வாழ்க்கையில் இலக்கியத்திற்கு ஸ்தானம் என்ன? இதற்கு இரண்டுவிதமான பதில்கள் இருக்கின்றன. இரண்டும் பாதி உண்மைகள். இலக்கியம் ஒரு மகத்தான பொழுதுபோக்கு, மோகனமான கனவு என்பது ஒரு கொள்கை. வாழ்க்கையின் இரகசியத்தையறிந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கோருவது இலக்கியம் என்பது மற்றொரு கட்சி.
இலக்கியம் மனிதனது மோகனமான கனவு, ஆனால் பயன்றற கனவு என்று கொண்டு விடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய விழிப்பும் மக்களிடையே பிறக்கிற. பிரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய ‘உதய கன்னியை’ முதல் முதலாக வரவேற்பவன் கவிஞன்தான். அவனது தரிசனம், மக்களிடையே ஓர் புதிய சமுதாயத்தைச் சிருஷ்டித்து விடுகிறது.
ஆனால் இதைத் தர்க்கத்தின் அந்தம்வரை சென்று ஆராய்ந்தால், வெறும் பரிகசிப்பிற்குரிய கேலிக்கூத்தாகிறது. ஏன் எனில், இந்தக் கொள்கைக்குப் புறம்பான உன்னத இலக்கியங்கள் இருந்து, அந்தத் தர்க்க வாதத்தைச் சிதறடிக்கிறது. தர்மத்தின் உயர்ச்சிக்காகத்தான் இலக்கியம் என்றால், ரோஜா புஷ்பத்தின் அழகு, அதிலிருந்து அத்தர் எடுக்கும் லாபத்தைப் பொருத்திருக்கிறது என்று கொள்ளவேண்டும்.
கீட்ஸின் ‘என்டிமியன்’ என்ற காவியம் எந்தத் தர்ம சாஸ்திரத்தைத் தூக்கிவைக்க இருக்கிறது? அதன் ஒருவரியின் முன்பு, உலகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடும் பெர்னாட்ஷாவின் நாடகங்கள் பூராவும் நிற்கமுடியுமா?
இலக்கியம் என்பது “நாடிய பொருளைக் கூட்டுவிக்கும்” சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்ராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு; உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி.
இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன், நுணுக்கத்துடன் பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலேயே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதம்தான் இலக்கியம்.
அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக இருக்கலாம்; வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம்; அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. அந்தச் சலனத்தின் பிரதிமையே இலக்கியம்.
கம்பராமாயணம் ஒரு மோகனமான கனவு. இலட்சியத்தின் தரிசனம். அது ஒரு புதிய சமுதாயத்தை எழுப்பியது. ஆனால் கம்பராமாயணத்தின் மேதை, அதன் சமுதாய சிருஷ்டி சக்தியைத்தான் பொறுத்து இருக்கிறது என்று நினைக்க வேண்டுமானால் அது தர்க்க ஆதாரமாகப் பொழுதுபோக்குச் சம்பாஷணைக்குதவும் பேச்சு. கம்பராமாயணத்தின் மேதையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறிக்கொண்டிருக்க முடியும்.
மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள், சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்ணத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில், வாழ்க்கை ரகசியங்களில் அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறிவிட முடியாது.
நெப்போலியன் ஒரு தடவை, “ஹோமரின் கவிதையை வைத்துக்கொண்டு, பாரீஸ் நகரை எழுப்பி விடுவேன்” என்று கூறினானாம். அதில் உண்மை இருக்கிறது. இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையைக் கீழே இழுக்கும் பாறாங்கல்லுகள். இந்த உணர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம்; உண்மையே இலக்கியத்தின் ரகசியம்.
No comments:
Post a Comment