கோடையின் கொடுமை பற்றிப் புலம்பிக்கொண்டேயிருப்பவர்களுக்கு, அப்பருவத்தில் தோன்றும் உன்னத அம்சங்கள் கண்ணில் படுவதில்லை. சுவையான மாம்பழமும் நுங்கும் வருவது கோடையில்தான். சித்திரை மாத நிலவு தோன்றி ஜொலிப்பதும் கோடையில்தான். மல்லிகையின் மலர்வு உச்சத்தை அடைவதும் சரக்கொன்றை மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்து, ஒரு பெரிய பொன்னிறப் பூச்செண்டு போலப் பூத்துக் குலுங்குவதும் இந்தக் காலத்தில்தான்.
அண்மையில் பந்திப்பூர், முதுமலை காட்டினூடே பயணித்தபோது, அந்த வறண்ட கபில நிற நில விரிவில் ஆங்காங்கே தன்னந்தனியாகக் கொன்றை மரங்கள், மஞ்சள் வண்ணத்தை அள்ளித் தெளித்த அரூப ஓவியங்கள் போல மிளிர்ந்துகொண்டிருந்தன. இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே முண்டந்துறை காடு வரை நாடு முழுவதும் பரவியுள்ள கொன்றை மரம் வேம்பு, புங்கை போல நம் நாட்டுத் தாவரம்தான். மற்ற உள்ளூர் மரங்கள் போலவே இதுவும் நமது அன்றாட வாழ்க்கையிலும் நாட்டுப்புறவியலிலும் தொன்மங்களிலும் இடம்பெற்றுள்ளது.
சிவன் தனது தலைமுடியில் கொன்றை மலரைச் சூடியிருப்பார். ‘மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே…’ என்ற வரிகள் இதை உணர்த்தும். முதுமலைக் காட்டில் ஒரு கொன்றை மரத்தடியில் சிறியதொரு கோயில் போல நடுகல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருவர் லிங்க பூஜை செய்வது புடைப்புச் சிற்பமாகச் சித்தரிக்கப்பட்டிருந்த்து.
இம்மரத்தை நகரங்களிலும் காண முடியும். பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் சில வீடுகளில் கொன்றையை நட்டிருக்கின்றார்கள். வீடு கட்டத் தொடங்கும்பொழுதே இந்த மரக்கன்றுகளை நட்டுவிட வேண்டும். அது நம் புறவுலகின் எழிலைப் பன்மடங்கு கூட்டக்கூடும்.
காலனி ஆட்சிக் காலத்தில் நமது பல பாரம்பரியங்கள் ஒரங்கட்டப்பட்டபோது, நம்மூர் மரங்களை மறந்து வெளிநாட்டு மரங்களைச் சாலையோர மரங்களாகத் தேர்ந்தெடுத்துவிட்டோம். வாகை மரத்தை மறந்து விட்டோம். ரோமாபுரி மன்னர்கள் போரில் வெற்றிக்கு அடையாளமாக ஒலிவ இலைவளையம் சூட்டிக்கொண்டது போல, நமது மன்னர்கள் வாகை மலரைச் சூடினார்கள் என்றறிகின்றோம். இன்றளவும் ‘வாகை சூடினான்’ என்ற சொற்றொடர் புழக்கத்தில் இருக்கின்றது.
இம்மர நாற்றங்கால்களை வளர்க்க விதைகளைக் கொடுத்த என் நண்பர் ஒருவர், அவை கெட்டியான மேல்தோலால் மூடப்பட்டிருப்பதால், 24 மணி நேரம் ஊறவைத்த பின்னர்தான் ஊன்ற வேண்டும் என்றார். காட்டில் இம்மரத்தின் இனிப்பான பழங்களை நரி, காட்டுப்பன்றி, குரங்கு போன்ற காட்டுயிர்கள் உண்டு, எச்சத்துடன் தரையில் போடும் விதைகளே நன்றாக முளைக்கின்றன. பல தாவரங்களின் விதைகள் ஒரு காட்டுயிரின் உணவுப்பாதை வழியே சென்றால்தான் முளைக்க முடியும். இயற்கையின் வியப்பூட்டும் நுண்ணிய பிணைப்புகள் பலவற்றில் இதுவும் ஒன்று.
இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில், அதிலும் சிறப்பாகச் சுமத்ராவில், காட்டில் வாழும் புனுகுப் பூனை காபி பழத்தை இரையாகக் கொள்கின்றது. அதன் எச்சத்தில் வரும் காப்பிக் கொட்டை காட்டில் சேகரிக்கப்பட்டு உலகிலேயே சிறந்தது என்று கிலோ 700 டாலர்வரை விற்கப்படுகின்றது. வணிக உலகில் இதற்குப் பெயர் புனுகு காபி (Civet coffee).
கொன்றை மரத்தின் பட்டை சாயத் தொழிலுக்கு மட்டுமன்றி, நாட்டு வைத்தியத்திலும், தோல் நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. முதிர்ந்த கொன்றை மரத்தைக்கொண்டுதான் உலக்கை செய்யப்படுகின்றது. காடுகள் பரந்திருந்த அந்தக் காலத்தில் கொன்றை மரங்களும் வேண்டுமளவு இருந்திருக்கும். இன்று உலக்கை ஒன்றைப் பார்க்க வேண்டுமானால், தட்சிணசித்ரா போன்ற அருங்காட்சியகத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
கட்டுரை ஆசிரியர், காட்டுயிர் எழுத்தாளர்.
No comments:
Post a Comment