செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று (புதன்கிழமை) மேலும் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியது.
பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உள்ளதா? என்பதை அறிய பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியா சார்பாக செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள்யான்' விண்கலம் கடந்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையுடன் விண்ணில் பயணித்துக் கொண்டிருந்த மங்கள்யான் இன்று (09.04.14) காலை இந்திய நேரப்படி 9.50 மணிக்கு ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது.
பூமிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையேயான தொலைவின் பாதி தூரமான 38 மில்லியன் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்து சென்றது மங்கள்யான். இதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை மங்கள்யான் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வானியல் நிகழ்வு!
இந்தச் சாதனை அரங்கேறியுள்ள அதேவேளையில், மற்றொரு வானியல் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் 8 கோள்களும் எப்போதாவது பூமிக்கும் சூரியனுக்கும் எதிர் திசையில் அமைவதுண்டு.
அதேபோன்ற நிகழ்வுதான் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய் கிரகம் பூமிக்கு எதிர்திசையில் தென்படவுள்ளது.
இதனை கிழக்கு வானத்தில் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் தொலைநோக்கி வழியாகப் பார்க்கும்போது அதன் இரண்டு துணைக்கோள்களும், அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களும் தெளிவாகப் புலப்படும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment