Friday, 11 April 2014

தேர்தல் களம்: பெண்களுக்கு இடமில்லை!

இந்தியாவின் மக்கள்தொகையில் 49 சதவீதம் பெண்கள். வெற்று அடையாளங்களுக்காக மட்டுமே பெண்களின் பங்களிப்பு இருப்பது போய், இன்று பல துறைகளில் பெண்கள் அதிகார நிலைகளில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மறுபுறம், பெண்களின் மீதான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் மீதான அதிகரிக்கும் வன்கொடுமைகளுக்கு முழுமையான, சரியான எதிர்வினையாற்றப் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து, பெண்கள் இன்று பெரிய அரசியல் அதிகார சக்தியாக உருவெடுக்க முடியவில்லை என்பதற்குத் தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு குறியீடு.
பெண் வேட்பாளர்களின் நிலை
இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பட்டியல்களின்படி, பிரதானக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியில்தான் பெண் வேட்பாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கும் 385 வேட்பாளர்களில் 57 பேர் பெண்கள். அவர்களில் சோனி சோரி, தயாமனி பர்லா, மேதா பட்கர் போன்ற போராளிகளும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திலியா தேவி போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரஸின் 413 வேட்பாளர்களில் 53 பேரே பெண்கள்.
அடுத்த அரசை அமைக்கும் என்று நம்பப்படும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்தான் இருப்பதிலேயே குறைந்த அளவு பெண் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. களமிறக்கும் 409 வேட்பாளர்களில் வெறும் 35 பேர்தான் பெண்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வீட்டுக்கு வீடு பா.ஜ.க-வைக் கொண்டுசேர்த்த வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தர்ராஜன் இருவருக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன, கட்சியில் பாலின, சாதி, மத வேறுபாடு இல்லை என்று பல விளக்கங்கள் கொடுத்தாலும், பா.ஜ.க. கட்டமைக்கும் வளர்ச்சி என்பது எல்லாத் தளங்களிலும் பெண்களை உள்ளடக்கியது அல்ல என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் ஒரே ஒரு பெண் வேட்பாளர்தான் (பா.ம.க.), அதுவும் அவருடைய கணவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
சுஷ்மாவின் முரண்பாடு
பெண்களைப் பற்றிய மரபான, பிற்போக்குச் சிந்தனையிலிருந்து பா.ஜ.க. இன்னமும் வெளியேறவில்லை என்பதை நிர்பயா விவகாரத்தில் பா.ஜ.க-வின் முக்கியப் பெண் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆற்றிய எதிர்வினையிலிருந்து உணர முடியும். நிர்பயா என்றால் பயமறியாதவள் என்று பொருள். ஒரு கொடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, அதிலிருந்து மீள எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துகொண்டிருந்த அந்தப் பெண் உயிருடன் இருக்கும்போதே, அவரை நாடாளுமன்றத்தில் நடைப்பிணம் என்று வர்ணித்தார் சுஷ்மா.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாலேயே ஒரு பெண்ணை நடைப்பிணம் என்று சொன்னதன் மூலம், ஒரு பெண்ணுக்கு அவளது உடலும் அதன் மீது சமூகம் ஏற்றி வைத்திருக்கும் போலி கவுரவமுமே முக்கியம் என்கிற மத அடிப்படைவாதச் சிந்தனையை வெளிப்படுத்தினார்.
நிர்பயா வழக்கு, மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கு என்று பரபரப்பான எல்லா வழக்குகளிலும் மரண தண்டனையைத் தீவிரமாகக் கோரிய சுஷ்மா சுவராஜ், சாமியார் ஆசாராம் பாலியல் புகாரில் சிக்கியபோது அமைதி காத்தார். சொல்லப்போனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாகவே ஆசாராமுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள். டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் நெருக்கியபோது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார் சுஷ்மா.
அந்த ‘ஒற்றுமை’
1992-ல் சூரத்தில் நடந்த மதக் கலவரம் தொடங்கி குஜராத் கலவரம், கிறிஸ்துவர்களுக்கு எதிரான கந்தமால் கலவரம், மிகச் சமீபத்தில் நடந்த முசாபர்நகர் கலவரம் எனப் பல கலவரங்களில் இந்துத்வ சக்திகள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தரவுகளோடு எடுத்து வைக்கிறார்கள் பிரஃபுல் பித்வாய், ஹர்ஷ் மந்தர் போன்ற அறிவுஜீவிகள்.
1992-ல் நடந்த சூரத் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக ஏவப்பட்ட சொல்ல முடியாத வன்முறைகளின் பின்னணியில் மோடி இருந்ததாகச் சொல்கிறார் பிரஃபுல் பித்வாய். சரியாக 10 ஆண்டுகள் கழித்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் எண்ணற்ற இஸ்லாமியப் பெண்கள் குரூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்கள். அப்போது மோடி குஜராத் முதல்வர். 2007-2008-ல் கந்தமாலில் நடந்த கிறிஸ்துவர்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத் கலவரங்களைப் பலவிதங்களில் ஒத்திருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் ஹர்ஷ் மந்தர்.
2013-ல் முசாபர்நகரில் நடந்த கலவரத்திலும் அந்த ‘ஒற்றுமை' தெரிந்தது. கலவரம் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மோடியின் நம்பிக்கைக்குரிய செயலர் அமித் ஷா அங்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
யதேச்சையானது அல்ல
மோடியை வளர்ச்சியின் நாயகனாகவும் குஜராத்தை வளர்ச்சியின் வடிவமாகவும் முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகள், அங்கு பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டாமல்/அது பற்றிப் பேசாமல் இருப்பது யதேச்சையானது அல்ல.
தேசிய அளவில் பாலின விகிதம் தட்டுத் தடுமாறி 933-லிருந்து 940-க்கு உயர்ந்துகொண்டிருந்த 2001-2011 காலகட்டத்தில் குஜராத்தில் அது 918-லிருந்து
915-க்குக் குறைந்திருந்ததாகத் தரவுகள் சொல்கின்றன. பள்ளிகளிலும் இதே நிலைதான். தேசிய அளவில், 100 ஆண் குழந்தைகளுக்கு 94 பெண் குழந்தைகள் அடிப்படை மற்றும் இரண்டாம் நிலைப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். குஜராத்தில், இந்த எண்ணிக்கை அடிப்படைக் கல்வியில் 88 பெண்கள், இரண்டாம் நிலைப் பள்ளியில் 84 என்று இருக்கிறது.
தேசிய அளவில் முறைசார்ந்த வேலையில் 19.9 சதவீதம் பெண்கள் இருப்பதாக மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகள் சொல்கின்றன. குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவே இருந்திருக்கிறது.
இவை எதையும் சரிப் படுத்தாமல், கலாச்சாரத்தின் வேர் பெண்ணின் உடலில் இல்லை என்கிற தெளிவு இல்லாமல், வளர்ச்சி என்பது பெண்களையும் உள்ளடக்கியது என்கிற எண்ணம் இல்லாமல் வளர்ச்சி என்று எதைப் பற்றிப் பேசுகிறார்கள் பா.ஜ.க-வினர்?
வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று, பாலின சமத்துவம் என்பதைப் பல நாடுகள் உணர்ந்துள்ளதாகச் சொல்கிறார் ஐ.நா. சபையின் முன்னாள் செயலர் கோஃபி அன்னான். அதைச் சாத்தியப்படுத்தாத வரையில் இந்தியாவை வளர்ந்த நாடுகளில் சேர்க்க முனையும் பா.ஜ.க-வின் ‘கனவும்' சாத்தியமற்றதாகவே இருக்கும்.

No comments:

Post a Comment