண்காணித்து புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிப்பது - இவற்றை எல்லாம் புதியதாக கொண்டு வரவுள்ள விரிவான நிலத்தடி நீர் மேம்பாட்டு சட்டம் மூலம் நிறைவேற்றுவது என கருத்துகள் கூறப்பட்டன.
இதற்கிடையே போதுமான பாதுகாப்பு சாதனங்கள் இருந்தும் ஆழ்துளை கிணறு தோண்டும் போர்வெல் நிறுவனங்களும், நில உரிமையாளர்களும் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் பிளாஸ்டிக் குழாய் விற்பனையாளர்கள். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பிளாஸ்டிக் குழாய் முகவரான பவானி, “பொதுவாக 7 அங்குல அளவுக்கு அதிகமான விட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினாலே குழந்தைகள் உள்ளே விழ அதிகமான வாய்ப்பு உள்ளது. ஆழ்துளைக் கிணறை தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லை என்று கைவிடும்போது தோண்டிய மண்ணையும் கான்கிரீட்டையும் கலந்து பள்ளத்தை மூடிவிடலாம். ஆனால், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் வீணாகிவிட்டதே என்று பலரும் கிணற்றை மூட கூடுதல் செலவை செய்வது இல்லை. அவர்களுக்காகவே, வெறும் ரூ.400 முதல் 700 வரை விலை கொண்ட உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பொருத்திவிட்டாலே குழந்தைகள் விழுவது தடுக்கப்படும்.
சில நேரங்களில் தோண்டிய ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வரவில்லை என்றாலும் மழைக் காலத்தில் தண்ணீர் ஊற வாய்ப்புண்டு என்பதாலும் அவற்றை மூடாமல் வைத்திருப்பர். அவர்களுக்கு இந்த மூடி வெகுவாக பயன்படும். சிலர் பிளாஸ்டிக் குழாயை ஆழ்துளை கிணற்றில் பொருத்திவிட்டு அதை கோணிப்பையால் மூடி குழாயோடு சேர்த்து கயிற்றால் கட்டி வைப்பார்கள். ஆனால், பிளாஸ்டிக் குழாய் வழுவழுப்பாக இருப்பதால் கோணிப்பை மீது குழந்தை ஏறி பாரம் அழுத்தும்போது, எவ்வளவு உறுதியாக கயிறு கட்டப்பட்டிருந்தாலும் அது வழுக்கி அவிழ்ந்துவிடும். எனவே மேற்கண்ட செயலை யாரும் செய்யக்கூடாது” என்றார்.

No comments:

Post a Comment