‘தண்ணீர் வளத்தைக் கைப்பற்ற எதிர்காலத்தில் மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம்' என்று சுற்றுச்சுழல் அறிஞர்கள் முன்பு எச்சரித்தபோது, நம்பமுடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது ஐ.நாவின் துணை அமைப்பான ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு - Intergovernmental Panel on Climate Change) அந்தக் கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
‘எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு, உணவுப் பயிர் உற்பத்தி போன்றவை கடுமை யாக பாதிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதன் காரணமாக போர் வெடிக்கலாம்' என்று ஐ.பி.சி.சி. சமீபத்தில் எச்சரித்திருக்கிறது.
பருவநிலை மாற்றம் (Climate Change) உலகின் அனைத்து கண்டங்களிலும், பெருங்கடல்களிலும் ஏற்கெனவே பற்றியெரிந்துவரும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருக்கிறது. வெள்ளம், புயல், கடுமையான மழைப்பொழிவு, வெப்பஅலை, வறட்சி, காட்டுத்தீ போன்ற பருவநிலை மாற்ற தீவிர பிரச்சினைகள் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளன. ஆனால், அந்த ஆபத்துகளை எதிர்கொள்ளவோ, சமாளிக்கவோ, தடுக்கவோ இந்த உலகம் இன்னும் தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறது என்றும் ஐ.பி.சி.சி. எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான 2,600 பக்க அறிக்கையை ஜப்பான் நகரம் யோகஹாமாவில் ஐ.பி.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில்தான் மேற்கண்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.சி.சி.யில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள், அரசுப் பிரதிநிதிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
யாரும் தப்பிக்க முடியாது
"பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இந்த உலகத்தில் யாரும் தப்பிக்க முடியாது" என்று எச்சரிக்கிறார் ஐ.பி.சி.சி. அமைப்பின் தலைவரும் இந்திய விஞ்ஞானியுமான ராஜேந்திர பச்சௌரி. மழைபொழியும் முறை மாறும், வறட்சி அதிகரிக்கும் என்பதால் வசிப்பிடம், சொத்துகள், உணவு, தண்ணீர் போன்றவை கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக பட்டினியும், இடப்பெயர்வும், இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கான போட்டியும் அதிகரிக்கும்.
"பருவநிலை மாற்றத்தால் துருவக்கரடிகள், பவழத்திட்டுகள், மழைக்காடுகள் மட்டும் ஆபத்தில் இல்லை. உண்மையான ஆபத்து மனிதர்களுக்குத்தான்" என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் அரசியல் ஆலோசகர் கைசா கோசனன்.
உலகுக்கு ஏற்பட்டுள்ள நிஜமான ஆபத்தை தெள்ளத் தெளிவாக, அறிவியல்பூர்வமாக ஐ.பி.சி.சி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதை உணர்ந்து செயல்படத் தவறினால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
யார் காரணம்?
இந்த மோசமான மாற்றங்கள் அனைத்துக்கும் காரணம் மனிதச் செயல்பாடுகள்தான். கட்டுமீறிய நுகர்வுக் கலாசாரமும், சுற்றுச்சூழல் சீரழிவும்தான் அந்தக் காரணங்கள்.
மின்சாரம், பெட்ரோல் போன்ற எரிபொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். மின்சாரம் தயாரிக்க அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியும், மற்ற எரிபொருட்களும் கார்பன் டை ஆக்சைடு, மீதேன் உள்ளிட்ட வாயுக்களை அதிகமாக வெளியிடுகின்றன. இவை பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. இது புவி வெப்பமடைதல் (Global warming) எனப்படுகிறது.
கடல்மட்ட உயர்வு, பனிச்சிகரங்களும் துருவப் பனிப்பாறைகளும் வழக்கமற்று உருகி வருவதற்குக் காரணம், மனிதச் செயல்பாடுகளால் தீவிரமடைந்த புவி வெப்ப மடைதல்தான் என்று ஐ.பி.சி.சி. ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பின்விளைவுகள் காலநிலை மாற்றம் எனப்படுகிறது.
முக்கிய பாதிப்புகள்
காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, உலக சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட அதிகபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் உயரும். சராசரி வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போதே, பின்விளைவாக உருவாகும் ஆபத்துகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும்.
2100க்குள் கடல் மட்டம் ஒன்று முதல் இரண்டரை அடி வரை உயரும். விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அரிசி, கோதுமை, சோளம் போன்ற முதன்மை உணவுப் பயிர்களின் உற்பத்தி சரியும். உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதால், கொசுக்களாலும் தண்ணீராலும் பரவும் தொற்றுநோய்கள் அதிகரிக்கும்.
இந்தக் கணிப்புகள் எதுவும் நம்மை பயமுறுத்துவதற்காகக் கூறப்படுபவை அல்ல. அனைத்தும் வலுவான அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் முன்மொழியப் பட்டிருக்கின்றன.
வருவாய் இழப்பு
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 2 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்தால், சர்வதேச ஆண்டு வருமானத்தில் அதிகபட்சமாக 2 சதவீத இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் இந்தியா போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 1.7 சதவீதம் சரியும். இது 3 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்கிறார் இந்திய ஆராய்ச்சியாளர் சுரேந்தர் குமார்.
இதன் காரணமாக ஏழ்மை அதிகரிக்கும், பொருளாதாரச் சரிவுகள் பரவலாகும். உணவுப்பொருள் விலையேற்றத்துக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக போர்களும் மூளலாம்.
இந்திய நிலை
பருவநிலை மாற்றம் இந்தியாவில் ஏற்கெனவே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. மேற்குவங்க சுந்தரவன கடல் பகுதியில், ஏற்கெனவே பல தீவுகள் மூழ்கிவிட்டன. இமயமலைப் பனிச்சிகரங்கள் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக உருகி வருகின்றன. இதனால் இந்தியாவை வளப்படுத்திக் கொண்டிருக்கும் ஜீவநதிகள் அனைத்தும் வெள்ளத்தாலோ, வறட்சியாலோ பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து கடுமையான நெருக்கடிகளும், மோதல்களும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்போதே அந்தப் பகுதி கடுமையான வெள்ளத்தை அடிக்கடி சந்தித்து வருகிறது. எதிர்காலத்தில் இப்பகுதியை வறட்சியும் தாக்கக்கூடும். சிந்து நதியிலும், பிரம்மபுத்திரா நதியிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்கிறார் ஐ.பி.சி.சி. அறிக்கையில் பங்காற்றியுள்ள இந்திய ஆராய்ச்சியாளர் அரோமார் ரெவி.
மற்ற பாதிப்புகள்
கடல் மட்டம் உயரும் என்பதால் கேரளத்திலும் கோவாவிலும் கரையோர மக்கள் பாதிப்புகளைச் சந்திப்பார்கள், அந்தப் பகுதிகளின் பொருளாதார அஸ்திவாரங்களான சுற்றுலா ஆட்டம் காணும். மும்பை, கொல்கத்தாவின் பெரும்பகுதி இன்னும் 100 ஆண்டுகளில் கடலுக்குள் இருக்கலாம். உத்தரகண்டில் உருவான திடீர் வெள்ளம், ஒடிசாவை உலுக்கிய பைலின் புயல் போன்றவை அதிகரிக்கலாம். இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களின் தீவிரம் நாம் அறியாத ஒன்றல்ல.
எப்படித் தடுப்பது?
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க தகவமைப்பு நடைமுறைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக முடுக்கிவிட வேண்டும். அதுதான் தற்போதுள்ள ஒரே வழி.
மீதேன், கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் வெளியீட்டை உண்மையிலேயே குறைத்தால், ஆண்டுக்கு 20 முதல் 25 லட்சம் பேர் இறப்பதைத் தடுக்கலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தண்ணீரை வீணாக்குவதைக் குறைப்பது, நகரங்களில் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பூங்காக்கள், தோட்டங்களை உருவாக்குவது, பருவநிலை பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான பகுதிகளில் மக்கள் குடியேறுவதைத் தடுப்பது போன்றவை பருவநிலை மாற்றத் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.
“கயிற்றின் மீது நடந்துகொண்டிருக்கிறோம். பருவநிலையை மாசுபடுத்தும் வாயுக்களைக் குறைக்கும் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டால், மனிதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” என்கிறார் கைசா கோசனன்.
பருவநிலை மாற்றம் என்ற அந்தக் கயிறு அறுந்துபோகும் நிலையில்தான் இருக்கிறது. அறுந்து போவதைத் தடுத்தால் மட்டுமே நாமும், நம் சந்ததிகளும் பிழைக்க முடியும். செய்வோமா?
முக்கிய ஆபத்துகள்
பருவநிலை மாற்றத்தால் ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.
வெள்ளம், புயல், கடுமையான மழைப்பொழிவு, வெப்பஅலை, வறட்சி, காட்டுத்தீ போன்ற பருவநிலை மாற்ற தீவிரப் பிரச்சினைகள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன.
# மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றம், நன்னீர் ஆதாரங்களின் அளவிலும், தரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நன்னீர் கிடைக்கும் விகிதம் சரியும்.
# இமயமலை பனிச்சிகரங்கள் சுருங்கும் என்பதால், அவற்றை நம்பியுள்ள ஜீவநதிகளில் தண்ணீர் வரத்து குறையும்.
# இமாலய நதிப் பாசனப் பகுதிகளில் நன்னீர் ஆதாரம் குறையும் என்பதால், இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்தியா-தெற்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகள் இடையே போர் வெடிக்கலாம்.
# பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஏற்ப தேசிய பாதுகாப்புக் கொள்கையிலும் மாற்றம் உருவாகும்.
# கடலோர வெள்ளத்தால் மக்கள் பலி, பொருட்சேதம் மட்டுமில்லாமல் இந்தியாவில் கோவா, கேரளாவில் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும்.
# மும்பை, கொல்கத்தா போன்ற கடலோரப் பெருநகரங்கள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும்.
# கடல் மீன்கள், கடல் உயிரினங்களின் சில வகைகள் 2050 வாக்கில் ஒட்டுமொத்தமாக அற்றுப் போகும். இது மீன் தொழிலை பாதிக்கும்.
# இந்தியா, பாகிஸ்தானில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment