யாரைப் பிடித்தால் வேலை கிடைக்கும் என்று எப்போதும் பேச்சு உண்டு நம் சமூகத்தில். “என் மாமாவோட ஒண்ணு விட்ட சித்தப்பா பையன் செக்ரடேரியட்ல இருக்காரு. அவரப் பிடிச்சா அந்த கம்பனியில சொல்லி வேலைக்கு ஏற்பாடு பண்ணலாம்!” என்பது போன்ற உரையாடல்கள் நம் வீடுகளில் சகஜம். சிபாரிசு பிடித்து வேலை வாங்குவது, பணம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற விஷயங்கள் நம் சமூகத்தின் ஆழ் மனதில் ஊறிப் போனவை. அவை எவ்வளவு சாத்தியம் என்று பார்க்கலாம்.
அரசாங்க வேலைதான் பிரதானம்; அதைத் தவிர மற்றவை அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தயவில் உள்ள சில பெரிய தனியார் நிறுவனங்கள் என்ற காலங்களில் இன்னார் சொன்னால் கண்டிப்பாகச் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது நிஜம். இதனால் தான் சிபாரிசு, லஞ்சம், செல் வாக்கு எனப் பயன்படுத்தி தகுதிகளையும் மீறிக்கூட
வேலை வாங்க முடிந்தது.
இன்று தனியார் நிறுவனங்கள் பெருகியதில் இவை பெரும் அளவிற்குக் குறைந்துவிட்டன. அமைச்சர் சொன்னால்கூடத் தகுதியும் இருக்கா என்று பார்த்து வேலை தருவதுதான் நடக்கிறது. அதுவும் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான்.
நான் மேலாளராக இருந்த போது ஒரு அமைச்சரின் பி.ஏ. தினம் பத்து பயோ டேட்டாக்கள் அனுப்புவார். ஒரு முறை போனில் சொன்னேன்: சார், உங்கள் சி.விக்களைப் பார்பதற்கே தனி பிரிவு அமைக் கணும் என்று. பிறகொரு சமயம் அந்த அமைச்சர் நேரில் பார்த்தபோது சொன்னார்: “தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை கொடுங்கள். போதும்!”
அரசாங்க அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு மேலாளருக்கும் இப்படி சிபாரிசு சி.வி.க்கள் வருவது இயற்கை. “ஏதாவது செய்யணும்னா கூட பாத்து பண்ணிக்கலாம் சார்!” என்பார்கள். ஆனால் நிறுவனங்கள் அதிகாரிகளை கவனிக்கப் பல வழிகள் உண்டு. மனித வளத்துறையில் சிபாரிசுகளை ஒப்புக்கொண்டால் அது மொத்த நிறுவனத்தையும் பலவீனப்படுத்திவிடும் என்பதால் அதைச் செய்ய மாட்டார்கள்.
நீங்கள் ஒரு கடை வைத்திருக்கிறீர்கள். கடைக்கு கணக்கு எழுத ஒரு பையன் தேவை. சிபாரிசின் பேரில் தகுதி இல்லாத பையனை எடுத்தால் என்னவாகும்? பணியாளர் திறமையும் நிறுவன லாபமும் நெருங்கிய தொடர்புகொண்டது என்று புரிந்துகொண்டு செயல்படுவதால் தனியார் கம்பனிகளில் சிபாரிசுகள் செல்லாது.
சரி, தெரிந்த ஆள் என்றால் முன்னுரிமைகள் கிடைக்காதா? கிடைக்கும். நேர்காணல்கள் வரை உட்கார வைக்கும். ஆனால் வேலை கிடைப்பது தகுதியின் அடிப்படையில்தான்.
எப்படியோ, ஆள் தெரிவது அப்பொழுது அவசியம்தானே என்கிறீர்களா? அவசியம்தான். ஆனால் நீங்கள் நினைக்கும் அரசியல்வாதியோ அரசாங்க அதிகாரியோ உதவுவதைவிட பலர் உங்களுக்கு உதவக் கூடும். யார் அவர்கள் என்று பார்க்கலாம்.
அதற்கு முன் ஒரு தகவல். வெற்றி பெற்ற மனிதர்களுக்கு அவர்களைப் பற்றி நல்ல வார்த்தை சொல்ல அவர்கள் சார்ந்த துறையில் 250 பேர்கள் இருப்பார்கள் என்று ஒரு கூற்று இருக்கிறது. Referral Network என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இவர் தகுதி இது என்று சான்றிதழ் அளிக்க, இவர் இவ்வளவு நம்பகத்தன்மை கொண்டவர் என்று சொல்ல, இவரை நான் பரிந்துரை செய்கிறேன் என்று சொல்ல ஆட்கள் தேவை. அவர்களும் உங்கள் உறவினராகவோ நண்பராகவோ இல்லாமல் தொழில் முறையில் தெரிந்தவராக இருத்தல் அவசியம் என்கிறார்கள்.
இந்த விதியை நான் அடிக்கடி மாணவர்களிடம் சொல்வேன். 250 பேர் கூட வேண்டாம். 25 பேர் இருக்கிறார்களா உங்களைப் பரிந்துரைக்க? இதைக் கேட்டவுடன், ‘எங்களுக்கு ஏது இத்தனை பேரை அறியும் வாய்ப்பு?’ என்று பதில் கேள்வி கேட்பார்கள்.
உங்களுக்கு வேலைக்குச் சிபாரிசு தரும் நபர்களை நீங்கள் சந்திப்பதே இல்லையா? அல்லது அவர்கள் வேலைக்குச் சிபாரிசு செய்வார்கள் என்று தெரியவில்லையா? நீங்களே யோசியுங்கள்.
விருந்தினர் உரை என்று நம் கல்வி நிலையங்களில் எத்தனை பெரிய மனிதர்களை சிறப்பு விருந்தினராக அழைத் திருக்கிறோம்? அவர்களை அறிய முயன்று அவர்கள் உறவுகளைப் பேணிப் பாதுகாத்தால் எத்தனை பேர் இந்நேரம் உங்கள் பரிந்துரை வட்டத்தில் இருந்திருப்பார்கள்? உங்கள் முதலீடுகள் என்ன?
கூட்டத்தில் எழுந்து, உங்கள் முகம் அவர் மனதில் பதியும் வண்ணம் சுவாரசியமாக ஒரு கேள்வி. பின் அவர் விசிட்டிங் கார்ட் வாங்கி வைத்துக்கொண்டு மின்னஞ்சலில் தொடர்பு. நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் உங்களைப் பற்றி அறிமுகம். பின்னர் அவர் பெயரை உங்கள் சி. வி.யில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற விண்ணப்பம்.
கல்யாணத்திற்குச் செல்கிறீர்கள். ஒரு பெரிய மனிதரைப் பார்க்கிறீர்கள். அவர் அருகில் உணவருந்த உட்கார்ந்து அவர் துறை பற்றிக் கேளுங்கள். அவர் அறிவுரை உங்களுக்குப் பயன்படும் என்று சொல்லுங்கள். அவரின் நட்பு வட்டத்தில் உங்களுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்று விசாரியுங்கள். சில நாட்கள் கழித்து மறக்காமல் நன்றி தெரிவித்து எழுதுங்கள்.
பைசா செலவில்லாமல் உங்கள் வட்டத்தைப் பெருக் கலாம். சங்கிலித் தொடர்பாக இந்த வட்டம் பெருகும்.
“வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்!”
என்ற கவிதை வரிகள் நிஜம். பத்து விரல்கள் விசைப் பலகையைத் தட்டினால் வலைதளங்கள் உங்களுக்கு வாய்ப்புகள் தரும் மனிதர்களை அறிமுகம் செய்து வைக்கும்!
அந்த எம்.பி.ஏ. மாணவர் ஒரு நிதி நிறுவனத்தில் சேர்ந்தார். தன் தனித் திறமையால் பல பெரிய கமபனிகளின் நிர்வாக இயக்குனர்களைத் தன் வட்டத்தில் வளர்த்துக்கொண்டார். மனிலாவில் தனியார் வங்கியில் வேலை பார்த்த அனுபவம் இந்தியாவில் என்னெவெல்லாம் செய்ய முடியும் என்று புரிய வைத்தது.
1996 அந்தத் தனியார் வங்கியில் சேரும் இவர் இந்திய வங்கித்துறையையே புரட்டிப் போடும் நடவடிக்கைகளை எடுக்கிறார். பல முக்கிய தொழில் அதிபர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குடும்பத்தின் பாகப் பிரிவினையைத் திறம்பட செய்கிறார். இந்தியாவின் மிகப் பிரபலமான ஐ.டி. நிறுவன கம்பனியின் நான் எக்சுகியூடிவ் சேர்மன் ஆகிறார். இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் என ஒரு பட்டியல் இட்டால் அனைவரும் இவர் வட்டத்தில் இருப்பார்கள்.
அவர் வளர்த்த நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. மக்கள் செல்வாக்கு பெற்ற அந்த மனிதர் கே.வி. காமத்!
gemba.karthikeyan@gmail.com
No comments:
Post a Comment